
நோய்களால் மனிதன் சிரமப்படுவதற்கு முன்வினையே காரணம். அதற்கான பரிகாரம் பற்றி சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
திருவாரூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பல மருத்துவர்களிடம் சிகிச்சை செய்தும் பிரச்னை தீரவில்லை. இறுதியாக மஹாபெரியவரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார்.தன் நிலையைச் சொல்லி அழுதார்.
'ஒருவர் செய்த பாவமோ அல்லது முன்னோர்கள் செய்த பாவமோ இப்படி நோயாக வந்து தாக்குகிறது' என்றார் மஹாபெரியவர். மகானின் முகத்தையே பரவசத்துடன் பார்த்தார் பக்தர்.
'நீ சோழநாட்டை (திருவாரூர்) சேர்ந்தவன். 'சோழ வளநாடு சோறுடைத்து' என்பார்கள். அங்கு யார் வீட்டுக்கு விருந்தினர் வந்தாலும் வயிறார உணவு அளிப்பார்கள். பசி என வந்தவரை திருப்பி அனுப்ப மாட்டார்கள்.
உன் முன்னோர்களில் யாராவது தர்மம் செய்யாமல் இருந்திருக்கலாம். திருமணம் போன்ற விசேஷங்களில் பசியோடு வந்த ஏழைகளை விரட்டி இருக்கலாம். இப்படிப்பட்ட ஒருவர் நம் வம்சத்தில் இருந்தால் கூட அது சந்ததியினரை தாக்கும். இதனால் குறிப்பிட்ட நபரின் பேரன், கொள்ளுப் பேரன் போன்றோரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்' என்றார் மஹாபெரியவர்.
முன்வினைப் பயனை எண்ணி அழுதார் பக்தர்.
மஹாபெரியவர் மீண்டும், 'குருவாயூரப்பன் கோயிலில் தினமும் அன்னதானம் நடக்கிறது. அதுபோல கோயில் ஒன்றில் அன்னதானம் கொடு. இன்னொன்றும் நீ செய்யணும். உன் சொந்த ஊரான திருவாரூர் தியாராஜ சுவாமி கோயிலில் முசுகுந்த அர்ச்சனை செய்வது விசேஷம். அப்போது நாலு மூடை அரிசியில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதத்தை நைவேத்யம் செய்யச் சொல்லி ஏழைகளுக்கு கொடு' என்றார்.
சுவாமிகளின் வழிகாட்டுதல்படி அன்னதானத்தை மனநிறைவுடன் செய்ய ஆரம்பித்தார் பக்தர். மகானின் ஆசியாலும், கடவுளின் அருளாலும் வயிற்றுவலி நீங்கியது. அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நன்றியைத் தெரிவிக்க மீண்டும் காஞ்சி மடத்திற்கு புறப்பட்டார். எப்படி தெரியுமா?
ஏராளமான மளிகை சாமான்கள், காய்கறி, பழங்கள், அரிசி மூடைகளை வாங்கிக் கொண்டு மஹாபெரியவருக்கு பிட்சாவந்தனம் செய்து ஆசி பெற்றார். தாராள மனமும், தர்ம சிந்தனையும் இருந்தால் நோய்கள் நம்மை நெருங்காது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
* பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது.
* சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள்.
* நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com