தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாரதியாரின் ஆத்திசூடி - 31

பாரதியாரின் ஆத்திசூடி - 31

பாரதியாரின் ஆத்திசூடி - 31


ADDED : பிப் 05, 2026 01:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 01:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் என்பதைத்தான் சிதையா நெஞ்சு கொள் என்கிறார் மகாகவி பாரதியார்.

மனம் தளராமல், உடைந்து போகாமல், எந்த நிலையிலும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் வாழவேண்டும் என்பதே இதன் கருத்து. இதற்கு உதாரணமாக வேறு யாரையும் பார்க்க வேண்டாம். பாரதியாரின் வாழ்க்கையே போதும். வாழ்வில் வறுமை, வெறுமை போன்ற பல இன்னல்களைச் சந்தித்த போதும், 'சிதையா நெஞ்சு கொள்' என்ற கொள்கையுடன் உறுதியாக நின்றார். சுயநலம் இல்லாமல் பொதுநலத்திற்காகவே வாழ்ந்து காட்டிய மஹாபுருஷர் அவர்.

அச்சமில்லை, அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற

போதிலும் அச்சமில்லை

என்றும்

ஆயிரம் உண்டிங்கு ஜாதி

எனில் அந்நியர் புகுவது என்ன நீதி

என்றும் மனதில் உறுதியுடன் பாடுகிறார். அது மட்டுமா! ஆங்கிலேய அரசு நம்மை ஆண்டு கொண்டு அடிமைப்படுத்தி காலத்தில் விடுதலை அடைவதற்கு 30 ஆண்டுகள் முன்னதாகவே,

எல்லோரும் ஓர் இனம்

எல்லோரும் ஓர் குலம்

நாம் எல்லோரும்

இந்நாட்டு மன்னர்

என பாடுவதுடன்,

ஆனந்த சுதந்திரம் அடைந்து

விட்டோம் என்று

ஆடுவோமே

பள்ளுப் பாடுவோமே

என்றும் பாடுவது அவரின் தைரியம், நம்பிக்கையைக் காட்டுகிறது.

பதினாறு வயதிற்குள் பாரதியாரைப் போல வாழ்க்கை புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை என்ற உளியால் செதுக்கப்பட்ட கலைச் சிற்பம் பாரதி. நெருப்பாற்றில் நீந்திக் கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தர முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவரின் நெஞ்சுரமும் நம்பிக்கையும்.

எட்டயபுரத்தில் இருந்து கல்வி கற்க திருநெல்வேலிக்கு வந்ததால் செலவு அதிகம் ஆனது. தந்தையாரின் வறுமை அவரை அரித்தது. மனம் நிம்மதியின்றி தவித்தது.

''செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;

தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;

நலம்ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை

நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்''

'பெரிதினும் பெரிது கேள்' என்ற புதிய ஆத்திசூடி படைத்த பாரதியார் பள்ளிப்படிப்பிற்கு உதவி கேட்டு மன்னருக்குச் சீட்டுக்கவி எழுதிய நிலை, அவரது சிதையா நெஞ்சைக் காட்டுகிறது.

பாரதி தன் குருமார்களில் ஒருவராகப் பெரிதும் போற்றிய சகோதரி நிவேதிதா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். புகழ் பெற்ற அறிவியல் மேதை ஜகதீஷ் சந்திரபோஸ் வலியுறுத்தியதால் ஓய்வு எடுப்பதற்காக டார்ஜிலிங் சென்றார். போஸும் அவரது குடும்பத்தினரும் நிவேதிதாவை இரவு பகலாக கண்ணும் கருத்துமாக கவனித்தனர். இதன் நடுவில் நிவேதிதாவின் நிலை இன்னும் மோசமானது.

கல்கத்தாவை சேர்ந்த இரண்டு மருத்துவர்களை சிகிச்சைக்காக போஸ் அழைத்து வர, அந்த மருத்துவர்கள் நிவேதிதாவிற்கு சில வெளிநாட்டு ஊசி மருந்துகளை வரவழைக்க விரும்பினர். விஷயம் அறிந்த சகோதரி நிவேதிதா தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காகக் கூட வெளிநாட்டு மருந்து வேண்டாம் என உறுதியுடன் மறுத்து விட்டார்.

எவ்வளவு மன உரம் இருந்தால் உயிரை விட இந்த சுதேசி மண்ணின் மீது பக்தி கொண்டவராக இருந்திருப்பார். இன்றைக்கு பெரும்பாலான அமைச்சர்கள், நாட்டில் உள்ள சிறந்த மருத்துவமனைகளை நம்பாமல், வெளிநாட்டு சிகிச்சைக்கு அதிக பணம் செலவழிப்பதை பார்க்கிறோம். இவர்களின் சிதையா நெஞ்சுரம் என்பது பிறந்த மண்ணை நம்பாமல் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதே.

கண்ணன் கீதையில் பக்தி யோகத்தின் 12ம் அத்தியாயத்தில்,

மையேவமன ஆதத்ஸ்வ மயிபுத்திம நிவேசய

நிவஸிஷ்யஸி மையேவ அதஊர்த்வம் ந சம்சய :

என்கிறார்.

இன்பம், துன்பத்தை சமமாகப் பார்ப்பவனுக்கு மனதில் அமைதி தங்கும். மகிழ்ச்சி பொங்கும்.

கடவுளையே துதித்து, வசதிகளே இல்லாத 8ம் நுாற்றாண்டில், என்றும் அழியாத சனாதனப் பொக்கிஷங்களை தந்த சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் போன்றவர்கள் பட்ட துயரங்கள்தான் எத்தனை ? சிதையா நெஞ்சு கொண்டு சிவன் மீது நம்பிக்கை கொண்டு, எல்லாவற்றையும் கடந்து நின்றார்கள்.

அதே போல இந்த நாட்டின் விடுதலைக்காக குடும்பம், பணம், பதவி என எதை பற்றியும் கவலைப்படாமல், சிதையாத நெஞ்சுரமும், விரைவில் சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கொண்டு உழைத்த போராளிகளான வீர சாவர்க்கர், திலகர், வ.உ.சி., வ.வே.சு. அய்யர், சுப்ரமணிய சிவா, நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன் போன்றோரின் வாழ்வே உதாரணம். இவர்கள் உண்மையில் போற்ற வேண்டிய ஹீரோக்கள்.

எத்தனையோ தடை இருந்தாலும், அதை எல்லாம் மீறி, சாலைகளே இல்லாத ஊர்கள் எல்லாம் மாட்டு வண்டியில் சென்று இலக்கியத்தைக் காத்து ஐம்பெருங்காப்பியம் தந்த உ. வே. சாமிநாத ஐயர் கொண்ட நெஞ்சுரம் எவ்வளவு பெரியது ?

ஆர்தர் ஆஷ்லே விம்பிள்டன் வீரர். பலமுறை பட்டங்களை வென்றவர். மாற்று அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனக் குறைவால், அவரது உடலுக்குள், எச்.ஐ.வி. கிருமி நுழைய நோய் தொற்றியது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அவரது ரசிகர்களிடம் இருந்து எண்ணற்ற கடிதங்கள் வந்தன. உங்களுக்கு எப்படி இந்த நோய் வரலாம்? கடவுளுக்கு கண்கள் கிடையாதா? என்றெல்லாம் கேள்விகள்!

அதற்கு பதில் எழுதினார் ஆஷ்லே. உலகின் மக்கள் தொகையில் 50 ஆயிரம் பேருக்குத் தான் டென்னிஸ் விளையாட வாய்ப்பு உருவாகிறது. அவர்களில் தொடக்கம் முதல் இறுதி வரை தொடர்ந்து பயிற்சி பெற்று வருபவர்கள் 5000 பேர் அதில் சிறப்பாக விளையாடி, தேர்வு செய்யப்படுபவர்கள் 500 பேர். அதில் இறுதிக் கட்டத்திற்கு வருபவர்கள் 50 பேர். அந்த 50 பேரில், 5 பேர் உலகம் வியக்க, ரசிகர்களின் விழிகளில் வலம் வருபவர்கள். அந்த 5 பேரில், இருவர் வந்து, ஒருவர் வெற்றி பெறுகிறார். கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வருகிறது.

அந்த ஒருவராக என்னை உருவாக்கிய போது, 'கடவுள் உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்' என யாராவது கூறியதுண்டா. அதே கடவுள் தான் இப்போது இந்த நிலையைத் தந்திருக்கிறார். எல்லாம் அவனே! அவனின் அருளே! என்றார் ஆஷ்லே. இப்படி இரண்டையும் சமமாக கருதுவதே கீதையின் சாரம்! எனவே வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை கொடுப்பதே உண்மையில் சிதையா நெஞ்சு.

உடலே கோயில்-; மனமே தெய்வம் என்பது ஆதிசங்கரர் தொட்டு திருமூலர் முதல் ரமணர் வரையுள்ள மகான்களின் வாக்கு. நம் உடலே கோயில் என்பதற்கு சிதம்பரம் கோயிலை உதாரணமாக கூறுவர்.

இங்கு 5 பிரகாரம் - உடலுக்கும் 5 சுற்றுக்கள் உண்டு. அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என 5 கோசங்கள். அதாவது 5 அடுக்குகள். சிதம்பரம் கோயிலின் கர்ப்பகிரகம் கூட கோயிலின் நடுவில் இல்லை. இடதுபக்கம் சற்று தள்ளியே உள்ளது. இதயமும், நம் உடலில் இடப்பக்கத்தில்தான் உள்ளது.

ஒரு நாளைக்கு 21,600 முறை மூச்சு விடுகிறோம். இந்தக் கோயிலின் மேலே 21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன. நமது உடலில் உள்ள நாடிகள் மொத்தம் 72,000. இவைதான் அங்கே ஆணிகளாக உள்ளன. இதயத்தின் துடிப்பும், அசைவும், அந்த நடராஜரின் நாட்டியமாகிறது. அப்படி கடவுளை வணங்க மனம் என்னும் கோயில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் என்பதற்கேற்ப சிதையாத நெஞ்சும், நம்பிக்கையும் நிலைத்திருக்கும்.

அதனால்தான் எத்தனையோ கவலைகளால் மனஉறுதியை கைவிடாத பாரதியார்,

தேடிச் சோறு நிதந் தின்று பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்

வாடித் துன்பமிக உழன்று பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?'

என பாடுகிறார். சாதாரணத் துன்பங்களுக்கெல்லாம் விதியை நொந்து கொள்ளும் நமக்கு பாரதியாரின் வாழ்க்கை கற்றுத் தரும் பாடம் 'குன்றென நிமிர்ந்து நில்' என்பதுதான்.



-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us