
* மறு ஜென்மம் என்பது நம்பிக்கை சார்ந்ததா? அதற்கு நிரூபணம் இருக்கிறதா?
கி.அருணா, கோவை
நம்பிக்கை சார்ந்தது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த உலகமே நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாளை விழிப்போம் என்ற நம்பிக்கையில் தானே இரவு உறங்குகிறோம்? மறு ஜென்மமும் இப்படித்தான். இதற்கு நிரூபணம் சாஸ்திரங்கள் தான். ''எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்'' என்று மாணிக்கவாசகர் கூறுவதை விட வேறு நிரூபணம் தேவையா?
தும்மல் போடும் போது 'நூறு' என்று சொல்கிறார்களே! ஏன்?
அரிமளம் தளவாய் நாராயணசுவாமி, ஹுஸ்டன்
தும்மலிடும் போது நம் இருதயம் ஒரு விநாடி நின்று துடிக்கிறது. இருதய இயக்கம் நின்று போனால், உயிர் போய் விடும் என்பது நியதி. ஆனால், இந்த ஒரு விநாடி நம்மைக் காப்பவன் இறைவனே! இதுபோன்ற சிக்கல் இல்லாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்பதற்காகவே இப்படிசொல்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் தும்மலிடும் போது, தாய்மார்கள் இவ்வாறு சொல்வார்கள்.
** ஆண்டுதோறும் கோயிலில் திருக்கல்யாணம் நடத்துவது ஏன்?
அ.மல்லிகா, சென்னை
பெற்றோருக்கு மணிவிழா, சதாபிஷேகம் போன்றவை செய்து பார்த்து மகிழ்வது போல் இறைவனுக்கு திருக் கல்யாணத்தை ஒரு வழிபாடாகச் செய்து வருகிறோம். இதனால், இறைவன் மிக்க மகிழ்ச்சிஅடைந்து, ''லோக கல்யாணம் அருள்கிறார்'' என்பது சாஸ்திரம். அதாவது சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்வித்தால் பக்தர்களின் இல்லங்களில் நித்ய கல்யாணம் போல் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே, ஆண்டுக்கொரு முறையாவது செய்ய வேண்டும் என்பதால் உற்ஸவ காலங்களில் நிகழ்த்தப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு பக்தர்களின் வேண்டுதலுக்காக நித்ய கல்யாணமாக தினமும் சிறப்பாக நடக்கிறது.
திருமணத்தன்று வாசலில் கட்டிய வாழை மரம் இரண்டாக உடைந்து விட்டது. இதற்குப் பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள்.
கே.ஆர்.சாந்தி, செங்கல்பட்டு
பயப்படக்கூடிய அளவிற்கு இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யதார்த்தமான ஒன்று தான். மனதில் ஐயம் நீங்கிட முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
* கோபுரக் கலசங்களின் எண்ணிக்கை எதன் அடிப்படையில் வைக்கப்படுகிறது?
கே.மீனாட்சி, மதுரை
கோபுரத்தின் நடுவே தெரியும் கூண்டு அமைப்பிற்கு தளம் என்று பெயர். எத்தனை தளங்கள் கொண்டதாக கோபுரம் அமைகிறதோ அதற்கு ஏற்றாற்போல கலசங்களும் ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்ற கணக்கில் வைக்கப்படுகின்றன.