
** பக்திப் பாடல்களில் ஜகன்மாதாவான அம்பிகையை 'என்னடி அபிராமி' என்று பாடுவது சரிதானா?
அ. குமரகுருபரன், சென்னை
பக்தி அல்லது அன்பு மேலீட்டால் நம்மை விடப் பெரியவர்களையும் ஒருமையில் அழைக்கலாம். இம்முறை பல நூல்களிலும் காணப்படுகிறது. தேவார, திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றிலும் கூட கடவுளை ஒருமையில் குறிக்கும் முறையைக் காணலாம். தாய், தந்தை, மாமன், மாமி போன்ற நெருங்கிய உறவினர்களையும் 'நீ' என ஒருமையில் அழைக்கும் வழக்கம் இன்னும் உள்ளது. அடா, அடீ போன்றவை பக்தி இலக்கியங்களில் காணப்படாவிட்டாலும், பிற்காலப் புலவர்களால் கையாளப்பட்ட சொற்களாகி விட்டன. அன்பின் மிகுதியால் ஏற்படும் உரிமை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகத் தெரியாது. சிறு குழந்தைகள் மழலைச் சொற்களில் பெற்றவர்களை இது போல அழைத்தால் மகிழ்ச்சி தானே உண்டாகிறது. இது போன்று 'என்னடி அபிராமி' என்று அழைத்தால் ஜெகன் மாதாவான அம்பிகையும் மகிழத் தான் செய்வாள்.
* தீர்த்த யாத்திரையின் போது அங்கிருக்கும் உறவினர் வீடுகளில் தங்கலாமா? கூடாதா?
அ. கிருஷ்ண சாமி, அங்கேரிப்பாளையம்
தங்கக்கூடாது என்பது எதுவுமில்லையே! ஓட்டல்களில் தங்குவதைக் காட்டிலும் இது நல்லது தானே! புண்ணியம் உறவினருக்குப் போய் விடும் என்று பயப்படுகிறீர்களா? அப்படி எல்லாம் போய் விடாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் உறவும் வலுப்படும்.
* கருவறையின் மேலுள்ள கோபுரத்தை விமானம் என்று சொல்வது ஏன்?
யுவராஜ், பரமக்குடி
விமானம் என்ற சொல்லை வி+மானம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். அதாவது 'அளவு கடந்தது' என்று பொருள். கருவறையின் மேல் கூரையாக இருந்து அதிலுள்ள கலசத்தின் மூலம் தெய்வ சக்தியை உட்புகுத்தும் பேராற்றல் உடையதாக இருப்பதாலும், அளவு கடந்த மகிமையை உடையது என்பதாலும் விமானம் என குறிப்பிடுகிறோம். அளவு கடந்த உயரத்தில் செல்வதால் தான், 'ஏரோபிளேனையும்' விமானம் என்று சொல்கிறோம்.
குலதெய்வம் படத்தை வீட்டில் வைத்து அன்றாடம் பூஜிக்கலாமா?
கே. கீர்த்தனா மஞ்சு, திருப்பூர்
குலதெய்வ படத்தை தாராளமாக வீட்டில் வைத்து பூஜிக்கலாம். இதன் மூலம் மிகச் சிறந்த பலன் உண்டாகும்.
சந்தோஷி மாதா வழிபாடு பற்றிச் சொல்லுங்கள்
என். ஆனந்தி, விருதுநகர்
முதலில் இது தமிழர் வழக்கில் இல்லாத ஒன்று. பிறகு அனுபவ ரீதியாக பலன் கிடைக்கிறது என்ற அளவில், தற்போது நிறைய பேர் சந்தோஷி மாதா வழிபாடு செய்து வருகிறார்கள். இதற்கான புத்தகங்களும் உள்ளன. அது சம்பந்தமாகக் கூறப்படும் கதை நம்மிடம் வழக்கில் உள்ள நூல்களில் இல்லாததால் அதைச் செய்ய விரும்புபவர்கள் அதற்கான புத்தகம் கூறும் முறைப்படி செய்து கொள்ளலாம்.