
வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
சர்ப்பத்துடன் இருக்கும் லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்துப் பூஜிக்கலாமா? அதன் விதிமுறைகள் யாவை? மஞ்சுளா, சென்னை
சர்ப்பம் இல்லாத சுவாமி படங்களே இருக்காது. விநாயகர் பாம்பைப் பூணூலாக அணிந்திருக்கிறார். முருகன் மயிலின் கீழ் சர்ப்பத்தை வைத்திருக்கிறார். எனவே, நாகம் என்பது தெய்வங்களின் ஆபரணம் போன்றது. மாரியம்மன் போன்ற தெய்வங்களின் முடி மீது படமெடுத்த நாகம் இருக்கும். சர்ப்பத்துடன் இருக்கும் தெய்வத்தை வழிபடலாமா என்று கேட்டால் எல்லா தெய்வத்திற்கும் இந்த கேள்வி பொருந்தி விடுகிறது. எனவே குழப்பிக் கொள்ளாமல் தாராளமாக வழிபடுங்கள். எல்லா தெய்வத்தையும் போன்றே லட்சுமி நரசிம்மருக்கான ஸ்தோத்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும்
* சங்கடஹர சதுர்த்தி பூஜையின் மகத்துவம் என்ன? கண்ணையா, திருப்பூர்
சதுர்த்தி விநாயகருக்குப் பிரியமான நாள்.'சதுர்த்தீ பூஜன ப்ரியாய நம', என்று அவரது சகஸ்ர நாமாவளியில் உள்ளது. வளர்பிறை சதுர்த்தியில் அவரை வழிபட்டால் நல்ல பலன்களை வழங்குவார். தேய்பிறை சதுர்த்தியில் வழிபட்டால் சங்கடங்களைப் போக்கு வார். 'ஹர' என்றால் போக்குதல். சங்கடங்களைப் போக்குவதால் சங்கடஹர சதுர்த்தி ஆயிற்று. தேய்பிறை சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி. தேவர்களுக்கு அசுரர்களால் இன்னல் ஏற்பட்ட போது சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து விநாயகரை தேவர்கள் வழிபட்டனர். அவர் மகிழ்ந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். கடன், நோய், வேலையின்மை, திருமணத்தடை, புத்திரப்பேறின்மை போன்ற எல்லா சங்கடங்களையும் போக்க வல்லது சங்கடஹர சதுர்த்தி பூஜை.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்துவது ஏன்? ஏ.காளிதாஸ், சிதம்பரம்
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வடை போன்றவை பிரியமானவை. வடை மாலை, வெற்றிலை மாலை, பேப்பர்களில் வேண்டுகோளை எழுதி அதை மாலையாகச் சாத்துதல் போன்ற பழக்கங்கள் இடையில் புகுத்தப்பட்டுள்ளன. இப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இன்று நிறைய தெய்வங்களுக்கு பல வகையான மாலைகள் சாத்தப்படுகின்றன. பக்தி என்ற நிலையில் மகிழ்ந்தாலும், சாஸ்திரம், மரபு என்ற நிலையில் இதற்கு காரணம் ஏதும் சொல்ல முடியவில்லை.
**விடியற்காலை வாசலில் கோலமிடுவதற்கு முன் விளக்கேற்ற வேண்டுமா? அல்லது விளக்கேற்றிய பிறகு கோலமிடுவதா? கோலத்தில் மஞ்சள் குங்குமம் இடலாமா? ஆர்.மகாலட்சுமி, மதுரை
வாசலில் சாணம் தெளித்துக் கோலமிடாமல் விளக்கேற்றுவது போன்று எதுவுமே செய்யக்கூடாது. காபி கூட சாப்பிடக்கூடாது. அரிசி மாவினால் மட்டுமே கோலம் போட வேண்டும். கோலம் வீட்டிற்கு மங்களத்தைத் தருகிறது. அரிசி மாவை எறும்பு, காகம், குருவிகள் தின்பதால் ஜீவகாருண்யம் என்னும் புண்ணியம் கிடைக்கிறது. மார்கழி மாதத்தில் அரிசி மாக்கோலமே யாரும் போடுவதில்லை. கலர் பொடிகளை வாங்கிப் போடுகிறார்கள். மஞ்சள் குங்குமம் போன்றவை பூஜைக்குகந்த பொருட்கள். இவற்றைக் காலில் படும்படி கோலத்தில் போடக்கூடாது. அழகுக்காகக் காவிப்பொடி இடுவது தான் தமிழர் மரபு. மார்கழிக் கோலமிடுவோர் அழகுக்காக கலர்ப்பொடி கோலமும், புண்ணியத்திற்காக அரிசிமாவு கோலமும் தனித்தனியாகப் போட வேண்டும்.