ADDED : ஜூன் 26, 2025 01:54 PM

ஸ்ரீஹயக்ரீவ பண்டி
ஹயக்ரீவ பெருமாளின் அருளைப் பெற்ற மகான் வாதிராஜ தீர்த்தர். இவர் மத்வாச்சாரியரால் நிர்மாணிக்கப்பட்ட சோடே மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். பிறக்கும் போது இவரை தங்க தாம்பாளத்தில் ஏந்தி ஸ்ரீமடத்தின் அபிஷேகப் பாலை குடித்து வளர்ந்தார். ஹயக்ரீவர் மீது பல பாடல்களை இயற்றினார்.
சோடே மடத்தின் பீடாதிபதியாக வாதிராஜர் இருந்த போது நடந்த சம்பவம் சுவையானது. இந்த மடத்தை ஒட்டியிருந்த தனியாருக்குச் சொந்தமான வயல் ஒன்றில் கடலை பயிரிடப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் கடலைச் செடிகளை வெள்ளைக் குதிரை ஒன்று சேதப்படுத்தி வந்தது. அதைக் கண்ட நிலத்தின் உரிமையாளர் துரத்தவே அக்குதிரை மடத்திற்குள் சென்று மறைந்தது.
மறுநாள் மடத்தின் பீடாதிபதியான வாதிராஜரைச் சந்தித்து புகார் தெரிவித்தார். மடத்திற்கு சொந்தமாக குதிரை ஏதும் இல்லையே எனத் தெரிவித்தார் வாதிராஜர். ஆனால் குதிரை சேதப்படுத்துவதும், துரத்தினால் மடத்திற்குள் செல்வதும் தொடர்கதையானது. மீண்டும் புகார் அளித்த போது, வாதிராஜரின் மனதில் பொறி தட்டியது. வெள்ளைக்குதிரை வடிவில் வந்தவர் ஹயக்ரீவ பெருமாளே என்ற உண்மையை உணர்ந்து இழப்பீடு தருவதாக வாதிராஜர் கூறினார்.
சேத மதிப்பைக் கணக்கிடச் சென்ற உரிமையாளர் உடனே மடத்திற்குள் ஓடி வந்து, “சுவாமி... பயிர்கள் சேதமான இடத்தில் தங்கத்தில் கடலைச் செடிகள் இருக்கின்றன. நடப்பதெல்லாம் பெருமாளின் திருவிளையாடல் என்பதை உணர்ந்தேன்” என்றார். நிலத்தை மடத்திற்கே ஒப்படைப்பதாகவும் கூறினார்.
அன்று முதல் வாதிராஜர் அந்த நிலத்தில் விளையும் கடலையுடன் வெல்லம், தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து பிரசாதம் தயாரித்தார். அதையே ஹயக்ரீவருக்கு நைவேத்யமாக படைக்கத் தொடங்கினார். இதற்கு 'ஹயக்ரீவ பண்டி' எனப் பெயர் ஏற்பட்டது. பிரசாரத்தை ஒரு தட்டில் வைத்து இரண்டு கைகளாலும் பிடித்தபடி தலைமீது வைத்துக் கொள்வார் வாதிராஜர். பின்புறமாக வெள்ளைக்குதிரை வடிவில் வரும் ஹயக்ரீவர்(குதிரை) தன் முன்னங்கால்களை அவரது தோள் மீது வைத்தபடி பிரசாதத்தை சாப்பிட்டு சிறிதளவு மீதம் வைத்து விட்டுச் செல்வார். வாதிராஜர் அதையே தினமும் உண்டு வந்தார். வாதிராஜர் மீது பொறாமை கொண்ட எதிரிகள் சிலர் அவரைக் கொல்ல பிரசாதத்தில் விஷத்தைக் கலந்தனர்.
அன்றைய தினம் பிரசாதத்தை மீதம் வைக்காமல் சாப்பிட்ட ஹயக்ரீவர் மயங்கி விழுந்தார். விஷயத்தைப் புரிந்து கொண்ட வாதிராஜர் 'வாதிராஜ குள்ளா' என்னும் கத்திரிக்காயை வேக வைத்து கொடுத்த பின் விஷம் முறிந்து எழுந்த குதிரை மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. மகானாக தொண்டுகள் பல செய்த வாதிராஜர், 1600ல் சோடே மடத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார். ஆண்டுதோறும் ஆவணி திருவோணத்தன்று வரும் ஹயக்ரீவ ஜெயந்தியன்று பண்டி பிரசாதத்தை இங்கு ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்கின்றனர்.
குதிரை முகத்தைக் கொண்ட மது, கைடபன் என்ற அசுரர்கள் இருந்தனர். அவர்களுக்கு படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிய அவர்கள், பாதாள உலகில் அதை மறைத்து வைத்தனர். இதனால் உயிர்களை படைக்கும் தொழில் நின்று போனது. கவலை அடைந்த பிரம்மா மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். குதிரை முக அசுரர்களுடன் போரிடுவதற்காக குதிரை முக வடிவிலேயே மகாவிஷ்ணு அவதரித்தார்.
ஆவணி திருவோணமும், பவுர்ணமியும் இணைந்த நாளில் அழகிய நீண்ட நாசி, பெரிய காதுகள், குதிரை முகம், ஒளி வீசும் பிடரிக் கேசத்துடன் தோன்றினார். அவருக்கு பூமி நெற்றியாகவும், கங்கை, சரஸ்வதி இரண்டும் புருவங்களாகவும், சந்திர சூரியர் இரண்டும் கண்களாகவும், சந்தியா தேவதைகள் நாசித் துவாரங்களாகவும், பித்ரு தேவதைகள் பற்களாகவும், பிரம்ம லோகம் இரண்டும் உதடுகளாகவும், காளராத்திரி கழுத்தாகவும் அமயை திவ்ய தேஜசுடன் காட்சியளித்தார் ஹயக்ரீவர். எப்போதும் துாய்மையான வெள்ளை நிறத்தில் இருக்கும் இவரே வேதம், சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைகள் என அனைத்திற்கும் ஆதாரமானவர்.
பாதாள லோகம் சென்று மது கைடப அசுரர்களை வதம் செய்தார். வேதங்களை மீட்டுக் கொண்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார். மகாவிஷ்ணு குதிரை முகமும், மனித உடலும் கொண்ட திருவுருவமே ' ஹயக்ரீவ மூர்த்தி' எனப்படுகிறது. அசுரர்களை வதம் செய்த பின்னரும் ஹயக்ரீவரின் கோபம் தணியாததால் மகாலட்சுமி அவரின் மடியில் அமர்ந்தார். இதனால் கோபம் தணிந்து சாந்தம் பெற்றார். இந்த கோலத்தையே லட்சுமி ஹயக்ரீவராக வழிபடுகிறோம். அசுரர்களால் தங்களின் புனிதத்தன்மை குறைந்து போனதாக வேதங்கள் வருந்தின. இதனால் தன் மூச்சுக் காற்றால் ஹயக்ரீவர் வேதங்களை புனிதமாக்கினார். வேதங்களை மீட்டதால் ஞானத்தின் வடிவமாகவும், மகாலட்சுமியுடன் காட்சி தருவதால் செல்வத்திற்கு அதிபதியாகவும் ஹயக்ரீவர் திகழ்கிறார்.
கடலுார் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாதப்பெருமாள் கோயிலில் ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள செட்டிபுண்ணியம் பெருமாள் கோயிலில் ஹயக்ரீவர் இருக்கிறார். ஐநுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இங்கு, குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் தாங்கியபடி யோக நிலையில் இருக்கிறார். புதுச்சேரி முத்தியால்பேட்டையிலும் ஹயக்ரீவர் கோயில் உள்ளது.
தேவையானவை
கடலைப்பருப்பு - 1 கப்
வெல்லம் - 1 கப்
துருவிய தேங்காய் - ½ கப்
ஏலக்காய் - 5
நெய் - 1 கரண்டி
செய்முறை: கடலைப் பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தை பொடியாக உடைத்து தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதித்து வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெல்லக் கரைசலை கடாயில் இட்டு கொதிக்க விட்டு, அதில் வேக வைத்த கடலைப்பருப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்து கிளறவும். ஒரு கரண்டி நெய்யைச் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். ஹயக்ரீவ பண்டி பிரசாதம் தயார். வீட்டில் இதை தயாரித்து பெருமாளுக்கு நைவேத்யம் செய்யலாம்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி
94435 20904