
** செய்யும் தொழிலில் முன்னேற்றம் பெற எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?
ஜெ.விஜயலட்சுமி, மதுரை
செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து பயபக்தியோடு செய்வதே முதல்வழிபாடு. தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, நேர்மை முதலியன தாரக மந்திரங்கள். உறுதுணையாக இறையருள் வேண்டி எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம்.
வீட்டில் செல்வவளம் பெருக எந்த மந்திரம் சொல்ல வேண்டும்?
ஆர்.சரவணன், கம்பம்
மகாலட்சுமி படம் வைத்து காலையும், மாலையும் விளக்கேற்றி மலர் சாத்தி வழிபடவேண்டும். பொழுது விடிந்ததும், மாலை விளக்கேற்றும் வேளையிலும் தூங்கக்கூடாது. கீழ்க்கண்ட மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி வழிபடுங்கள்.
''விஷ்ணு பத்னீம் க்ஷமாம் தேவீம் மாதவீம் மாதவப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய ஸகீம் தேவீம் நமாம் யச்யுத வல்லபாம்''
* கோயில் சேலையை ஏலத்தில் எடுத்து உடுத்துவது சரியா?
எம்.ரேணுகா, புதுச்சேரி
கோயில் பிரசாதங்களை வாங்கி உபயோகிக்கிறோம். அதுபோல் அம்மனுக்கு Œாத்திய சேலையையும் ஏலத்தில் எடுத்து உபயோகிக்கலாம். கோயில் பணிகளுக்கு நிதியாகக் கொடுத்து வாங்கி உடுத்துவதால் தவறு ஒன்றுமில்லை.
* மலையேறும்போது ஒவ்வொரு படிக்கட்டிலும் கற்பூரம் ஏற்றி வழிபடுவது சரியா?
ஆர்.செல்வக்குமார், கோவை
சரியல்ல. அப்படியெல்லாம் வழக்கில் எதுவும் கிடையாது. நமக்குப் பின்னால் வருபவர்கள் கால்களைச் சுட்டுக் கொள்வார்கள். படிகளை தெய்வமாக மதிப்பவர்கள் அதன்மீது சூடம் ஏற்றாமல் தொட்டு வணங்கியவாறு செல்வதே சிறந்தது. தூய்மையும் பாதிக்கப்படாது.
அபிஷேகம் நடக்கும்போது சுவாமியை வலம் வரலாமா?
சுபஸ்ரீ, சென்னை
அபிஷேகம், நைவேத்யம் போன்றவை நடக்கும்போது திரையிட்டிருப்பார்கள். இது போன்ற சமயங்களில் வலம் வருவது கூடாது.
குழந்தைகள் மனதில் பக்தியை வளர்ப்பது எப்படி?
எஸ்.முருகேசன், ராஜபாளையம்
நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றவர்களின் கதைகளை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எளிமையாகச் சொல்ல வேண்டும். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களை கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். வீட்டில் பூஜை செய்யும் பொழுது குழந்தைகளை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். கடவுளை வழிபட்டால் நாமும் நன்றாகப் படித்து பெரிய மனிதராகலாம் என்பது போன்று அவர்களுக்குப் பிடித்த விஷயங்களாகச் சொல்லியும், பெரிய மனிதர்களின் வரலாற்றை உதாரணம் காட்டியும் வளர்க்க வேண்டும். முக்கியமாக கட்டாயப்படுத்தாமல் விட்டுப் பிடித்துப் பழக்க வேண்டும்.