தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஸ்ரீசங்கர விஜயம் பகுதி - 3

ஸ்ரீசங்கர விஜயம் பகுதி - 3

ஸ்ரீசங்கர விஜயம் பகுதி - 3


ADDED : செப் 14, 2021 02:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2021 02:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகவற்பாவால் எழுதப்பட்ட ஜகத்குரு ஆதிசங்கரர் வரலாறு. இயற்றியவர் நா.நடராஜன். காஞ்சி மஹாபெரியவர் மடாதிபதியாக பொறுப்பேற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி ஜாம்ஷெட்பூரில் நடந்த பொன்விழாவில் 1957 மார்ச் 13 - 16ல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

பிரம்ம சூத்திர பாஷ்யம் இயற்றி

பிரவசனம் செய்து வந்தகாலையில்

விருத்த பண்டித வேடத்திலொருவர்

தோன்றினார் சங்கரர்முன் துளைத்தார் கேள்வியால்.

எட்டு தினங்களவர் திட்டமுடன் வாதிட்டார்

வெற்றி தோல்வி யெதும் சற்றும் காணாமல்.

வாதிட வந்தவர் தான் வியாச பகவானென

ஆதி சங்கரர் பாஷ்யமதை அவர் மிகப்பாராட்டி

பதினாறு வயதின்னும் தந்தேன் உனக்கெனவே

ஆசிர்வதித்து அகமகிழ்ந்து மறைந்தார்.

திக்விஜயம் செய்த திருமுனி சங்கரர்

திகழ் உயர் சீடர் சிலபேருடனே

தர்ம மார்க்கத்தை கனதீவிரமாய்

கையாண்டு வந்த மண்டன மிச்ரர்

மிளிர்ந்த பட்டணம் மாகிஷ்மதிக்கு

வந்து அவருடன் வாதுக்குச் சென்றார்.

சாக்ஷாத் சரஸ்வதி தேவியே யங்கு

ஸரஸ வாணி யெனும் சீர்ப்பெயர் கொண்டு

மண்டன மிச்ரரின் மனை விளக்கவளும்

ஈண்டிவர் வாதத்தைக் கண்டு களித்தனள்.

வேண்டினர் அவளை நியாயம் வழங்கி

வெற்றி தோல்வி விளித்துக் கூற.

தன்னிலையறிந்த தேவியவளும்

உன்னிப்பார்த்து ஒருவழி செய்தாள்.

மங்கையிரண்டு மாலைகள் கொணர்ந்து

அங்கவரிடம் அளித்துச் சொன்னாள்.

'மலர்மாலை தனையே மார்பிலணிந்து

புலவர் நீவிர் தொடங்குவீர் வாதம்

தோற்றவர் மாலை துவண்டு வதங்கும்

ஏற்போம் அதனை இறுதி முடிவாய்'

மதிவாணரிருவரும் மனமுவந்தங்கே,

விதிப்படி வாதம் வெகுநாள் நடத்தினார்

மண்டன மிச்ரரின் மாலை வாடியது

கண்டனள் சரஸ வாணியுமதனை

'எந்தன் கணவனுக்கு யானோ அடிமை

என்னையும் ஜெயிப்பது உம்முடைக்கடமை.

அதில் நீர் தவறினால் அவரை வென்றது

மதிக்கத்தகாதென'' மாதவள் உரைத்தாள்.

சம்மதம் என்று சங்கரர் சொல்ல

ஆரணங்கு வாதிக்க ஆயத்தமானாள்.

ஆச்சாரியார் சிறிதும் அறியாத் தர்மம்

கிரகஸ்தாசிரமம் என்பதைப் பற்றி

விரைவில் வெருவாய் வினவலானாள்.

அதைக் கேட்ட சங்கரர் அவ்வணங்கிடம்

ஆறு மாதத்தவணை அளிக்கக்கேட்டார்.

நேரிழையாளும் நேர்மையாகவே

பார்புகழ் சங்கரர்க்குப் பதிலளித்தாள் சரியென.

மத்திய தேசத்தின் மன்னன் அமருகன்

மண்ணினை நீக்கி விண்ணகம் சென்றான்

மன்னன் உடலில் தம்முயிர் செலுத்தி

தானிதுவரை அறியாதிருத்த

தருமம் மிக்க கிரகஸ்தாசிரமத்தை

ஏற்றிட நினைத்தார் எம்குரு சங்கரர்.

சிறியதொரு குகையில் சீடர்களிடையில்

தன்னுடல் விட்டு மன்னனுடல் புகுந்தார்.

மன்னன் எழுந்தான் மக்கள் மகிழ்ந்தனர்

பட்ட மகிஷியும் பரமானந்தமடைந்தாள்.

திட்டமுடன் நாடு செழித்தோங்கவே

மாதம் மும்மாரி மழை பொழிந்தது.

தேசமக்கள் திருவளங்கண்டார்

நேசம் மிக்ககொண்டு களிப்புற்று வாழ்ந்தனர்.

மகான் வரவினால் மாறிய நிலைமையதை

மன்னன் மனைவி மனதிலே யுணர்ந்தாள்.

எண்ணினாளவள் இருத்திக்கொள்ள

புனிதமகான் புகுந்த புதிய அரசனை.

விடுத்தாள் கட்டளை வேலைக்காரருக்கு

எடுத்துக்கொளுத்தவே யார்சடலம் கண்டாலும்.

கட்டளை மேற்கொண்ட காவலரவர்களும்

கைப்பற்றினர் குகையில் சங்கரர் சடலம்.

பதறினர் சீடர் விரைந்தனர் உடனே

பரமகுருவிடம் நடந்ததைச் சொல்ல.

அரசன் சங்கரர் அரண்மனைதனிலே

அரசியுடனமர்ந்து அவள்கைத் தாம்பூலம்

உவகையுடனே உண்டிட விருந்தார்

உடனங்கு வந்த உத்தமச் சீடர்கள்

சங்கேத பாஷையில் சப்தம் கொடுத்தனர்.

ஆங்கதைக்கேட்ட அமரர் சங்கரர்

அரசன் உடலை அக்கணம் நீத்தார்.

அலறினாள் அரசி அரசன் மாளவே

இங்கிது இவ்வாறு இருந்த காலையில்

சங்கரர் சடலத்தைக் கவர்ந்த காவலர்

சட்டெனச்சிதையில் இட்டனர் அதனை

திட்டமுடனதற்குத் தீயும் வைத்தனர்.

சுரங்கள் இரண்டும் கனிந்து எரிகையில்

சங்கரர் தன்னாவி தன்னுடல் புகுந்து

-தொடரும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us