
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்று, பூதி
ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும், அடி
யார்கள் பதமே துணையது ...... என்று,நாளும்
ஏறுமயில் வாகன! குகா! சரவணா! எனது
ஈச! என மானம் உனதெ ...... என்று மோதும்
ஏழைகள் வியாகுலம் இது ஏது என வினாவில்
உனை
ஏவர் புகழ்வார், மறையும் ...... என்சொலாதோ?
நீறு படு மாழை பொரு மேனியவ! வேல! அணி
நீலமயில் வாக! உமை ...... தந்தவேளே!
நீசர்கள் தமோடு எனது தீவினை எலாம் மடிய
நீடு தனி வேல் விடும் ...... மடங்கல்வேலா!
சீறிவரு மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக
தேவர் துணைவா! சிகரி ...... அண்டகூடம்
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே! பிரம
தேவர் வரதா! முருக! ...... தம்பிரானே.
ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரம், வைராக்யம், புகழ் என்கிற ஆறு நற்குணங்களைக் குறிக்கும் திருமுகங்களைக் கொண்டவர் முருகன். அவரை வழிபடும் அடியார்களுக்கு அதனை அருளுவார். அதனால் அவரின் திருப் பெயர்களில் ஒன்றான ஆறுமுகம் என்பதை ஆறு முறை சொல்லுங்கள். சகலநலன்களை தரும் திருநீற்றை எடுத்து அன்புடன் நெற்றியிலும் உடம்பில் அணிந்து கொள்பவர்களுக்கு அவரின் திருவடியே நல்ல துணையாகும். மயில்வாகனா, குகா, ஈசா என நாள்தோறும் திருநாமம் சொல்லி வழிபடும் அடியார்களின் மானம் உம்முடையது. அவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் அது உன்னுடைய பொறுப்பு தான். நீயே துணை என இருக்கும் அவர்களது துன்பத்தை துடைத்து அருள்வீர் என பழநிமலையில் இருக்கும் தண்டபாணிக்கடவுளிடம் வேண்டுகிறார் அருணகிரிநாதர். இப்பாடலைப்பாடி முருகனின் அருளை பெறுவோம்.

