
**பொருள் புரியாமல் மந்திரம் ஜெபித்தால் உண்டாகும் பலன் என்ன?
ஜி.புவனேஸ்வரி, சென்னை
உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் சென்று சொல்கிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார். அதை வாங்கி சாப்பிடுகிறோம். நோயும் குணமடைகிறது. என்ன மருந்து எழுதியிருக்கிறார் என்பது டாக்டருக்கும், மருந்து கடைக்காரருக்கும் மட்டுமே புரியும். நமக்குப் புரிவதில்லை. அந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்றெல்லாம் நாம் ஆராய்வதில்லை. நோய் குணமடைகிறதா என்பது தான் முக்கியம். இதுபோலவே, மந்திரங்களையும் ஏழு வயதிலேயே உபதேசம் செய்து விட வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அந்த வயதில் புரியுமா? பொருளைப் புரிய வைக்க வேண்டும் என சாஸ்திரமும் கூறவில்லை. மந்திரத்தை மனதில் பதிய வைப்பது உபதேசம். அதை மனதிற்குள் சொல்வது ஜபம். எனவே, இது விஷயத்தில் மனம் முக்கிய இடம் பெறுகிறது. மந்திரம் என்பதன் பொருளும் இதையே குறிக்கிறது. மனனம்+ த்ராயதே= மந்திரம். 'மனதில் இறைவனை எண்ணி ஜபிப்பவர்களைக் காப்பதே' மந்திரம். 'மணி மந்திரம் ஒளஷதம்' என்பர். அதாவது, மந்திரம் என்பது மனதுக்கு சிறந்த மருந்து. இதன் பொருள் புரிந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
* சுவாமி இருக்கும் அறையை கருவறை என்பது ஏன்?
ஜி.காயத்ரி, செஞ்சி
நமக்கு அருள்புரிவதற்காக சிலையில் எழுந்தருளும் சுவாமியை அதாவது, தெய்வ சக்தியை முறையான பூஜை, ஜபம் இவற்றினால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முறையான மருத்துவம் இல்லையென்றால், கருச்சிதைவு ஏற்படுவது போல முறையான பூஜையில்லா விட்டால், தெய்வசக்தி குறைந்து விடும். குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற பழமொழியின் அடித்தளமே இது தான். பத்து மாதத்தில் குழந்தையானது கருப்பையில் இருந்து வெளிவந்து விடுகிறது. நமக்காக நாம் அழைத்ததன் பேரில், சிலையில் ஒளிவிடும் தெய்வ சக்தியானது எத்தனை ஆண்டுகள் ஆனாலும், வெளிப்பட்டு விடாமல் இருக்க நித்யபூஜை, உற்சவம், கும்பாபிஷேகம் போன்றவற்றினால், கருவைப் போல பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் நமக்காக இத்தனை காலம் இப்படித்தான் செய்து வந்திருக்கிறார்கள். நாமும் வருங்கால சந்ததியினருக்காக இதை பாதுகாக்க வேண்டும். கருப்பையும், கருவறையும் ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ஒன்று தான். கோயிலில் பூஜைகள்
சரிவர நடக்காவிட்டால், நாட்டில் என்னென்ன தீங்குகள் விளையும் என திருமூலர் திருமந்திரத்தில் பட்டியல் இடுகிறார். அதனால், பூஜை விஷயத்தில் அலட்சியம் செய்வது கூடாது.
* வீட்டில் எத்தனை தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது?
அ.முருகானந்தம், மதுரை
ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்காக இருந்தால் நல்லது. ஒரு முகம் கொண்ட அகல் விளக்காக இருந்தால் இரண்டு ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜையறையில் மயில் இறகு வைத்து வழிபடலாமா?
ஆர். தமிழங்கி, திருப்பூர்
விசிறியாகச் செய்து பூஜையின் முடிவில் சுவாமிக்கு விசிறி வீசி வழிபடலாம். சுவாமிக்குப் பின்புறம் அலங்காரமாகவும் வைக்கலாம்.