ADDED : அக் 07, 2025 01:04 PM

மருந்தைக் குறைத்திடு
உயிரெழுத்தின் வரிசையில் 'ஔ' என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவு. உதாரணம் கேட்டால் நம் நினைவுக்கு வருவது ஔவை மட்டும் தான். சற்று சிந்தித்தால் நமக்கு தெரிந்த ஒரே சொல் அது மட்டுமே. பெரும்பாலும் இந்த எழுத்து வழக்கத்தில் இல்லை. இதை உணர்ந்த பாரதியார் ஆத்திச்சூடியில் நமக்கு வழிகாட்டும் விதமாக, 'ஔடதம் குறை' என்கிறார்.
'ஔஷதம்' என்பதற்கு 'மருந்து' எனப் பொருள். ஓஷதி என்றால் மூலிகை, அதன் அடிப்படையில் பிறந்த சொல் ஔஷதம். இந்தச் சொல் ஔடதம் என தமிழ் படுத்தப்பட்டது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு அதிகமாக மருந்து சாப்பிட்டாலும் தீங்கு ஏற்படும். எனவே மருந்து உண்பதைக் குறைக்க வேண்டும் என்கிறார் பாரதியார்.
இன்று கடைத் தெருவுக்குப் போனால் எங்கும் மருந்துக் கடைகளை காண முடிகிறது. இன்று பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற இருப்பது பார்மசி கடைகளே. 1970களில் எங்கு பார்த்தாலும் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம், சிவப்பு முக்கோணம் என்ற குறியுடன் 'இரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம் - மூன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம்' என எழுதப்பட்டிருக்கும்.
இப்போதோ எங்கு பார்த்தாலும் செயற்கை கருத்தரிப்பு மையம் இருக்கிறது. சாதாரண காய்ச்சல், ஜலதோஷம், சளி இவையெல்லாம் ஓரிரு நாள் உடம்பில் இருந்து விட்டு தானாக மறைந்து விடும். அப்படித்தான் முந்தைய தலைமுறை இருந்தது. ஆனால் இப்போது சிறு தலைவலி என்றாலும் ஆஸ்பத்திரி, மாத்திரை, ஊசி என்றாகி விட்டது.
நிச்சயமாக மருத்துவம் வளர்ந்து இருக்கிறது. தீவிர மருத்துவத் தேவை, அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்றம் இவை எல்லாம் நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டியவை. அதற்கு மருந்து வேண்டும். மருத்துவமனை வேண்டும். ஆனால் பலசரக்கு சாமான், வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம் போல மருந்துகளும் மாதப் பட்டியலில் சேர்ந்து விட்டது தான் வருத்தமான விஷயம்.
தேவையற்ற பழக்கத்தாலும், வரைமுறையற்ற சாப்பாடு, துாக்கத்தாலும் நிறைய மாத்திரைகள் சாப்பிட்டார் கண்ணதாசன். நல்ல பழக்கங்களை வாழ்வில் பின்பற்றாமல் இருந்ததே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார். மேஜையின் மீது இவ்வளவு மாத்திரை இருக்கிறதே எனக்கேட்டதற்கு, 'இவை மாத்திரை அல்ல; எனக்கு மாற்று இரை' என்றார் கண்ணதாசன்.
இந்த மாத்திரைகளின் பெயர்கள் என்ன எனக் கேட்டதற்கு, 'Azithromycin, Clindamycin, Erythromycin, Chloromycin என வரிசையாக சொல்லிவிட்டு இதெல்லாம் நான் செய்த SIN (பாவம்)' என நகைச்சுவையாக கூறினார். இதற்கு காரணம் என்ன... ஏன் நோய் இப்படி மலிந்து கிடக்கிறது? நோய் வருவதற்கு உணவும் ஒரு காரணம்.
'நோய்களை குணப்படுத்த மட்டும் மருந்துகளை நம்பாமல் மனம், உடலைக் காக்க இயற்கை வழிகளையும், யோக முறைகளையும் பின்பற்ற வேண்டும்' என்கிறார் திருமூலர், 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றும் சொல்கிறார். அதாவது உடலைப் பேணுவது உயிரை வளர்ப்பதற்கு சமம் என்கிறார்.
எனவே, மருந்தை குறை எனச் சொல்வதன் பொருள், மருந்துகளை மட்டும் நம்பாமல் உடல், மனதை பேணி காக்க யோக பயிற்சியை நாட வேண்டும் என்கிறார்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
என்கிறது குறள். இந்த உடம்புக்கு மருந்தே வேண்டாம், எப்போது என்றால் முன்பு உண்டது செரிமானமாகி விட்டதா என அறிந்து உண்டால். வார்த்தை ஒவ்வொன்றையும் தேர்ந்து எடுத்துச் சொல்கிறார் திருவள்ளுவர்.
அருந்தியது - உண்டது எனச் சொல்லாமல் அருந்தியது என்கிறார். ஏன்? உணவை வாயில் வைத்து பல்லால் நன்றாக கடித்து, உமிழ் நீரால் கரைத்து அருந்த வேண்டும். அவசரம் அவசரமாக அள்ளிப் போடக் கூடாது.
உணவு எப்படி ஜீரணமாகும்? வேலை செய்ய வேண்டும். சும்மா சாப்பிட்டு விட்டு படுத்து கிடந்தால் ஜீரணம் ஆகாது. உழைக்க வேண்டும். அப்படி இருந்தால் மருந்தே வேண்டாம். இந்த உணவு செரிமானம் ஆகி வெளியேறுவது எவ்வளவு நல்லது என வள்ளுவர் சொல்லும் அழகே அழகு.
'கூடல் இனிதுதான். அதை விட இனிது எது தெரியுமா, மனைவி ஊடல் கொள்வது. அது எப்படி என்றால் சாப்பிடுவது இனிமையானது தான், அதை விட இனிமையானது உண்டது செரித்து வெளியேறுவது' என்கிறார்.
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது
உடலுக்கே தெரியும் - உணவு வேண்டுமா அல்லது இல்லையா என்று. ஆனால் பலர் உள்மனம் சொல்வதை கேட்காமல் எடுத்துக் கொள்வதுதான், மருந்து அதிகம் எடுக்க வழிசெய்கிறது. உணவில் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சாப்பிட்டால், அதுவே உணவாகவும் ஆகிறது. மருந்தாகவும் ஆகிறது. நம் உடலில் கழிவின் தேக்கம் வியாதியாக மாறுகிறது. எனவே உணவே மருந்து என்பதை உணர்ந்து உணவு முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமாகும்.
'வைட்டமின் D' மாத்திரையை சாப்பிடுவதற்குப் பதிலாக காலை, மாலையில் சூரியஒளியில் நிற்பது, இயற்கையாகவே சத்து கிடைக்கும். சீரகம் சாப்பிட உடல் குளிர்ச்சி அடையும். பெருங்காயத்துாள் உணவில் சேர்த்துக் கொள்ள வாய்வு பிரச்னை வராது.உப்பை குறைத்துக் கொள்ள ரத்தக் கொதிப்பு குணமாகும். மஞ்சளை சேர்த்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. மிளகை சேர்க்க விஷம் இறங்கும். இது போல் உடல் நலன் காக்கும் அனைத்தும் உணவில் கலந்து சாப்பிட்டால், உணவே மருந்தாகி விடும்.
உணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் அறிவின் வெளிப்பாடு. இதன் பின்புலத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் செய்த ஆராய்ச்சியும், அனுபவமும் இருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் மூலிகை, தாவரங்களை நோய்களை குணப்படுத்தப் பயன்படுத்தினர். இந்த மூலிகைகள் உணவின் ஒரு பகுதியாகவும் இருந்ததால், உணவு, மருத்துவம் இரண்டும் இணைக்கப்பட்டன. உணவு என்பது பசியை போக்குவது மட்டுமல்ல, உடல், மனதை பலப்படுத்தும் சக்தி வாய்ந்த கருவி என்றும் உணர்ந்தனர்.
''நோய்நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்கிறார் திருவள்ளுவர். நோய்க்கான மூலகாரணத்தை அறிந்து அதைத் தணிக்கும் வழியை அறிந்து தீர்வு காண வேண்டும். உடல் தளர்ச்சி, அதனால் ஏற்படும் மனவேதனை, வைத்திய செலவு, நமக்கு பணிவிடை செய்பவர் படும் துன்பம், நம்மை நம்பி இருப்போருக்கு வருத்தம் என நோயால் பல கஷ்டங்கள்.
வீடு, தெரு, ஊரை சுத்தமாக வைக்கவும், உண்ணும் சோறும், பருகும் நீரும், காற்றும் சுத்தமாக இருக்கவும் இடைவிடாமல் முயற்சி செய்ய வேண்டும். 'ஒளடதம் குறை' என்பது நோய்களைத் தடுக்கும் முறைகளை ஊக்குவிப்பதாகும்.
நோய் வந்த பிறகே மருந்தின் தேவை ஏற்படும். அதனால் 'மருந்து' அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியதை உணர்ந்து நோய் வராமல் காத்து, மருந்தின் தேவையைக் குறைக்க வேண்டும் என்கிறார் பாரதியார். இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதிகமான மருந்து சாப்பிடும் போது எதிர்ப்பு சக்தி குறையும்.
மருந்துக்கு உடல் பழகி விட்டால் தானாக நோய் சரியாகும் தன்மை போய் விடும். இதை உணர்ந்து உடலை நேசிக்க கூடியவராக பாரதி கண்ட புதியதோர் உலகத்தை காண பயணிப்போம். நம் வாழ்க்கை முறையைச் சீராக்கினால், சமப்படுத்தினால் நோய் குறையும்; மருந்தின் தேவையும் குறையும். உடல்நலம் பெருக்கி, நோய் வரும் முன்பே தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது அவசியம். அதற்கு பாரதியாரின் 'ஒளடதம் குறை' என்பது நல்ல மருந்தாகவும், மந்திரமாகவும் இருக்கிறது.
--ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010