
** மாதவிலக்கு சமயத்தில் வீட்டிலுள்ள மற்றவர்கள் விளக்கேற்றி வழிபடலாமா?
எஸ்.சாந்தி, கடலூர்
மாதவிலக்கு உண்டானவர்களுக்கு மட்டுமே தீட்டு. மற்றவர்கள் தாராளமாக விளக்கேற்றி வழிபடலாம். இன்னொரு விஷயம், இக்காலத்தில் சிலர் பெண்களுக்கு மாதவிலக்கு என்பது இயற்கையானது என்றும், இதனைத் தீட்டு என்று ஒதுக்கத் தேவையில்லை என்று ஏதோ காரணங்களைக் கூறி வருகிறார்கள். இது தவறானது. அறிவியல் ரீதியாகவும் இவர்கள் தனித்திருப்பதே நல்லது.
* கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்க பரிகாரம் சொல்லுங்கள்.
பி. வஞ்சியம்மாள், பொள்ளாச்சி
இதற்கென்ன பரிகாரம் வேண்டியிருக்கிறது? மனதளவில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்வது தான் தம்பதி ஒற்றுமைக்கான முதல் மந்திரம். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை தரிசிப்பது நன்மையளிக்கும்.
கண் திருஷ்டி நீங்க என்ன பரிகாரத்தை அல்லது கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம்?
என்.ரமேஷ் குமார், மேட்டுப்பாளையம்
சாம்பிராணி போடுதல், மிளகாய் சுற்றிப் போடுதல் போன்றவை கண் திருஷ்டி நீங்க எல்லா வீடுகளிலும் செய்து வருவது வழக்கில் உள்ளது. கோயில் வழிபாட்டைப் பொறுத்தவரை துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.
திருவிளக்கு பூஜையால் உண்டாகும் நன்மை பற்றிச் சொல்லுங்கள்.
கோவிந்தன் குட்டி, மதுரை
வீடும், நாடும் நலம் பெறவும், மக்களிடையே ஒற்றுமை வளரவும் திருவிளக்கு பூஜையைப் பெண்கள் செய்கின்றனர். திருவிளக்கு வழிபாடு தொடர்பான புத்தகங்களில் பூஜை முறை,பலன்களைத் தெரிந்து கொள்ளலாம்.
* 'இது என்ன கம்ப சூத்திரமா' என்று கேட்கிறார்களே. இதன் பொருள் என்ன?
எஸ்.கோவிந்தராஜன், மதுரை
கம்ப சித்திரம் என்பதே கம்ப சூத்திரமாக மாறி விட்டது. தமிழ் காப்பியங்களில் மிகவும் உயர்ந்தது கம்பராமாயணம். இதில் ஆன்மிகம், உலகியல், பகுத்தறிவு, இலக்கணம், இலக்கியம் என எல்லாம் உள்ளன. இதனை இயற்றியவர் கம்பர். பெரிய இலக்கிய சித்திரமாகிய ராமாயணத்தை 'கம்பசித்திரம்' என்று குறிப்பிட்டனர். யாராலும் சாதிக்க முடியாத அரும்பெரும் சாதனைக்கு உதாரணமாக கம்பசித்திரம் விளங்குகிறது.