ADDED : செப் 10, 2021 09:12 AM

அகவற்பாவால் எழுதப்பட்ட ஜகத்குரு ஆதிசங்கரர் வரலாறு. இயற்றியவர் நா.நடராஜன். காஞ்சி மஹாபெரியவர் மடாதிபதியாக பொறுப்பேற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி ஜாம்ெஷட்பூரில் நடந்த பொன்விழாவில் 1957 மார்ச் 13 - 16ல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
தக்ஷணம் காணாது தவியாய்த் தவித்தாள்
நெல்லிக்கனி யொன்று கையிற் கிடைத்ததை
மெல்லியள் அன்புடன் இட்டனள் பிைக்ஷயாய்,
அய்யன் கண்டார் அவள்தன் அன்பை
மெய்யான கருணை மிகக் கொண்டார் உடனே
அந்தணர் தம்பதியை ஆட்கொண்ட வறுமையை
அப்பொழுதே போக்கிட ஆர்வம் மிக்ககொண்டார்
மனதிலே நினைந்தார் மகாலெக்ஷ்மியை
கணமதே சொரிந்தார் 'கனகதாரா ஸ்தோத்திரம்',
தங்கக்கனிகள் பொழிந்தன அங்கே
பொங்கியது செல்வம் பொலிந்தது இல்லம்,
மகனுக்கோர் மணம் செய்வித்து மகிழ
மனதிற் கொண்டாள் மாதா ஆர்யாம்பிகை.
சங்கரரோ வெனில் சன்யாசம் ஏற்க
சந்தர்ப்பமொன்றை சடுதி கைக்கொண்டார்
தாயும் மகனும் தனி நீராடுகையில்
சேயின் காலையோர் முதலை பிடித்தது.
அலறினாள் தாயும் அழுது துடித்தாள்
பதறினாளங்கே பயம் மிக்ககொண்டு
'சன்யாச ஆச்ரமம் நானேற்க நீங்கள்
சம்மதம் தந்தால் சங்கடம் தீரும்
கவலைப்படாதீர் கண்ணீர் விடாதீர்
முதலையின் வாக்கிது முடிவைச் சொல்லுவீர்'.
எனவே பகர்ந்தார் இளைஞன் சங்கரர்.
'அப்பா மகனே அருமைச் செல்வமே.
இப்போ உனை நான் எப்படிப் பிரிவேன்
உன்னைத் தவிரவே உற்றதோர் மகனுண்டோ
தன்னந்தனியாய் தவித்திட விடாதே'
என்றிப்படி வருந்தினாள் ஏங்கியே தாயும்.
ஒன்றிய தாயின் சொற் கேட்டு சங்கரர்
'வருந்தாதீர் அம்மா வேறு மகன் இல்லையென
அருந்தவப்பயனெதுவும் அவலமேயாகாது
அன்னைக்குரிய அந்திய கருமங்களை
நேம முறைப்படி நிச்சயம் செய்வேன்
சன்மார்க்க வழியில் சன்யாசம் ஏற்க
சடுதியிலெனக்கு விடைதந்திடுவீர்'
எனவே புகல மனமிளகி த்தாயும்
புத்திரன் பிழைத்தால் போதுமென்றெண்ணி
சம்மதம் தந்தாள் சன்யாஸம் ஏற்க.
நர்மதை நதிக்கரையில் மலைக்குகையொன்றில்
நற்றவமிருந்தார் ஸ்ரீ கோவிந்தபகவத் பாதர்
நாடினாரவரை நலமிகு சங்கரர்
நற்குருவாகவே ஏற்கும் எண்ணத்துடன்
சற்குரு சங்கரர் சமீபம் சென்றார்
நிஷ்டையிலிருந்தார் இஷ்டகோவிந்தர்
விரைவாய் நர்மதையில் வந்த வெள்ளமது
விழுங்கியே சென்றது வெகுவாய் கிராமங்களை
வெள்ளத்தை யுடனே வேகமாய் கடத்தில்
உள்ளடக்கினார் உத்தமர் சங்கரர்.
அபாயம் நீங்கிய ஆனந்தக்கூத்தில்
ஆரவாரித்தனர் அக்கிராம வாசிகள்
நிஷ்டை கலைந்து நோக்கிய கோவிந்தர்
சிரேஷ்டன் சங்கரன் நிற்கக்கண்டார்
'உணர்ந்தாரவர் மகிமை உள்ளம் மகிழ்ந்தார்
உவகையுடனவரை ஏற்றார் சீடனாய்.
காசியில் தங்கியகாலையில் சங்கரர்
நேசமுடன் சீடருக்கு நித்தயமங்கே
ஆத்மஸ்வருப தத்துவமடங்கிய
உபதநிஷதங்களை உபதேசித்தார்.
கங்கையிலொருநாள் நீராடி வந்த
சங்கரரெதிரில் சண்டாளனொருவன்
நான்கு நாய்களுடன் நண்ணியே வந்தான்.
ஆங்கவர் அவனை விலகப்போ என
உரக்கக்கூறிட உரு சண்டாளன்
'உமதுபதேசம் அந்தோ பரிதாபம்!
சொல்லினிலின்றி செயலில் காணேன்
நல்லது நல்லதென' நகைத்தானவனே.
அவன் சொல் கேட்ட ஆச்சாரியர் சங்கரர்
அப்பொழுதேயங்கு ஐந்து ஸ்லோகங்களாம்
மனீஷா பஞ்சகமெனும் மகாமந்திரத்தால்
வேதாந்த தத்துவமதை விளங்கவைத்தார்.
அதுகேட்ட சண்டாளன் அக்கணம் மறைந்தான்
அனுக்கிரகத்தான் அவர் முன் காசி நாதனாய்.
ஆதி சங்கரரிடம் அதிபக்தி கொண்டவர்
வேதியர் ஸநந்தர் எனுமொரு சிரேஷ்டர்
அவர்தம் மகிமையை அயலார் அறிய
நிகழ்ந்ததோர் சம்பவம் நீவிரதைக்கேளீர்.
நீர்ப்பிரவாகம் நிறைந்த கங்கையின்
அக்கரை நின்ற அந்தணர் ஸநந்தரை
அழைத்தார் சங்கரர் தன்னிடம் வரவே
தயக்கம் கொள்ளா ஸநந்தர். ஆற்றில்
இறங்கி நடந்தார் இறைவன் ஆக்ஞைப்படி.
தாமரை யொவ்வொன்று அவர் தடம் தாங்கி
தாண்டி வரச்செய்தது தவ சிரேஷ்டரை.
அவர் குரு பக்தியை அகமகிழ்ந்து போற்றி
பத்மபாதர் எனப்பட்டம் சூட்டித்தன்
உத்தம சீடனாய் ஏற்றார் சங்கரர்.
-தொடரும்
