sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கோயிலும் பிரசாதமும் - 10

/

கோயிலும் பிரசாதமும் - 10

கோயிலும் பிரசாதமும் - 10

கோயிலும் பிரசாதமும் - 10


ADDED : ஜூலை 31, 2025 03:08 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிள்ளையார்பட்டி மோதகம்

மோதகம் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் விநாயகர். அவருக்கு மோதகப்பிரியன் என்றும் பெயர் உண்டு. விநாயகர் சதுர்த்தி பூஜையின் போது மோதகத்தை நைவேத்யமாக படைப்பர்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் விநாயகருக்குரிய குடைவரைக் கோயிலாகும். எருக்காட்டூர். மருதங்குடி, திருவீங்கைகுடி, திருவீங்கைச்வரம், இராசநாராயணபுரம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு.

இங்கு மூலவராக கற்பக விநாயகர் ஆறடி உயரத்தில் வடக்கு நோக்கியபடி இரண்டு கைகளுடன் இருக்கிறார். இடது கையை கடி ஹஸ்தமாக இடுப்பில் வைத்தும், வலது கையில் மோதகம் வைத்த நிலையிலும் காட்சி தருகிறார். வலது தந்தம் நீண்டும், இடது தந்தம் குறுகியும் இருக்க, துதிக்கை வலமாக சுழித்தபடி உள்ளது. விநாயகரின் அடையாளமான அங்குசம், பாசம் இல்லை. அர்த்த பத்மாசன நிலையில் கால்கள் மடித்தபடி உள்ளன.

கற்பக விநாயகர் என்றால் வேண்டுவதை உடனடியாக தருபவர் எனப் பொருள். இவர் தேசி விநாயகப் பிள்ளையார், கற்பகப் பிள்ளையார், கற்பக மூர்த்தி, வரத கணபதி, கற்பகக் களிறு, கணேசன், கணேச புரேசன், மருதங்கூர் அரசு, மருதங்கூர் ஈசன் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. ஏகாட்டூர் கோன் என்ற சிற்பியால் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டதாக கல்வெட்டு விளக்குகிறது. இங்கு கார்த்தியாயினி, நாகலிங்கம், பசுபதீஸ்வரர், சிவகாமி சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தின் வடக்கில் நடராஜர் சபை உள்ளது.

முருகனுக்கு படைவீடுகள் இருப்பது போல விநாயகருக்கும் படைவீடுகள் உள்ளன. அதில் விநாயகருக்குரிய ஐந்தாம் படைவீடு பிள்ளையார்பட்டி. இது மட்டுமின்றி விநாயகருக்கு தேர்த்திருவிழா நடக்கும் சில கோயில்களில் இதுவும் ஒன்று. தல விருட்சம் ஆலமரம்.

விநாயக சதுர்த்தி இங்கு பத்து நாள் நடக்கும். அன்று உச்சிக்கால பூஜையின் போது 18 படி (முக்குறுணி) அரிசியில் செய்யப்பட்ட பெரிய கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்படும். 18 படி அரிசி, 2 படி எள், 6 படி கடலைப்பருப்பு, 50 தேங்காய், 1 படி நெய், 100 கிராம் ஏலக்காய், 40 கிலோ வெல்லத்தால் ஆன கொழுக்கட்டை செய்து நைவேத்யம் செய்வர். விழாவின் முடிவில் கற்பக விநாயகருக்கு 80 கிலோ சந்தனகாப்பு சாத்தப்படும்.

அன்றாட பூஜைகளான திருவனந்தல் காலை 6:00, காலசந்தி காலை 8:30, உச்சிக்காலம் காலை 11:30, சாயரட்சை மாலை 5:00, அர்த்த ஜாமம் இரவு 7:45 மணிக்கும் நடக்கும்.

காலை 6:00 - 1:00 மணி, மாலை 4:00 - 8:30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் இருந்து குன்றக்குடி செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி 8 கி.மீ., துாரத்தில் உள்ளது. காரைக்குடியில் இருந்து 16 கி.மீ.,

இனி மோதகம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையானவை

பச்சரிசி - 1 கப்

பாசிப் பருப்பு - கால் கப்

வெல்லம் - 1 கப்

தேங்காய்த் துருவல் - கால் கப்

ஏலக்காய்த் துாள் - 1 சிட்டிகை

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை ஒன்றாகச் சேர்த்து கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். நீரை அகற்றி சுத்தமான துணியில் ஒரு மணி நேரம் உலர்த்தவும். இரண்டும் உலர்ந்ததும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை இட்டு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதித்தபின், வெல்லப் பாகை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற, அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் அரிசி, பருப்பை சேர்த்து வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் வறுத்த மாவை சேர்த்து இடைவிடாமல் கிளறவும்.

மாவு வெந்து கெட்டியானதும், வடிகட்டிய வெல்லப்பாகை சேர்த்து கிளறவும். நன்றாக ஒன்று சேர்ந்ததும், ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறியதும் கையில் சிறிது நெய்யை தடவிக் கொண்டு உருண்டையாக உருட்டி இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். விநாயகருக்குப் பிடித்த மோதகம் தயார்.

-பிரசாதம் தொடரும்

ஆர்.வி.பதி






      Dinamalar
      Follow us