
குருபக்தி
அயோத்திக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் தவுமியர் என்னும் குருநாதர் இருந்தார். அவரது குருகுலத்தில் மாணவர்கள் பலர் கல்வி கற்றனர். அவர்களில் ஒருவன் உபமன்யு. தவுமியரின் குருகுலத்தில் மாணவர்களுக்கு கட்டுப்பாடு அதிகம். குருநாதரின் கட்டளையை அப்படியே கேட்க வேண்டும். அந்த கிராமத்தினர் பிட்சையாக அளிப்பதை மாணவர்களும், குருநாதரும் பங்கிட்டு உண்பது வழக்கம்.
ஒருநாள் குருநாதர் உபமன்யுவை அழைத்து, “நம் மன்னர் யாகம் நடத்த இருக்கிறார். அரண்மனையில் ஒரு வாரத்திற்கு தங்கி தேவையான உதவிகளைச் செய்” என்றார். உபமன்யு உற்சாகமுடன் புறப்பட்டான். யாகம் முடிந்து உபமன்யு குருகுலத்திற்கு வந்த போது, ''இத்தனை நாளாக நீ விரதமாக இருந்தாயா?” எனக் கேட்டார் குருநாதர்.
“இல்லை” என்றான் தயக்கமுடன்.
“அதுதான் உன்னைப் பார்த்தாலே தெரிகிறதே. பருமனாகி விட்டாய். அரண்மனையில் சுவையான சாப்பாட்டை வயிறு முட்ட சப்பிட்டாயா” என்றார்.
“இல்லை குருநாதா” என்றான். “நம் கிராமத்தினர் அளித்த உணவையே சாப்பிட்டேன். இதற்காக தினமும் அயோத்தியில் இருந்து பல மைல் துாரம் நடந்தே வந்தேன்” என்றான்.
“அப்படியா? உன்னை ஒருமுறை கூட பார்க்கவில்லையே” என்றார் தவுமியர்.
அப்போது தான் உபமன்யுவுக்கு செய்த தவறு புரிந்தது. கிராமத்தினர் பிட்சையிட்ட உணவை குருநாதரிடம் சமர்ப்பிக்கவில்லையே என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டான்.
அதன் பின் உணவைக் கொண்டு வந்து குருநாதரிடம் சமர்ப்பித்தான். அவனது மன உறுதியைச் சோதிக்க விரும்பிய குருநாதர், அவன் கொண்டு வரும் உணவை தனக்காக வாங்கிக் கொள்ளத் தொடங்கினார். ஆனால் உபமன்யு சோர்வடையவில்லை. இயல்பாக செயல்பட்டான். இதைக் கண்ட தவுமியர், “உணவை எல்லாம் நான் எடுத்துக் கொண்டாலும் சோர்வின்றி இருக்கிறாயே எப்படி” எனக் கேட்டார்.
“தினமும் கிராமத்தினரிடம் எனக்காக இரண்டாவது முறை உணவு பெறுகிறேன்” என்றான்.
முகம் சுளித்த குருநாதர், “ஊராரிடம் இரண்டாம் முறை செல்லக் கூடாது. நம்மைப் போல் எத்தனையோ பேரை அவர்கள் கவனிக்க வேண்டும். செய்த தவறுக்காக இன்று முதல் குருகுலத்தில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்” என்றார் குருநாதர்.
உபமன்யுவுக்குத் தண்டனை தொடர்ந்தது. தினமும் அவன் பெற்று வரும் உணவை குருநாதர் எடுத்துக் கொண்டார். இப்படி செய்தாலும் அவன் சோர்வு அடையவில்லை.
“உபமன்யு... மூன்று நாளாக சாப்பிடாமல் இருக்கிறாயே... உனக்கு பசிக்கவில்லையா?”
“இல்லை குருநாதா” என்றான்.
“அப்படியானால்.. என்ன செய்கிறாய்” எனக் கேட்டார்.
பயத்துடன், “குருநாதா... மேய்ச்சலுக்கு செல்லும் போது பசுவின் பாலைக் குடிக்கிறேன்” என்றான்.
“உணவே கதி என இருப்பதால் என் கட்டளைகளை மீறுகிறாய். மன வலிமையால் ஆசைகளை அடக்கமுடியாமல் தவிப்பவன் இழிநிலை அடைவான்” என குருநாதர் எச்சரித்தார்.
தலை குனிந்தபடி, “தங்களின் உத்தரவின்றி இனி சாப்பிட மாட்டேன்” என்றான்.
உபமன்யு அன்றும், மறுநாளும் சாப்பிடவே இல்லை. மூன்றாம் நாள் பசுக்களை மேய்த்த போது பசி பொறுக்காமல் எருக்க இலைகளை பறித்துத் தின்றான். பார்வை போனது. தடுமாறியபடி நடந்து ஒரு கிணற்றுக்குள் விழுந்தான். இருள் சூழ்ந்தது.
உபமன்யு குருகுலத்திற்கு திரும்பவில்லை. குருநாதர் மற்ற மாணவர்களிடம் விசாரித்த போது, “மாடு மேய்க்கப் போனான். மாடுகள் திரும்பி வந்தாலும் உபமன்யு மட்டும் காணவில்லை” என்றான் ஒரு மாணவன்.
“ஐயோ, இருட்டி விட்டதே'' என காட்டுக்குச் தேடிச் சென்றார் குருநாதர். “உபமன்யு... நீ எங்கே இருக்கிறாய்” என கத்தினார்.
“ இங்கே பள்ளத்தில் கிடக்கிறேன்” என குரல் கொடுத்தான். அங்கு சென்ற போது,
''குருநாதா... எருக்க இலைகளை தின்றதால் பார்வையை இழந்தேன்' என்றான் உபமன்யு.
''கவலைப்படாதே! மருத்துவர்களான அசுவினி தேவர்களை வழிபட்டால் உன் பார்வை கிடைக்கும்'' என்றார். ரிக் வேதத்தில் உள்ள துதியை பாடத் தொடங்கினான்.
அசுவினி தேவர்கள் தோன்றி, ''நாங்கள் உன் பிரார்த்தனையை கேட்டு மகிழ்ந்தோம். இந்த அப்பத்தை சாப்பிடு. பார்வை கிடைக்கும்'' என்றனர். ஆனால் உபமன்யு, ''என் குருநாதருக்கு சமர்ப்பிக்காமல் எதையும் சாப்பிட மாட்டேன்'' என மறுத்தான்.
''உன் குருபக்தியைக் கண்டு மகிழ்ந்தோம். இதோ... உன் கண்கள் ஒளியுடன் திகழட்டும்'' என ஆசியளித்து மறைந்தனர். அசுவினி தேவர்களின் அருளால் உபமன்யுக்கு பார்வை திரும்பியது. உபமன்யுவின் குருபக்தியை அறிந்த அனைவரும் அவனைக் கொண்டாடினர்.
--பக்தி தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com