
** புறப்படும் போது அபசகுனம் கண்டால் பரிகாரம் உண்டா?
டி.டி.வரதராஜன், சென்னை
பலர் இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு மனம் பாதிக்கப்படுகிறார்கள். கெட்டது என்பதை அறிவுறுத்தும் நம் சாத்திரங்கள் அதற்குப் பரிகாரம் கூறாமல் இல்லை. முதலில் மனரீதியான பாதிப்பைப் போக்கவே பரிகாரம் கூறப்பட்டுள்ளன. இதற்கு இது பரிகாரம் என்று நம்பிக்கையுடன் செய்து விட்டு காரியத்தை தொடர்ந்தால் வெற்றி நமக்கு தான். பொதுவாகப் புறப்படும்போது, அபசகுனம் ஏற்பட்டால் சிறிது நேரம் உட்கார்ந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுச் செல்வதே பரிகாரம்.
* சுவஸ்திக் சின்னத்தின் சிறப்பு என்ன?
எம்.சுரேஷ்மாலி, கோவை
தெய்வசக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது சுவஸ்திக் சின்னம். எல்லா தெய்வங்களுக்கும் இது பொதுவானது. விநாயகர், மகாலட்சுமி ஆகிய இருவருக்கும் உரிய மங்கலச்சின்னமாக கருதப்படுகிறது.
பெண்கள் வெள்ளியன்று தாய் வீட்டிலிருந்து புறப்படக்கூடாது என்பது ஏன்?
பி.வெற்றிச்செல்வி, பல்லடம்
பெண்கள் பிறந்த வீட்டின் பொக்கிஷங்கள். பெண் குழந்தை பிறந்தால் தான் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என பெரியோர்கள் கூறுவார்கள். வெள்ளிக் கிழமையில் பிறருக்குப் பணம் கொடுப்பதை (அத்தியாவசிய தேவை தவிர்த்து) கூடச் சிலர் தவிர்த்து விடுவார்கள். பணத்தை விட மேலான ஐஸ்வர்யமாக விளங்கும் பெண்களை வெள்ளியன்று அனுப்பும் வழக்கம் இந்தக்
காரணத்தால் தான் இல்லை.
குளித்தவுடன் ஈரத்துடன் சூரியநமஸ்காரம் செய்யலாமா?
கே.பரமசிவன், உசிலம்பட்டி
நமது சம்பிராதயப்படி ஈரத்துணியுடன் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது.
* அர்ச்சனைக்கு தேங்காய், வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?
கு. சந்திரபாண்டி, கொடைக்கானல்
தேங்காயிலுள்ள மட்டை, நாரை <உறிக்கிறோம். ஓட்டை உடைக்கிறோம். உள்ளே இனிக்கும் பொருள் உள்ளது. அது போன்று ஆணவம்(அகந்தை), கன்மம்(முற்பிறவி பாவம்), மாயை(இப்பிறவியில் செய்யும் தவறுகள்) இவை மூன்றையும் நீக்கினால், இனிய இறைவனைக் காணலாம். வாழை மரத்தைச் சுற்றி பல கன்றுகள் வந்து கொண்டேயிருக்கும். வாழையடி வாழையாக தொடர்வது போல, நம் குலமும் வம்சமும் விருத்தியடையவும், எல்லாம் ஆண்டு அனுபவித்து முதிர்ந்த வயதில்(பழுத்தபழமான
பிறகு) இம்சை இல்லாமல் இறைவனின் திருவடியில் சேரவும் வாழைப்பழம் படைக்கிறோம். லட்சுமி கடாட்சத்திற்காக வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூல நைவேத்யம் செய்யப்படுகிறது.
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துவதன் நோக்கம் என்ன?
எல்.எஸ். ரத்னகுமார், புதுச்சேரி
மூஷிகாசுரனை சம்ஹாரம் செய்த விநாயகருக்கு கோபம் அடங்கவில்லை. அவரைச் சாந்தப்படுத்த நாரதரின் அறிவுரைப்படி தேவர்கள் அருகம்புல்லால் அர்ச்சித்தனர். சாந்தமடைந்த விநாயகர் தமது வழிபாட்டில் அருகம்புல்லை சிறப்பானதாக ஏற்றுக் கொண்டார்.