
** பூர்வஜென்ம புண்ணியம் என்பதை எதை வைத்து கணிக்கிறார்கள்?
கே.விஜயலட்சுமி, விஜயாபுரம்
நாம் இன்று செய்கிற புண்ணியச் செயல்களே மறுபிறவியில் நமக்கு நன்மையைத் தரும். இன்றே ஒரு நற்செயலை செய்து விட்டு, நாளையே அதற்குரிய பலன் கிடைத்துவிடுமென எதிர்பார்க்க முடியாது. நேற்று அன்னதானம் செய்த ஒருவருக்கு இன்று ஒரு சோதனை வந்து விடக்கூடும். ''ஐயையோ! நேற்று தானே தானம் செய்தோம். இன்று சோதனை வந்துவிட்டதே'' என்று புலம்புவது சரியானதல்ல. இது கடந்த பிறவியில் செய்த செயலுக்கான தண்டனை. இப்பிறவி புண்ணியம் ஆண்டவனின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதற்குரிய நற்பலனாகிய வட்டி அடுத்த ஜென்மாவில் கிடைக்கும்.
* 'எல்லாமே முன்னரே எழுதப்பட்டு விட்டது. எதுவும் திரும்ப எழுதப்படுவதில்லை' என விதியைக் குறிப்பிடுவது சரியா?
பாலா சரவணன், ஆலந்தூர்
இது நூற்றுக்கு நூறு உண்மையே. ஆனால், இதை எழுதியவர் கடவுள் அல்ல. முற்பிறவியில், நாம் என்ன செய்தோமோ, அதுவே இப்பிறவியில் நமக்கு நடக்கிறது. ஆக, நம் விதியை நாம் தான் நிர்ணயித்துக் கொள்கிறோம். இதனால் தான், மகான்கள் 'நல்லதையே நினை, நல்லதையே செய்' என்கிறார்கள்.
பூஜையறையில் சுவாமிபடங்களை எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?
கே.எம்.ரமாதேவி, சென்னை
வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் பூஜையறை அமைக்க வேண்டும். சுவாமி படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும்.
நவக்கிரக குரு, தட்சிணாமூர்த்தி குரு இருவருக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிவியுங்கள்.
ஜெ. அருள்செல்வி, பண்ருட்டி
நவக்கிரகத்தில் உள்ள வியாழனை 'தேவகுரு' என்றும், தட்சிணாமூர்த்தியை 'லோககுரு' என்றும் அழைப்பர். இருவரையும் வியாழனன்று வழிபடுவது சிறப்பு. தேவகுருவுக்கு கொண்டைக்கடலை, மஞ்சள் பூக்கள் கொண்ட மாலை சாத்தியும், சிவ அம்சமான தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை, அணிவித்தும் வழிபடுவது நல்லது.
ராகு, கேது தோஷம் நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது?
கே.வேலுச்சாமி, தாராபுரம்
ராகு,கேது தோஷத்திற்கு காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பரிகாரம். ராகுகாலத்தில் துர்க்கை, காளி கோயிலில் வழிபாடு மேற்கொள்ளலாம். கேது தோஷ நிவர்த்திக்கு விநாயகரை வழிபடுவது நன்மையளிக்கும்.
* முடிகாணிக்கை கொடுப்பது எதற்காக?
ஆர்.கயல்விழி, வடுகப்பட்டி
மனிதனுக்கு அழகு தருவது முடி. எவ்வளவு அழகானவராக இருந்தாலும், முடி இல்லாவிட்டால் அழகு நிறைவடையாது. இந்த அழகு நிலையற்றது. நிஜமான அழகு என்பது மனதில் நினைக்கும் நல்ல எண்ணங்கள் தான். இந்த தத்துவத்தை புரிந்து கொள்ளவே முடி காணிக்கை கொடுக்கிறோம்.