
* வேள்வி செய்யும்போது 'ஹவிர்பாகம்' என்று சொல்கிறார்களே. அதன் பொருள் என்ன?
கே.லலிதா, மடிப்பாக்கம்
யாகத்தீ வளர்த்து அதில் இடப்படும் நெய், சமித்துக்குச்சிகள், அன்னம் யாவுமே ஹவிர்பாகம் தான். 'ஹவிஸ்' என்ற சொல்லின் விரிவாக்கமே ஹவிர்பாகமாகி விட்டது. தேவர்களுக்காக செய்யும் யாகத்திற்கு இடும் பொருட்கள் ஹவிர் பாகம். பித்ருக்களுக்காக யாகம் செய்யப்பட்டால், அதை 'கவிஸ்' என்றும் 'கவிர்பாகம்' என்றும் குறிப்பிடுவர்.
* சிலர் எப்போதும் மந்திரங்களை முணுமுணுத்தபடி இருக்கிறார்களே! இது சரியான முறைதானா?
எஸ். கே.வி. கந்தன், மதுரை
திருவாவடுதுறை தலத்திற்கு திருஞானசம்பந்தர் அருளியுள்ள தேவாரத்தில்,
''இடரினும் தளரினும் எனது உருநோய் தொடரினும்''
''நனவினும் கனவினும் நம்பா உன்னை''
''உண்ணினும் பசியினும் உறங்கினும்''
உன் திருநாமத்தை மறவாது உச்சரித்து வழிபடுவேன் எனக் குறிப்பிடுகிறார். எப்போதும் இறைவனின் மந்திரங்களை அல்லது திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு தெய்வத்தின் துணை எப்போதும் உடனிருக்கும்.
** ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவதை சாத்திரம் அனுமதிக்கிறதா?
வி. ஹேமலதா, நெய்வேலி
சாத்திரங்கள் அனுமதிப்பதை மட்டுமல்ல, அனுமதிக்காத விஷயங்களையும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். எலுமிச்சை விளக்கு பற்றி சாத்திரம் ஏதும் கூறவில்லை. அனுபவ ரீதியாக நன்மை உண்டாவதால், இந்த வழிபாட்டைச் செய்கிறார்கள். ஆனால், இவ்வாறு விளக்கேற்றும் இடம் முழுவதும் எண்ணெய் பிசுக்காகி அசுத்தமாகி விடுகிறது என்பதை பக்தர்களும், கோயில் நிர்வாகங்களும் கண்டு கொண்டால் நல்லது.
சந்திராஷ்டம நாளில் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது பற்றி கூறுங்கள்.
எம். சுப்பையா, காரைக்குடி
ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமம். இது மொத்தம் 56 மணி நேரம். அதாவது இரண்டே கால் நாட்கள் நீடிக்கும். இதுபற்றி பயப்பட வேண்டாம். மாதத்திற்கு ஒருமுறை தான் இது வரும். இந்த சமயத்தில் மனதில் கோபத்தை உண்டாக்கும் சூழல் உண்டாகும். வீண் சண்டை, சச்சரவு ஏற்படும். செய்ய வேண்டியது விநாயகர் வழிபாடு. செய்யக் கூடாதது புதிய முயற்சி, சுபவிஷயம், விருந்து உபசரிப்பு ஆகியன. மவுனத்தைக் கடைபிடித்தால் பிரச்னை இன்னும் குறையும்.
சுபவிஷயத்தில் தடை நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்?
எம். தியாகராஜன், சிவகங்கை
பொதுவாக விநாயகரையும், திருமணம் போன்ற சுபவிஷயம் தடையின்றி நடக்க மதுரை மீனாட்சியம்மனையும் வழிபட வேண்டும்.
பஞ்சமியன்று வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றினால் நல்லது என்கிறார்கள். அதை எப்போது ஏற்றுவது நல்லது?
எஸ்.பாலசுப்பிரமணியன், திருப்பூர்
தினமும் விளக்கில் ஐந்துமுக தீபமாக ஏற்றுவது என்பது தான் வழக்கில் உள்ள ஒன்று. பஞ்சமிக்கு என்று விசேஷமாகச் சொல்லப்படவில்லை. தினமும் காலை, மாலை விளக்கேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும்.