
** பிராயச்சித்தம் செய்தால் மட்டுமே ஒருவர் செய்த பாவம் நீங்கி விடுமா?
கு.வளர்மதி, நெய்வேலி
அறியாமல் செய்த பாவத்திற்குத் தான் பிராயச்சித்தம் கூறப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் பிறர்நலன் கருதி செய்து விடும் தவறுகளுக்கும் இது பொருந்தும். இதனையே வள்ளுவரும், 'பொய்மையும் வாய்மையிடத்து' என்று குறிப்பிடுகிறார். தன் சுயநலனுக்காகத் தெரிந்தே செய்யும் பாவம் பிராயச்சித்தத்தால் நீங்கி விடாது. கடப்பாறையை விழுங்கி விட்டு இஞ்சி தின்றால் செரிமானமாகுமா?
வீட்டுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து வழியனுப்புவது ஏன்?
எஸ்.பாண்டியன், மதுராந்தகம்
சுமங்கலிப் பெண்கள் வீட்டுக்கு வந்தால் மகாலட்சுமியே வந்ததாகப் பொருள். லட்சுமியை வணங்கும் விதமாகவும், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகவும், சுமங்கலியின் ஆசி பெறவும் மஞ்சள் குங்குமம், ரவிக்கைத் துண்டு, வெற்றிலைப்பாக்கு முதலியன கொடுக்க வேண்டும்.
கொடி மரத்தை வணங்கிய பின் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா அல்லது கடைசியாகக் கொடி மரத்தை வணங்க வேண்டுமா?
டி.டி. கல்யாணி, சென்னை
முதலில் கொடிமரத்தை வணங்கிவிட்டு மூலஸ்தானம் சென்று சுவாமியை வணங்க வேண்டும். திரும்பி வரும்போதும் கொடி மரத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
* திருநீற்றை சிலர் வீட்டிலேயே தயாரிக்கிறார்களே. இது சரியா?
முத்து வீர சேதுபதி, அருப்புக்கோட்டை
திருநீற்றை வீட்டில் தயாரிப்பது தான் விசேஷம். கண்ட பொருட்களில் தயாராகும் விபூதியைப் பூசுவதால் நெற்றியே கருப்பாகி
விடுகிறது. நல்ல பசுஞ்சாணத்தில் திருநீறு தயாரிப்பவர்களை ஊக்குவித்து அந்தந்த பகுதியிலுள்ள கோயில்களுக்கு கொடுக்கவும் செய்யலாம்.
* குழந்தைகளுக்கு கண்ணாடி காண்பிக்க கூடாது என்பது ஏன்?
சு. சுந்தர்ராஜ், சென்னை
பிறந்த குழந்தையை போட்டோ எடுத்து பேஸ் புக்கில் போடும் இந்தக் காலத்தில் தங்கள் கேள்வி வேடிக்கை என்று சொல்வார்கள்.
உருவத்தை காட்டும் கண்ணாடியின் பிரதிபலிப்பால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகலாம் என்பதால் அப்படி சொல்லி வைத்தார்கள். கிராமங்களில், கண்ணாடி பார்க்கும் குழந்தை, தான் இங்கே இருக்க, ஏதோ ஒரு இடத்தில் தன் உருவம் இருப்பது போல் தெரிகிறதே என்ற அதிர்ச்சியில் பேசும் திறனை இழந்து விடும் என்று சொல்வார்கள். காரணமின்றி பெரியோர் எதையும் சொல்வதில்லை. இந்தக் காலத்தில் மொபைலில் படம் எடுக்கிறார்கள். இதன் கதிர்வீச்சு குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.