
** அம்மன் கோயில்களில் மாவிளக்கு ஏற்றுவது ஏன்?
அ.மீனாட்சி, மயிலாப்பூர்
நம்மையே விளக்காகவும், மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது. அம்மன் கோயில்களில் மட்டுமல்ல, அவரவர் குல தெய்வத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும்.
* மண் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடலாமா?
ப.சுப்ரமணியன், கடலூர்
சிலைகளை இரண்டு விதமாக வைத்துக் கொள்ளலாம். ஒன்று கருங்கல், உலோகம் போன்றவற்றால் நிரந்தரமாக வைத்துக் கொள்வது, மற்றொன்று மஞ்சள் பொடி, சந்தனம், மண், கோமயம் போன்றவற்றினால் திருவுருவம் செய்து வழிபட்ட பின் கரைத்து விடுவது. இதற்கு 'க்ஷணிக உருவம்' என்று பெயர். இப்படிச் செய்வதற்குக் காரணம், நிரந்தரமான சிலை வைத்து வழிபட எல்லாருக்கும் சாத்தியம் இல்லாதது என்பதால் தான்.
பெற்றோர் நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டால் பிள்ளைகளைப் பாதிக்குமா?
பா.தெய்வநாயகி, வெளிப்பட்டினம்
கண்டிப்பாக பாதிக்கும். முன்னோருக்குச் செய்யும் பிதுர்கடனின் பலன் நம் சந்ததியைக் காப்பாற்றும். சரிவர செய்யவில்லை என்றால் பாதிப்பை ஏற்படுத்தும்.
எருக்கஞ்செடியைவீட்டில் வளர்க்கலாமா?
கே.குமரேசன், விழுப்புரம்
எருக்கு, கள்ளியை வீட்டில் வளர்க்கக் கூடாது. நந்தியாவட்டை, செம்பருத்தி, மல்லிகை வளர்க்கலாம்.
கெட்ட கனவு வராதிருக்க பரிகாரம் சொல்லுங்கள்?
ஜெயந்தி, குனியமுத்தூர்
படுக்கப் போகும் முன் கடவுளை வணங்கி திருநீறு பூசிக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன் சிறிது நேரம் ஆன்மிகநூல்களைப் படியுங்கள். மனோ தைரியத்திற்கு கீழ்க்கண்ட மந்திரத்தை மூன்று முறை ஜபம் செய்யுங்கள்.
''சூலபாணே நமஸ்துப்யம் துஸ்வப்னம் துநிவாரய
நிவாரய மனக்லேசம் ஸுஸ்வப்னம் ப்ரதர்சய''
காயத்ரி மந்திரத்தை உரக்கச் சொல்லாமல் மனதிற்குள் சொல்லலாமா?
ஜெ.டி.மணிகண்டன், மதுரை
ஜபம் செய்வது என்றால் மனதிற்குள் சொல்வது தான். மந்திரத்தை உரக்கச் சொல்லக் கூடாது.