ADDED : மார் 30, 2012 10:00 AM

** புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன?
எம்.மனோகரன், திருத்தணி,
இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், 'டிவி' போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.
* சுவாமிக்கு சாத்திய மாலையை வாகனத்தின் முன் கட்டிக் கொள்ளலாமா?
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்
சுவாமிக்கு சாத்திய மாலைகள் பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன. இவை காலில் படும்படியாக எங்கும் விழக்கூடாது. வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும். அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன. இது பாவச் செயல். செய்யக்கூடாது.
* சிவலிங்க வழிபாட்டை வீட்டிலேயே செய்வது சரியா?
சு.லக்குமண சுவாமி, மதுரை
என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.
* பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன?
கே.சாந்தினி, திருப்பூர்
காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும். இவற்றைச் சரியாக செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.
