தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாரதியாரின் ஆத்திசூடி - 28

பாரதியாரின் ஆத்திசூடி - 28

பாரதியாரின் ஆத்திசூடி - 28


ADDED : ஜன 15, 2026 02:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 02:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாற்றுதல் ஒழி

துாற்றுதல் என்பது பிறரை அவதுாறு செய்தல். ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிக் குற்றம், குறைகளைக் கூறுவது, எதிர்மறையாக பிறரிடம் பேசுவது. இதை புறங்கூறுதல் என்றும் சொல்வர். இதை 'கோள் சொல்லுதல் என்றும், குறளை கூறுதல் என்றும் இலக்கியம் கூறுகிறது. கோள் என்றால் அடுத்தவரிடம் ஒருவர் இல்லாத போது சொல்வது. குறளை என்பது பொய்யாக ஒருவரைப் பற்றி அவதுாறு சொல்வது, பழித்துப் பேசுவது.

உண்மையாக பார்த்தால் கோழைத்தனம், வஞ்சகம், ஏமாற்றுதல் இவையே புறங்கூறுதலின் கூறுகள். இதைத்தான் மகாகவி பாரதியார் துாற்றுதல் ஒழி என்கிறார். பாப்பா பாட்டிலிலேயே பாரதியார் எச்சரிக்கிறார்

ஓடி விளையாடு பாப்பா!

நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!

கூடி விளையாடு பாப்பா!

ஒரு குழந்தையை வையாதே பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா!

தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!

மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

குழந்தையை வையாதே என்ற வரிகளுடன் நிறுத்தாமல், பொய் சொல்லாதே, புறம் சொல்லாதே என்று சொல்லி, தெய்வம் இருக்கப் பயமில்லை என்றும் கூறுகிறார்.

அது மட்டுமா, ரௌத்திரம் பழகு என்று சொன்னவன் அல்லவா? அவன். குழந்தையிடம், பாதகம் செய்வோரைக் கண்டு பயம் கொள்ளாமல், மோதி மிதித்து அவர்தம் முகத்தில் உமிழ்ந்து விடு என்கிறார்.

சுயநலம் கொண்ட பொறாமையே ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் தவறாகக் கூற வைக்கிறது. திருப்பாவையில் கோதை ஆண்டாளும் இதை அழுத்தமாகப் பதிவு செய்கிறாள்.

இரண்டாம் பாசுரமான,

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

என்ற பாடலில், செய்யாதன செய்யோம் என்றாலே, எதுவெல்லாம் தர்மத்திற்கு எதிரானதோ, அதை எல்லாம் செய்ய மாட்டோம் என்கிறாள். ஆனால் அடுத்த வரியில், தீக்குறளை சென்றோதோம் என தனியாகக் கூறுவது கவனிக்கவேண்டிய ஒன்று. நட்பு, உறவு எல்லாவற்றையும் கெடுப்பது, இந்தப் புறங்கூறும் குணம் என்பதால்தான் ஆண்டாள், அதிக அழுத்தம் கொடுக்கிறாள்.

நாம் தினமும் பாடும் கந்த சஷ்டி கவசத்திலும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் என்ற வரிகள் வரும். குறளைப் பேய் என்பது ரத்தம் கக்கச்செய்யும் பேயைக் குறிக்கும். இதெல்லாம் ஒழிக்க வேண்டியவை என்பதையே துாற்றுதல் ஒழி என்ற இரண்டே சொற்களில் கூறுகிறார்.

சாதாரணமாக பேச்சு வழக்கில் கூறுவார்கள் - இரு நபர்கள் பேசிக் கொண்டிருந்தால் அது மூன்றாவது நபரை பற்றியதாகத்தான் இருக்கும் என்பார்கள். அலுவலகத்தில் தான் செய்த தவறுகளை மறைக்க விசுவாசம் காட்டுவது போல பலர் இந்த வேலையைச் செய்வார்கள்.

குடும்ப வாழ்க்கை, அலுவலகம் என்பது போக, அரசியலிலும் இது சாதாரணமாகி விட்டது. தலைவர்கள் -ராஜாஜி, சத்தியமுர்த்தி, பசும்பொன் தேவர், காமராஜர் போன்றோர் மீது கூட சேற்றை வாரிப் பூசி இருக்கிறார்கள். துாற்றுதல்களை அதிகம் சந்தித்தவர் ராஜாஜி எனச் சொன்னவர் காந்தி.

இவை எல்லாமே சுயநலம் சார்ந்த விரோதம், குரோதம் இவற்றால் வந்த செயல்கள்.

வாழ்வியலைச் சொன்ன திருவள்ளுவர் இதற்கு தனி அதிகாரமே தந்துள்ளார்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்

அறங்கூறும் ஆக்கந் தரும்.

என்கிறார். அதாவது கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நல்லது என்கிறார். ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பதில்லை. குடும்பத்தில், சமுதாயத்தில், அலுவலகத்தில், அரசியலில், நட்பில் என எல்லா இடங்களிலும் கருத்து வேறுபாடு இருப்பது இயல்பான ஒன்று. அதைப் பேசித் தீர்க்க வேண்டும். அதுவே ஜனநாயகமும் நாகரிகமும் ஆகும். ஆனால் பதவி, பணம் இவற்றுடன் இணைந்த சுயநலத்தால், தங்களுக்கு இசையாதவர்களை அவதுாறு செய்கிறார்கள், துாற்றுகிறார்கள், வசை பாடுகிறார்கள். கிசுகிசு என்ற பெயரில் வரும் தவறான செய்திகளால் பலர் தற்கொலை, மன உளைச்சலுக்கு ஆளாவதைப் பார்க்கிறோம்.

ஆதிசங்கரரின் வாழ்வில் அவரது உறவினர்களே அவரை துாற்றினார்கள். ஞானத்தால் இவற்றை கடந்து சென்றார்.

அறிவு அற்றம் காக்கும் கருவி என்ற திருவள்ளுவரின் வாக்கின்படி, அறிவு நிலை கண்டவர்களுக்கு எந்தவித துன்பமும் இல்லை. அதனால்தான் பாரதியார் 'சுத்த அறிவே சிவம் - அறிவே தெய்வம்' எனச் சொல்கிறார்.

இயல்பாக இருக்கும் நாயை அடிக்க வேண்டுமானால், அதற்கு வெறி பிடித்து விட்டது எனச் சொல்லி அடி என்கிறது ஆங்கிலப் பழமொழி. அதைத்தான் ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆளும் போது கையாண்டார்கள். இந்த வெட்கங்கெட்ட தனத்தை ராஜதந்திரம், அரசியல் சூத்திரம் எனச் சொன்னார்கள். அவர்களைப் புகழ்ந்து நம்மவர்களில் சிலர் சொன்னார்கள்.

இன்றும் சொல்கிறார்கள். அவர்களை நாம் தலைவர்கள் எனக் கொண்டாடுவது தான் வருத்தமான உண்மை.

ஜோதிடரைப் பார்க்க வந்த ஒருவர் ஜாதகத்தை நீட்டினார். அதைப் பார்த்த ஜோதிடர் மிக தயங்கினார். தயங்காமல், உள்ளதைச் சொல்லுங்கள் என்றார் வந்தவர். கொஞ்சம் யோசித்து இந்த ஜாதகக்காரர் ஒரு மாதம் தான் உயிருடன் இருப்பார். அதைச் சொல்லவே தயங்கினேன் என்றார். உடனே ஜாதகம் கொண்டு வந்தவர் சிரித்தபடி பணத்தை கொடுத்தார். ஜோசியருக்கு விளங்கவில்லை. ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டார். அவர் சொன்னார் இந்த ஜாதகம் என்னுடையது அல்ல; பிசினஸ் பார்ட்னருடையது என்றார். எந்த அளவிற்கு விரோதம் இருந்தால் இப்படி நண்பரை, உடன் இருக்கும் பங்குதாரரை இப்படி துாற்றுவார். கல்வி என்பது ஒருவரின் மன அழுக்கை போக்க வேண்டும்.

பாரதியார் அதனால்தான்,

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,

வஞ்சனை சொல்வாரடி - கிளியே!

வாய்ச்சொல்லில் வீரரடி!

என பாடுகிறார்.

பேயாய் உழலும் சிறு மனமே பேணாய் என் சொல்

இன்று முதல் நீயாய் ஒன்றும் நாடாதே

என பாரதியார் கட்டளையிடுகிறார். இப்படி இருந்தால் துாற்றுதல் எண்ணம் வராது. எதுவாக இருந்தாலும் நேரில் கூறி விளக்கத்தை அறிவது நல்லது. நெருப்பு விறகைச் சாம்பலாக்குதல் போல புறங்கூறல், நற்செயல்களைச் சாம்பல் ஆக்கி விடும். தனி மனிதனோடு செல்வது மட்டுமல்ல. குடும்பம், சமுதாயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். இவையெல்லாம் கடக்க,

மதிமூடும் பொறாமை இருளெல்லாம்

எனை முற்றும் விட்டு அகல வேண்டும்

ஐயம் தீர்த்து விடல் வேண்டும்

பழைய அச்சம் போய் ஒழிதல் வேண்டும்

என்னை உயிர் கொண்டு அருள வேண்டும்

யோக சித்தி வேண்டும் என வரம் கேட்டலில் பாரதியார் பாடுகிறார்.

ஊரார் வாயை மூடுவது கடினம். நம் செவிகளை மூடுதல் எளிது. தன் மீதும், கடவுள் மீதும், தர்மத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர், பிறரைத் துாற்றும் இழிசெயலில் இறங்கமாட்டார் என்பதே பாரதியாரின் புதிய ஆத்திசூடி கூறும் செய்தி.



-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us