
முடக்கு வாதத்தால் சிரமமா... சுகப்பிரசவம் ஆகுமா என்ற பயமா... நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் புதுக்கோட்டை மாவட்டம் குமரமலை முருகன்.
குமரமலையை அடுத்த குன்றக்குடிப் பட்டியைச் சேர்ந்தவர் சேதுபதி. முருக பக்தரான இவர் ஆண்டுதோறும் விரதம் இருந்து பாத யாத்திரையாக பழநிக்கு காவடி எடுத்து செல்வார். வயதான பிறகு அவரால் செல்ல முடியவில்லை.
'அப்பா... உன்னை பார்க்க வேண்டும் என மனம் தவிக்கிறது. ஆனால் உடம்பு ஒத்துழைக்கவில்லையே' என அழுதார். ஒருநாள் கனவில் தோன்றி, 'கவலைப்படாதே... உனக்காக குமரமலை குன்றில் சங்கம் செடிகள் சூழ்ந்த புதருக்குள் இருக்கிறேன். அந்த இடத்தில் விபூதிப்பை, ருத்ராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம்பழம் இருக்கும். அங்கு தரிசனம் செய்ய நாளை வா' என முருகப்பெருமான் அழைத்தார். மறுநாள் அங்கு சென்றபோது கனவில் கூறியபடி பொருட்கள் இருந்தன. அந்த இடத்தில் வேல் ஒன்றை நட்டு வைத்து வழிபட்டார் சேதுபதி. நாளடைவில் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 'பால தண்டாயுதபாணி' என சுவாமிக்கு பெயர் சூட்டினர்.
வாத நோயால் அவதிப்படுபவர்கள் குமரமலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். நோய் நீங்கியதும் மலைப்படிகளில், நேர்த்திக்கடனாக தங்களின் பாதங்களை பதிக்கின்றனர். ஐஸ்வர்யம் பெற மூலிகைச்சாறு, நெய், பால், விபூதியால் அபிஷேகம் செய்கின்றனர்.
இப்பகுதி பெண்களுக்கு வளைகாப்பு நடக்கும் போது இக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள வேலில் வளையல்கள் கட்டி சுகப்பிரசவம் நடக்க வேண்டுகின்றனர். பிறக்கும் குழந்தைக்கும் காதுகுத்து சடங்கை இங்கு நடத்துகின்றனர்.
சஷ்டி திதியன்று விரதம் இருந்து குமரமலை முருகனை தரிசித்தால் திருமண யோகம் உண்டாகும். குமரமலையின் மீது சங்கு வடிவ சுனை உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளது. இங்கிருந்தே அபிஷேகத்துக்கு தேவையான தீர்த்தம் எடுக்கப்படுகிறது. இதை பருகினால் நோயின்றி வாழும் பாக்கியம் கிடைக்கும்.
புதுக்கோட்டையில் இருந்து காரையூர் செல்லும் வழியில் 12 கி.மீ., சென்றால் குமரமலை விலக்கு. அங்கிருந்து சற்று துாரம் நடந்தால் மலை அடிவாரம். மலை மீது 45 படிகள் ஏறினால் கோயிலை அடையலாம். காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிக்குள் தரிசனம் செய்யலாம்.