தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 14

சித்தர்களின் விளையாட்டு - 14

சித்தர்களின் விளையாட்டு - 14


ADDED : ஜன 15, 2026 02:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 02:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் சிலைக்கு உயிரூட்டியவர்

“மகேஸ்வரரே! நான் கோயில் சிலைகளை மெய்மறந்து வணங்கியிருக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மனை வணங்கும் போதெல்லாம் என்னை அறியாமல் கண்ணீர் வரும். தெய்வத்தின் திருமேனியை எப்படி இந்த பொற்கொல்லர்கள் உயிர் கொடுத்து வடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்திருக்கிறேன்” என்றார் நாரதர்.

பார்வதி தொடர்ந்தார். “இதற்கே ஆச்சரியப்படுகிறீர்களே! உலகத்திலேயே அழகிய பெண்ணை கருவூரார் சிலையாக வடித்து குருநாதர் போகர் முன்பு நிறுத்தியது தெரியுமா?” எனக் கேட்க நாரதர் ஆர்வமானார்.

கருவூராரின் நேர்த்தியான சிலை வடிப்புக்கு காரணம் அவருடைய குருநாதர் போகர். ஆகம சாஸ்திரங்களை மீறாமல் சிலை செய்வதில் வல்லவராக விளங்கினார்.

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜசோழன் கருவறையில் ஆவுடையாரை அஷ்டபந்தனம் சாத்தி பிரதிஷ்டை செய்ய முயன்றார். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. கவலையில் ஆழ்ந்திருந்த மன்னரின் கனவில், “கவலைப்படாதே. நாளை சித்தர் கருவூரார் ஆவுடையாரை பிரதிஷ்டை செய்வார்” என அசரீரி சொன்னது.

மறுநாள் கருவூரார் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்தார். அவருக்காக காத்திருந்த மன்னர் ராஜராஜன் கருவறைக்கு அழைத்துச் சென்றார். பிரம்மாண்டமாக இருந்த ஆவுடையாரை வணங்கிய கருவூரார் எல்லோரையும் வெளியே நிற்கச் சொல்லி விட்டு, தன் ஞானக்கண்ணால் கருவறையை பார்வையிட்டார்.

தீய சக்தியான “பிரம்ம ராட்சசி” உலாவுவதே ஆவுடையாரை பிரதிஷ்டை செய்யாததற்கு காரணம் என அறிந்தார். அஷ்டபந்தன மருந்தைக் காயவிடாமல் ஆவுடையாரை சாய்த்து ஆட்டிக் கொண்டிருப்பதை அறிந்தார்.

உடனே அனைவரையும் கருவறைக்குள் அழைத்து தயாராக இருந்த அஷ்டபந்தன மருந்தை பீடத்தில் பூசச் சொன்னார். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கத்தக்காம்பு, பச்சைக்கற்பூரத்தை வாயில் போட்டு குழைவாக மென்றார். யாரும் எதிர்பாராத நேரத்தில் தன் கண்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த தீய சக்தியான பிரம்மராட்சசி மீது உமிழ்ந்தார். சற்றும் எதிர்பாராத பிரம்மராட்சசி பயந்து போய் தலைத் தெறிக்க ஓடியது. அஷ்டபந்தன மருந்தின் தன்மையால் ஆவுடையாரும் பீடத்தில் கச்சிதமாக பொருந்தியது.

மனம் மகிழ்ந்த மன்னர் அவருடைய காலில் விழுந்து வணங்கினார். திருப்பணியின் போது பின்பற்ற வேண்டிய சாஸ்திரம், ஆகம விதி, அஷ்டபந்தன மருந்து தயாரிக்கும் முறையை மன்னருக்கு கற்றுக் கொடுத்தார். அதன்படி எல்லா சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தஞ்சை பெரிய கோயில் உலகளவில் போற்றப்படுவதற்கு கருவூராரின் ஆசியைப் பெற்ற ராஜராஜ சோழனின் சிவபக்தியே காரணம்.

ஒருமுறை போகர் தன் சீடரான கருவூரார் அனைத்து சித்திகளையும் பெற்று விட்டாரா என அறிய விரும்பினார். ஆகவே தனது சீடனின் திறமையை சோதிக்க நினைத்து, “கருவூராரே! தண்டாயுதபாணி முருகனுக்கு நவபாஷாண சிலை வடிக்க உள்ளேன். சிற்பலட்சணத்தில் கைதேர்ந்த நீரே தண்டாயுதபாணியின் முக லட்சணத்திற்கு ஈடான அழகிய பெண்ணை என் முன் கொண்டு வர வேண்டும். அவளின் அங்க லட்சணத்தில் குறை இருப்பது கூடாது” எனக் கட்டளையிட்டார்.

சித்தர் கொங்கணரை துணைக்கு அழைத்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்தார் கருவூரார். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளிடம் ஏதோ ஒரு குறை இருப்பதை அறிந்து சோர்வுற்றார். எவ்வளவோ முயன்றும் அழகான பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக அங்க லட்சணம் நிறைந்த அழகான பெண்ணை தானே சிலையாக வடிவமைத்தார்.

கொங்கணரும் கண் இமைக்காமல் பார்த்து விட்டு, “இவ்வளவு அழகிய பெண்ணை இதுவரை கண்டதில்லை. இதைக் கண்டால் போகர் மகிழ்ச்சி கொள்வார்'' என பாராட்டினார். இருவரும் அந்த சிலையை எடுத்துக் கொண்டு போகரைக் காண புறப்பட்டனர்.

நவபாஷாணத்தை அரைத்தபடி இருந்தார் போகர். அவரை வணங்கி விட்டு சிலையை வைத்தார் கருவூரார். ரசவாதம், குளிகை ஆற்றலால் சிலைக்கு உயிர் கொடுத்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் போகர் மயங்கிப் போனார். “கருவூராரே! உன்னுடைய ஆற்றலுக்கு அளவே இல்லை. இவ்வளவு அழகியப் பெண்ணை நான் கண்டதேயில்லை. உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தப் பெண்ணை வைத்தே தண்டாயுதபாணி சிலை வடிக்கிறேன்” என்றார். மகிழ்ச்சியுடன் போகர் அந்த பெண்ணை அழைத்து எதிரில் உட்காரச் சொன்னார். அந்த பெண்ணோ சிலை போல் உட்கார்ந்தாள்.

அவளின் செயல்பாட்டைக் கண்ட போகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. “என்ன, கருவூராரே! தாங்கள் அழைத்து வந்தது பெண்ணா அல்லது தங்கள் கைவண்ணத்தில் வடித்த சிலையா?” எனக் கேட்டார்.

''என்னை மன்னியுங்கள். எங்கு தேடியும் சகல லட்சணம் உள்ள பெண் கிடைக்கவில்லை. அதனால் பெண் சிலையை வடிவமைத்து குளிகையால் உயிர் கொடுத்தோம். ஆனால் தாங்கள் அந்தப் பெண்ணை சிலை என கண்டுபிடித்து விட்டீர்கள். எங்களை மன்னியுங்கள்” என்றார். “உன் அறிவு, ஆற்றலைக் கண்டு மெச்சுகிறேன். இது போல அழகான பெண்ணை யாராலும் சிலையாக வடிவமைக்க முடியாது. இந்த கலைத்திறமை கடவுள் உனக்களித்த வரப்பிரசாதம்” என்றார். அகம் மகிழ்ந்த கருவூராரும் விடைபெற்றார்.

பின்னர் ஆனிலையப்பரை வணங்க விரும்பி சொந்த ஊரான கரூருக்குச் சென்றார் கருவூரார். பேராசை பிடித்த அவரது உறவினர்கள் சிலர் அவரிடம் ரசவாதக் கலையை கற்க ஆசைப்பட்டனர். அதன் மூலம் செம்பு, வெள்ளி ஆகிய உலோகத்தை தங்கமாக மாற்றி சம்பாதிக்க துடித்தனர்.

கருவூரார் உறவினர்களை விட்டு விலகினார். கரூர் கோயிலில் ஆனிலையப்பரின் திருமேனியுடன் ஐக்கியமானார். இங்கு சிவலிங்கம் ஒருபக்கம் சாய்ந்து காணப்படுகிறது.

வியப்புடன் கேட்ட நாரதரிடம், “தான் வடிவமைத்த சிலைக்கு உயிர் கொடுத்த கருவூராரை பற்றி இப்படி வியக்கிறீரே! அவரைப் போல யானை சிலைக்கு உயிர் கொடுத்த சித்தரை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்” என பரமேஸ்வரன் கூறத் தொடங்கினார்.

-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us