
ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஏன்?
ஆர்.வி.என்.எஸ்.மணி, மதுரை
ராமர் வெற்றி பெற்றதை சீதைக்கு முதலில் தெரிவித்தவர் ஆஞ்சநேயர். இதனால் மகிழ்ந்த சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்த இலைகளை மாலையாக்கி அணிவித்தாள். அதன் அடிப்படையில் எண்ணிய செயல் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை அணிவிக்கும் வழக்கம் உண்டானது.
* சுப்ரபாதம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை காலை அல்லது மாலையில் தான் கேட்க வேண்டும் என்கிறார்களே உண்மைதானா?
என்.திருவேங்கடம், விருத்தாசலம்
சுப்ரபாதம் என்றால் 'இனிய காலைப் பொழுது'. பொழுது புலரும் நேரத்தில் குயில், கோழி போன்றவை கூவும். இனிய தென்றல் வீசும். வேதியர்கள் வேதம் ஓதுவார்கள். அடியவர்கள் துதிப்பாடல்களைப் பாடுவார்கள். இப்படிப்பட்ட இனிய சூழலில் இறைவன் பள்ளியறையிலிருந்து எழுந்தருளல் வேண்டும் என்ற பொருள்படும் படியாக சுப்ரபாதம் அமைந்துள்ளது. இதை விடியற்காலையில் கேட்க வேண்டும். கந்தசஷ்டி கவசம் எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம்.
** நம் மீது குற்றம் இல்லாத போது ஒருவர் சபித்தால் அதனால் பலன் ஏற்படுமா?
ரா. ராஜேஸ்வரி, பார்த்திபனூர்
பழுக்காத மரத்தில் கல்லெறிந்தால் யாருக்கு லாபம்? தவறு இல்லாத உங்கள் மீது சாபம் எப்படி சேரும்? தேவையில்லாமல் பயப்படாதீர்கள்.
* சூரியன் மறையும்போது மேற்கு நோக்கி வழிபடலாமா?
எஸ். சந்தானம், சென்னை
காலையில் சூரியன் உதிக்கும்போது கிழக்கு நோக்கியும், மதியம் உச்சியில் இருக்கும்போது வடக்கு நோக்கியும், மாலையில் மறையும்போது மேற்கு நோக்கியும் சந்தியாவந்தனம், அனுஷ்டானம் செய்வது நம் சம்பிரதாயம் தான்.
தீமையும் நன்மையும் பிறர் தர வாரா என்பது உண்மையா?
ஆர். கல்பனா, சிவகங்கை
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்னும் புறநானூற்றுத் தொடர் நூறு சதவீதம் உண்மையானது. போன பிறவியில் நாம் செய்த புண்ணிய, பாவத்தின் பலனே இன்ப துன்பமாக, நன்மை தீமையாக இப்போது நம்மை வந்தடைகிறது.
வேதத்தின் பழமை பற்றிச் சொல்லுங்கள்.
பழ. பாலசுந்தரம், அரசூர்
ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்பே, அதற்கான உணவாக தாய்ப்பாலைச் சுரக்கச் செய்வது இறைவன் கருணை. அதுபோல, இயற்கை வளங்களுடன் கூடிய இந்த உலகைப் படைக்கும் முன்பே பிறக்கப் போகும் உலக உயிர்களுக்கு நல்வழி காட்டும் நூல்களாக இறைவன் வேதங்களைக் கூறியுள்ளார். இதற்கு 'சப்த பிரபஞ்சம்' என்று பெயர். எல்லா யுகங்களுக்கும் பொதுவாக உள்ளது வேதங்கள்.
ஆயுள் ஹோமத்தை வீட்டிலேயே செய்யலாமா?
ஆர். விஜயலட்சுமி, திண்டுக்கல்
வீட்டில் செய்வது தான் விசேஷம். ஹோமப்புகை வீடு முழுதும் பரவி, கண்திருஷ்டி, செய்வினை போன்ற எல்லா தோஷங்களையும் போக்கி நன்மையை உண்டாக்கும்.