ADDED : ஜூலை 12, 2022 12:17 PM

கே.கமலம், சிவகாசி.
*விரதமிருக்க வயது வரம்பு உண்டா...
16 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் விரதம் இருக்கலாம். கர்ப்பிணி, நோயாளிகளுக்கு இது பொருந்தாது.
எம்.கிருபாஸ்ரீ, நாகர்கோவில்.
*விசேஷ வீட்டில் திருஷ்டிக்காக கட்டிய பூசணிக்காயை எத்தனை நாளில் உடைக்கலாம்?
அழுகும் முன் ஓரிரு நாளில் உடைப்பது நல்லது. முற்றிய காயாக இருந்தால் சிலநாள் தாங்கும்.
எம்.சாந்தா, திருவள்ளூர்.
*சர்ப்ப தோஷத்தால் திருமணம் தாமதமானால் என்ன செய்யலாம்?
ஞாயிறன்று ராகு காலம் (மாலை 4:30 - 6:00 மணி) அல்லது செவ்வாயன்று மதியம் 3:00 - மாலை 4:30 மணிக்குள் துர்கைக்கு விளக்கேற்றுங்கள்.
எம்.விஜயா, மதுரை.
*செடியிலிருந்து கீழே விழுந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?
பயன்படுத்தக் கூடாது. செடியில் இருந்து பறித்த பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பவழமல்லிக்கு மட்டும் இது விதிவிலக்கு.
டி.விஸ்வநாதன், விழுப்புரம்.
*'சர்வசாதகம்' என்பதன் பொருள் என்ன?
கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை அமைத்தல், சுவாமி சிலைக்கு மருந்து சாத்துதல், கலசங்களை சரிபார்த்தல், அபிேஷகம், ஆராதனை என எல்லாம் முறையாக நடக்க வேண்டும். அப்போது அர்ச்சகர்கள் யாகத்தில் அமர்ந்திருப்பது அவசியம் என்பதால் மேற்படி விஷயங்களை அவர்களின் பிரதிநிதியாக சிவாச்சாரியார் அல்லது பட்டாசாரியார்கள் நடத்துவர். இவர்களையே 'சர்வசாதகம் (எல்லாவிதத்திலும் உதவுதல்) என்பர்.
எம்.சாய்பிரியா, புதுடில்லி.
*ஸ்ரீருத்ரம், காயத்ரி மந்திரங்களைப் பெண்கள் சொல்லலாமா?
சொல்லக் கூடாது. பூணுாலை அணிந்து காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மந்திரங்களை ஜபிக்கலாம். திருத்தாண்டகம், அபிராமி அந்தாதி, கோளறு பதிகங்களை பெண்கள் பாடலாம்.
சி.ரகு, குற்றாலம்.
*நிம்மதியுடன் வாழ விரும்பும் எனக்கு வழிகாட்டுங்கள்.
பிறர் அந்தரங்கத்தில் தலையிடுவது, மற்றவர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவது, தற்பெருமை பேசுவது, தாழ்வு மனப்பான்மையால் வருந்துவது போன்ற தீயபண்புகளை விட்டொழியுங்கள். கடவுள் அளித்த வரமாக கருதி வாழ்க்கையை நடத்துங்கள். நிம்மதிக்கு குறைவிருக்காது.
எம்.வந்தனா, திருப்பூர்
*கருவறைக்கு பின்புறம் சிலர் தியானம் செய்கிறார்களே சரியா...
புனிதம் மிக்க கோயிலில் நாம் விரும்பிய இடத்தில் தியானம் செய்யலாம். பெரிய கோயில்களில் இதற்கு தனி மண்டபம் இருக்கும். எல்லா கோயில்களிலும் இதற்கு இடம் ஒதுக்கினால் நல்லது.
கே.ஆனந்த், பெங்களூரு
*குடும்பம், வேலை என தினமும் ஓடுகிறோமே...ஆன்மிகத்தில் ஈடுபடுவது எப்படி?
அன்றாட பணிக்கு நேரம் ஒதுக்குகிறோம் அல்லவா... அது போல் தான் ஆன்மிகமும், இது புரிந்தால் நேரம் கிடைத்து விடும்.
