ADDED : ஜூலை 31, 2025 03:06 PM

சுறுசுறுப்பாக வேலை செய்
சோம்பித் திரியேல் என்னும்
அவ்வையாரின் அறிவுரையையே 'ஓய்தல் ஒழி' என்கிறார் மகாகவி பாரதியார். சுறுசுறுப்பாக வேலை செய்வதே மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும்.
எமக்குத் தொழில் கவிதை
நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்
என்ற வரிகளில் இமைப் பொழுதும் சோராதிருத்தல் என கூறுவது 'ஓய்தல் ஒழி' என்பதைத் தான். சோம்பல் என்பது மனிதனின் பெரிய பலவீனம்; உடலோடு இருக்கும் நோய்.
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் மூன்று குணங்கள் பற்றிக் கூறுகிறார்.
சத்வ குணம் - உயர்ந்த பண்பு, ஒழுக்கம், நேர்மை
ரஜோ குணம் - அதிகாரம், அகங்காரம், நான் என்னும் இறுமாப்பு
தமோ குணம் - அதிக உணவு, உறக்கம், கவலை உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்கள் இந்த மூன்று குணத்திற்குமான உதாரணம் ராமாயண காவியத்தில் உள்ள சகோதரர்களான விபீஷணன், ராவணன், கும்பகர்ணன் ஆவார்கள்.
ஓய்வின்றி கடவுள் எப்போதும் விழித்துக் கொண்டிருப்பதால் தான் உலகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. தன் முட்டைகளை பார்வையாலேயே மீன் பாதுகாப்பது போல, அருட்பார்வையால் பக்தர்களை காக்கும் அம்பிகை மதுரையில் மீனாட்சி என்ற பெயரில் இருக்கிறாள்.
கடமை சரியாக செய்ய வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக கீதையின் ஸ்லோகம் ஒன்றில், 'மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. அதன் மூலம் நான் பெறுவதற்கோ, அடைவதற்கோ ஒன்றும் இல்லை. ஆனாலும் விதிக்கப்பட்ட கடமைகளில் எப்போதும் ஈடுபடுகிறேன்.
அதே போல இன்னொரு ஸ்லோகத்தில்,
'சோம்பல் இல்லாமல் பணி செய்வது என்பது பலனுக்காக
மட்டுமல்ல, உடலை வலிமையாக வைக்கவும் தான்' என்கிறார்.
சோம்பல் இன்மைக்கும், உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தர்ம சாஸ்திரங்கள் விளக்குகின்றன.
தெய்வப்புலவர் திருவள்ளுவரும் மடியின்மை (சோம்பல் இன்மை) என்ற அதிகாரத்தில்,
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
சோம்பலில் சிக்கி முயற்சி இல்லாதவராக வாழ்பவனுக்கு அவனது குடும்பப் பெருமை அழியும். அவனிடத்தில் குற்றங்கள் பெருகும்.
சிறு வயது முதல் என் தந்தை அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான். 'விருதாவாக(வீணாக) நேரத்தைப் போக்காதே - ஏதாவது புத்தகம் படி அல்லது வேலை செய்'
மகாகவி பாரதியார் இந்தக் கருத்தை 'வெள்ளிப்பனி மலையின் மீதுலவுவோம்' என்ற பாடலில் வலியுறுத்துகிறார்.
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம்
கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
என்கிறார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய இந்தப் பாடல் பிரபலமானது.
நல்ல பொழுதையெல்லாம்
துாங்கிக் கழித்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் -
சிலர்அல்லும் பகலும்
தெருக்கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோர்
எல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன் போல் குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டை விட்டார்
போர்ப் படைதனில் துாங்கியவன்
வெற்றி இழந்தான்
உயர்பள்ளியில் துாங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் துாங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில்
துாங்கியவன் புகழ் இழந்தான்
சில பொறுப்புள்ள மனிதரின் துாக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம்
துாங்குதப்பா
துாங்காதே தம்பி துாங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
'காட்டுக்கே ராஜா என்றாலும் சிங்கம், குகையில் அமர்ந்து வீணாக பொழுது போக்காமல், தனக்குரிய இரையை தேடிச் சென்றே உண்ணும். அது போல மனிதனும் சோம்பலை கைவிட்டு கடமைகளில் ஈடுபட வேண்டும்' என்கிறது வடமொழி ஸ்லோகம் ஒன்று.
மாவீரன் நெப்பொலியன் கடைசிப் போரில் தோல்வி அடையக் காரணம், அவன் ஓய்வெடுத்ததில் தவறான நேரக் கணிப்பு என்கிறது வரலாறு.
எந்த ஒரு மனிதனுக்கும் ஓய்வு தேவை. ஆனால் அது சோம்பேறித்தனமாக மாறி விடக் கூடாது. கால மாற்றம், நேரமின்மை, மாறி வரும் சமுதாயச் சூழல் என பல காரணங்களைச் சொன்னாலும் சோம்பல் இன்மையே உடலுக்கு நல்லது. நவீன கருவிகள், வசதிகள் எல்லாம் மனிதர்களை இயல்பான வாழ்வை விட்டு அப்புறப்படுத்தி வருகிறது.
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
என்ற பாடலில்,
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை
நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்து
உடலம் ஓய மாட்டோம்
எனப் பாடுகிறார். உழைக்காதவர்களை நிந்தனை செய்வதுடன், அவர்களுக்காக நாங்கள் பாடுபடவோ, உதவி செய்யவோ மாட்டோம் என்கிறார். உண்மைதானே! முறையான கல்வி, பணி ஏதும் இல்லாமல் 'இலவசத்தை' விரும்பி உழைப்பின்றி வாழ விரும்புவோரைத் தான், பாரதியார் இப்படி கோபமாகச் சாடுகிறார்.
ஓயுதல் என்ற வார்த்தையை பல பாடல்களில் பயன்படுத்துகிறார். நாடு முன்னேற, செழித்து வல்லரசாக, இந்தியர் ஒவ்வொருவரும் சோம்பல் இன்றி உழைத்து, தன் பங்களிப்பை தர வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.
ஆங்கிலேயர்களின் கொடுமைக்கு ஆளான போதிலும், நம் தேசத் தலைவர்கள் ஓய்வே எடுக்காமல் வீண் பொழுது போக்காமல் சிறைத் தண்டனை காலத்திலும் பகவத்கீதை, இலக்கியம், இலக்கண நுால்களுக்கு விளக்கவுரை, புதிய நுால்களை எழுதியுள்ளனர்.
குடும்பத்தை, சொத்துக்களை, உறவுகளை, பதவிகளை விட்டு விட்டு, விடுதலைக்காக போராடியவர்கள் வாங்கித் தந்த சுதந்திரத்தின் மதிப்பை இந்தியர்கள் அனைவரும் உணர வேண்டும். பணிபுரியாமல் இருப்பது என்பது தனிமனித, குடும்ப, சமுதாய, தேசத்தையே வீழ்ச்சி அடையச் செய்யும்.
ஒவ்வொரு கல்லும் உயர உயரத் தானே, கோபுரம் உருவாகும்.
சோம்பலை விட்டு உழைக்க வேண்டும் என பாரதியார் இதன் மூலம் எடுத்துரைக்கிறார்.
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010