
** மாலை நேரமான அந்திவேளையில் தூங்கக்கூடாது என்பது ஏன்?
வி.ராஜ ரத்தினம், மதுரை
சூரியன் உதய காலமான விடியற்காலையிலும், அஸ்தமன காலமான அந்திப் பொழுதிலும் எல்லா வீட்டுக்கும் மகாலட்சுமி வருவதாக ஐதீகம். இந்நேரத்தில் உடல், உள்ளத்தூய்மையுடன் விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சுபமான இந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தால் 'அக்கா' கடாட்சம் (திருமகளுக்கு மூத்தவள்) உண்டாக நேரிடும்.
* சுபநிகழ்ச்சி நடத்தும் சமயத்தில் நாதஸ்வரம் இசைப்பது கட்டாயமா?
கார்த்திகேயன், உளுந்தூர் பேட்டை
மங்கள இசை இல்லாமல் எப்படி சுபநிகழ்ச்சி நடத்த முடியும்? சுபநிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தெய்வீகச் சூழ்நிலையை உருவாக்க நாதஸ்வர இசை கண்டிப்பாக வேண்டும். மேலும், விழாவிற்கு வந்தவர்கள் அறியாமல் பேசக்கூடாத விஷயங்களைப் பேச நேரிடலாம். அது சுபநிகழ்ச்சி நடத்துபவர்களின் காதில் விழாமல் தடுக்கவும் இந்த இசை வழிவகை செய்கிறது.
விருப்பத்துடன் வாங்கிய விநாயகர் சிலையின் கை உடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து வீட்டில் வழிபடலாமா?
ஜெ.ரவி விக்னேஷ், திருப்பூர்
ஒன்றும் தவறு கிடையாது. மீண்டும் ஒட்ட வைத்துக் கொண்டு பூஜை செய்து வாருங்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் குறை நேர்ந்து விட்டால் அவர்களை ஒதுக்கி விட முடியுமா என்ன? அதற்குரிய மாற்றைச் செய்து சரி செய்து கொள்வதே நல்லது.
* காலையில் காணும் கனவிற்கு மட்டும் தான் பலன் உண்டா?
பி. சாய்மலர்விழி, சென்னை
அப்படித் தான் எல்லோரும் சொல்கிறார்கள். நல்ல கனவாக இருந்தால் நடக்க வேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டாத கனவு என்றால் அடியோடு மறந்து விடுங்கள்.
மந்திரமாவது நீறு என்கிறாரே சம்பந்தர்.. அந்த திருநீறின் மந்திர தன்மையை சொல்லுங்கள்.
ப.சங்கீதா, கம்பம்
விபூதி சிவபெருமானின் வடிவம். அவரது திருமேனியை விபூதியே அலங்கரிக்கிறது. அதுவே சிவம் என்பதால், சிவபெருமானுடைய மந்திர சக்தியும் அதனுள் இருக்கிறது என்று பொருள். 'துதிக்கப்படுவது நீறு' என்றும் சம்பந்தர் கூறியுள்ளார். 'துதி' என்றாலும் 'மந்திரம்' என்ற பொருள் வரும்.
கோயில் வழிபாட்டில் காலபைரவரைத் தான் கடைசியாக கும்பிட வேண்டுமா?
எம். தங்கம், ராஜபாளையம்
வரிசைக் கிரமப்படி எல்லா தெய்வங்களையும் வழிபடும் போதே பைரவரையும் வழிபடலாம். கோயில் பூஜை முறையில் அர்த்தஜாம பூஜையின் போது தான் கடைசியாக கால பைரவர் பூஜை சொல்லப்பட்டுள்ளது உண்மையே. என்றாலும் சாதாரண முறையில் வழிபாடு செய்வதற்கு இது பொருந்தாது.