
ஜூலை 9, 2024 - (மாணிக்கவாசகர் குருபூஜை, - ஆனி மகம்)
* மதுரை மாவட்டம் மேலுாருக்கு அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர்.
* மதுரையை ஆட்சி செய்த அரிமர்த்தன பாண்டியனின் அவையின் தலைமை அமைச்சராக இருந்தவர்.
* குதிரைகள் வாங்கச் சென்ற போது திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்) குருநாதர் வடிவில் சிவனை சந்தித்து ஞானம் பெற்று துறவியாக அங்கேயே வாழ்ந்தார். இதன்பின் இவரை 'ஞானத்தின் திருவுரு' என அழைத்தனர்.
* அழுது அடியடைந்த அன்பன், தென்னவன் பிரமராயர் என பல பெயர்களில் இவரை அழைத்தனர்.
* இவர் இயற்றிய நுால் திருவாசகம், திருக்கோவையார். இதில் சிவபெருமான் கைப்பட எழுதிய நுால் திருவாசகம். இதில் 51 பகுதிகளில் 658 பாடல்கள் உள்ளன.
* இவர் பாடிய தலங்களில் மதுரை, திருப்பெருந்துறை, உத்தரகோசமங்கை, திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகியவை முக்கியமானவை.
* நரியை குதிரையாக்கியது, வைகை நதியை பெருக்கெடுக்க வைத்தது, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது போன்ற திருவிளையாடல்கள் மாணிக்கவாசகருக்காக நடந்தவை.
* திருவாசகம் கல் மனதையும் கரைக்கும். இதனால் 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பர்.
* பாவை பாடிய வாயால் கோவை பாடு; தில்லை பாதி திருவாசகம் பாதி - இவை திருவாசகம் பற்றிய பழமொழிகள்.
* எப்போதும் நல்லதைப் பேச வேண்டும் என்ற அடிப்படையில் திருவாசகத்தின் முதல் பகுதியான சிவபுராணத்தில், 'நமச்சிவாய வாழ்க; நாதன்தாள் வாழ்க' எனத் தொடங்கும் பாடல் உள்ளது. இது நமசிவாய பதிகத்திற்கு இணையானது.
* திருவாசகப் பாடல்களை ஒருவர் பாட, மற்றவர்கள் பின்தொடர்ந்து பாடுவதை 'திருவாசக முற்றோதல்' என்பர்.
* ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நுால் திருவாசகம்.
* திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை மார்கழியில் பாடுவர்.
* கடலுார் மாவட்டம் சிதம்பரம் கோயிலில் நடராஜர் சன்னதியில் ஆனி மகத்தன்று சிவபெருமானின் திருவடியில் மாணிக்கவாசகர் கலந்தார்.
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் எனும் தேன்.
* பிறவியில் இருந்து விடுபடவும், துன்பத்தில் இருந்து மீளவும் திருவாசகம் சிறந்த மருந்து.
* 'சிவானந்த தேன்' எனப்படும் திருவாசகத்தை எழுதினால் ஆயுள் கூடும்.
* திருவிளையாடல் புராணத்தில் பரஞ்ஜோதி முனிவர் பாடிய பாடலை மாணிக்கவாசகரின் குருபூஜை நாளில் பாடி மகிழ்வோம்.
எழுதரு மறைகள் தேறா இறைவனை
எல்லில் கங்குல்
பொழுதறு காலத்து என்றும்
பூசனை விடாது செய்து
தொழுத கை தலைமீது ஏறத் துளும்பு
கண்ணீருள் மூழ்கி
அழுதடி அடைந்த அன்பன்
அடியவர்க்கு அடிமை செய்வாம்.