ADDED : அக் 07, 2025 01:03 PM

அகத்தியர்
''மகேஸ்வரா! பூலோகவாசியான மனிதர்கள் சில காலமே வாழ்கிறார்கள். படைப்பின் ரகசியத்தை அறியும் முன்பே அவர்களின் ஆயுள் முடிந்து விடுவதும் தங்களின் விளையாட்டு தானே? இந்த ரகசியத்தை எனக்கு சொல்வீர்களா...'' எனக் கேட்டாள் பார்வதி.
புன்சிரிப்புடன், ''உமையவளே! என்னுள் பாதியாக இருக்கும் உன்னால் எப்படி இதை கேட்க முடிகிறது. பிறப்பின் ரகசியம் நீ அறியாததா... என்னுள் ஆற்றலாக நிறைந்திருக்கும் சக்தியாகிய உனக்கு உண்மை தெரியாதா?'' என்றார்.
''மகேஸ்வரா! தங்களின் விளையாட்டை அறிந்தவர் யார்? எல்லாம் முடிந்த பிறகே தங்களை அறிந்து கொள்கிறோம். பிறப்பின் ரகசியத்தையும், ஏன் அற்ப ஆயுளில் மடிகிறார்கள் என்பதையும் சொல்லுங்கள்'' என்றாள்.
ரகசியத்தை எப்படியும் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கிறாய். எம் விளையாடல்கள் எல்லாம் நன்மைக்கே. மனிதர்கள் வாழ்வதும், அற்ப ஆயுளில் வீழ்வதும் அவரவர் செய்த முன்வினையே''
''நீண்ட காலம் நோயின்றி மனிதர்கள் வாழ வேண்டும் என்பதே என் ஆசை. தவறு இருந்தால் மன்னியுங்கள்'' என மகேஸ்வரனின் கைகளில் தன் முகத்தை பொதிந்தாள். வாழ்க்கை ரகசியம் தெரிந்தால் என்னாகும்? அதை தேடித் தான் கற்க வேண்டும். அப்படி இல்லாமல் பிறக்கும் போதே எல்லாம் தெரியட்டும் என்ற உன் எண்ணம் சரி அல்ல...'' என்றார் மகேஸ்வரன்.
''பிழை பொறுத்தருள்க. நீங்கள் சொல்வது சரியே. எதையும் அவர்கள் உணர்ந்து கொள்வதாக தெரியவில்லை. நாம் எப்படி புரிய வைப்பது?'' எனக் கேட்டாள். ''கவலைப்படாதே பார்வதி! நம் செயல்களை செவ்வனே செய்பவர்கள்தான் சித்தர்கள். அவர்கள் இந்த பணியைச் செம்மையாக செய்து வருகிறார்கள். யாருக்கு எப்படி, எப்போது, எதை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த சித்தர்கள் விளையாட்டை ஒவ்வொன்றாக நடத்தி வருகிறார்கள். அவையும் நான் நடத்தும் விளையாட்டு தானே'' என்றார்.
''யார் அந்த சித்தர்கள்? அவர்களும் மனிதர்கள் தானே. அவர்களுக்கு மட்டும் எப்படி தெரிந்திருக்கும்?'' ''சித்தர்கள் பலயுகங்களாக வாழ்ந்தவர்கள். ஆன்மிகம், அறிவியலை கண்ணாக போற்றுபவர்கள். மணி, மந்திரம், அவிழ்தம் என மூன்று கலைகளிலும் தேறி மருத்துவர்களாக திகழ்பவர்கள்.
அது மட்டுமா? வாதம், யோகம், ஞானம், வைத்தியம் போன்ற கலைகளை கற்று நோயின்றி நீண்ட காலம் வாழும் ரகசியத்தை சொல்லிக் கொடுப்பவர்கள். சித்தர்கள் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். திருமூலர் 3000 ஆண்டுகள், அகத்தியர் பல ஆயிரம் ஆண்டுகள். இறுதியில் இறப்பை அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டனர்'' என்றார் மகேஸ்வரன்.
''பெருமானே! இப்போது மனிதர்கள் 30 வயதுக்குள்ளாக நோயுடன் இந்த பூமியில் வாழ்கின்றனர். ஆனால் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் எப்படி வாழ்ந்தார்கள்? அந்த ரகசியம் அவர்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது. அதுவும் உங்கள் விளையாட்டு என்பதை நான் அறிவேன். உங்களின் மூலம் இதைக் கேட்டு அறிவதில் எனக்கு மகிழ்ச்சி'' என்றாள் பார்வதி.
அந்த சமயத்தில் அங்கிருந்த நந்திதேவர் இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டார். அவர் மூலமே இந்த ரகசியம் பூலோகத்திற்கு பரவியது. ''முன்பு சித்தர்கள் மக்களுக்கு வழிகாட்டினர். (மாதம் ஒருவேளை விரதம், ஐம்புலன் அடக்கம், நல்லதை செய்தல்) அதனால் அக்காலத்தில் 200 முதல் 300 ஆண்டுகள் வரை மக்கள் வாழ்ந்தனர். இப்போது சித்தர்களின் வழிகாட்டுதலை பின்பற்றாததால் தான் நோய்க்கு ஆளாகிறார்கள்.
ஆயுளை நீட்டிக்கும் ரகசியத்தை அறிந்த சித்தர்கள் சித்த, ஆயுர்வேதம் மூலம் மக்களை வாழச் செய்தனர். அது மட்டுமின்றி சித்தர்கள் வானில் பறப்பவர்கள், கூடு விட்டு கூடு பாய்வதில் வல்லவர்கள். பூமி எங்கும் சுற்றி வந்தவர்கள். காற்று இல்லாமல் மண், நீருக்குள் மறைந்தபடி பல ஆண்டுகள் வாழ்ந்தவர்கள். இருந்த இடத்திலேயே வெட்டவெளியை அடைந்து பிரபஞ்சத்தை ஆராய்ச்சி செய்தவர்கள்.
அது மட்டுமல்ல... உயிரின் தோற்றம், உடலுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு, ஞானம் பெறும் வழிமுறைகளை கற்று, தன் அனுபவத்தை பிறருக்கும் கற்றும் கொடுத்தார்கள்''. அறுசுவை இருந்தால் தான் உணவை சாப்பிட முடியும். அதுபோல்தான் ஆன்மிகம், அறிவியல், தத்துவம், கற்பனை என பலவற்றை உள்ளடக்கியது சித்தர்களின் வரலாறு. மரணத்தை வென்ற சித்தர்கள் தங்களுக்கு தாங்களே சமாதி எழுப்பிக் கொண்டனர். 'எல்லா உயிர்களும் நானே' என வணங்கிய சித்தர் விளையாட்டை சொல்கிறேன் கேள்'' என்றார் மகேஸ்வரன்.
''குறுக்கே வந்ததற்கு மன்னியுங்கள். எனக்கும் இதில் பங்கு இல்லையா? நாராயணா! நாராயணா!'' எனச் சொல்லியபடி அங்கு வந்தார் நாரதர்.
''சித்தர் ரகசியத்தை கூறப் போகும் இந்த நேரத்தில், நாரதருக்கு இங்கு என்ன வேலை... சித்தர் விளையாட்டில் தங்கள் விளையாட்டை சேர்க்க வேண்டாமே'' என்றார் மகேஸ்வரன்.
''நாராயணா! யாம் இல்லாமல் விளையாட்டா? நாரதர் கலகம் நன்மையில் முடியும் எனத் தெரியாதா? மகேஸ்வரா, எல்லாம் சிவமயம்.
நானும் சித்தர் விளையாட்டை ரசிக்க இருக்கிறேன். என்னுடன் நந்திதேவரும் இருக்கிறார். எம்பெருமானே! தொடருங்கள்'' என்றார் நாரதர்.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
90030 00250