ADDED : அக் 17, 2024 11:16 AM

போகட்டும் கண்ணனுக்கே
''தாத்தா... பஞ்சாயத்து தேர்தலில் நிக்க போறீங்களாமே. எனக்கு பற்று இல்லை; நான் துறவி போல வாழ்றேன்னு சொன்னீங்களே?'' எனக் கேட்டான் கந்தன். ''தேர்தலில் நிக்கிறது தப்பான விஷயமா?'' எனக் கேட்டார் தாத்தா.
''அரசியல்வாதிகள் பலரும் பணம் சம்பாதிக்க தானே தேர்தலில் நிக்கிறாங்க... நீங்க மட்டும் எப்படி நன்மை செய்வீங்க'' எனக் கேட்டான்
''நான் தேர்தலில் நிக்கறது பகவானோட விருப்பமா இருக்கு. என் மூலமா அவர் ஏதாவது நன்மை மக்களுக்கு செய்ய நினைக்கிறாருன்னு நினைக்கிறேன். அதுக்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார். கிருஷ்ணர் பகவத் கீதையில் 3வது அத்தியாயம் 27ம் ஸ்லோகத்தில்
ப்ரக்ருதே: க்ரியமாணாநி கு³ணை: கர்மாணி ஸர்வஸ²:|
அஹங்காரவிமூடா4த்மா கர்தாஹமிதி மந்யதே
||3-27||
இயற்கையின் குணங்களால் தொழில்கள் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், 'நான் செய்கிறேன்' என்று நினைக்கிறான்.
இதை திருவள்ளுவரும் 844ம் குறளில்
'வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.'
புல்லறிவு என்பது யாது என்றால் 'நான் அறிவாளி' என தன்னைத்தானே ஒருவன் உயர்வாக மதிப்பது ஆணவமே என்கிறார்.
எந்த ஒரு காரியம் செய்யும் போதும் அதை நான் செய்வதாக கருத மாட்டேன். எல்லாம் பகவானுடைய செயல் அவ்வளவு தான். ஏன்னா எப்போ இத நான் செய்யல. பகவான் தான் செய்கிறார் என்ற எண்ணம் இருந்தால் பாவச் செயல்களில் ஈடுபட மாட்டோம்.
பகவான் யாருக்காவது கெடுதல் நினைப்பாரா? நிச்சயமாக மாட்டார். புல்லறிவு அதாவது அற்ப புத்தி. தனக்கு எல்லாம் தெரியும் என்றும் நான் செய்தேன் என ஆணவம் எனக்கு இல்லாததாலும், இதை நான் செய்கிறேன் என்று எண்ணம் இல்லாததாலும் நான் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் எல்லாம் பகவானைச் சேரும். போற்றுவார் போற்றலும், துாற்றுவார் துாற்றலும் போகட்டும் கண்ணனுக்கே'' என்றார் தாத்தா.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554