
* லட்சுமி மாதுளம்பழத்தில் இருந்து தோன்றியதால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னி கர்ப்பை என்றும், ஜனகரின் மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் 'ஸ்ரீ' என்றும் போற்றப்படுகிறாள்.
* நெல்லிமரத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்தால் ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஆதிசங்கரருக்கு நெல்லிக்கனி தானம் செய்த பெண்ணுக்காக 'கனகதாரா ஸ்தோத்திரம்' பாடி லட்சுமி பொன்னும் பொருளும் கிடைக்கச் செய்தார்.
* மகாலட்சுமிக்கு உகந்தது நெய் தீபம். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். தீபாவளியன்று அதிகாலை வேளையில் மகாலட்சுமி நல்லெண்ணெய்யில் வாசம் செய்கிறாள்.
* மகாவிஷ்ணுவின் அருள் பெற 'புருஷகார பூதையான' மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும். கணப்பொழுதும் பிரியாமல் மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே சிறந்தது என்கிறார் நம்மாழ்வார்
* மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கைகள் இருக்கும். ஆனால் தனியாக சன்னதியில் நான்கு கைகள் கொண்டிருப்பாள். முன்னிரு கைகள் அபயம், வரத நிலையிலும், பின் இரண்டு கைகளில் தாமரைப்பூவும் ஏந்தி இருப்பாள்.
* லட்சுமியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம். வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம். மகாலட்சுமியின் கைகளில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வாமனபுராணம் கூறுகிறது. வில்வ மரத்தில் மகாலட்சுமி இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமையில் வில்வ இலைகளைப் பறிக்கக் கூடாது.