தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 17

சித்தர்களின் விளையாட்டு - 17

சித்தர்களின் விளையாட்டு - 17


ADDED : பிப் 05, 2026 01:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 01:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இடைக்காட்டு சித்தர்

“மகேஸ்வரனே! உலகம் ஏன் தோன்றியது? கோள்களின் இயக்கம் எப்படி நடக்கிறது? நாங்கள் எப்படி இதை தெரிந்து கொள்வது?” என நாரதர் கேட்க மகேஸ்வரர் புன்னகைத்தார்.

“என்ன நாரதரே! உம் விளையாட்டை கோள்களுடன் ஆரம்பித்து விட்டீரா! பூவுலகமே இந்த ரகசியத்தை அறிய போராடும் போது மிக எளிதாகக் கேட்டு விட்டீரே” என கேட்க நாரதர் வணங்கினார்.

நவகோள்களை சாதாரணமாக நினைக்காதீர். அவர்களுடன் விளையாட வேண்டாம்” என்றார் மகேஸ்வரர். “என்னை மன்னியுங்கள். படைப்பின் ரகசியத்தை அறிய பிரம்மாவிடம் சென்றேன். ஆனால் அவரோ பதில் சொல்லவில்லை. அதனால் தான் தங்களிடம் கேட்டேன்” எனச் சொல்ல மகேஸ்வரர் தொடர்ந்தார்.

“நாரதரே! கோள்களை இயக்குவதும் இந்த பூமியை ஆள்வதும் யாமே! உமக்குத் தெரியாதா” என பார்வதி கோபத்துடன் கேட்க நாரதர் மீண்டும் ஆர்வமுடன், “நவகோள்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சூரியனை சுற்றுகின்றன. இவற்றை தாங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள். உங்களையும் மீறி, சித்தர்கள் இதை கட்டுப்படுத்தினர் என்பதை நம்ப முடியவில்லையே?'' என நாரதர் கேட்க மகேஸ்வரர் புன்னகைத்தார்.

என்ன நாரதரே! சிவனடியார்களை குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள்? எம் செயல் எல்லாம் சித்தர்களின் செயல் என்பது தெரியாதா? சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு தெரியாதா? எனக் கேட்டார் பரமேஸ்வரன்.

பார்வதி தொடர்ந்தார். “நாங்கள் மனிதர்களுக்கு பல சோதனைகள் வைக்கிறோம். அதனை கடந்தவர்களால் மட்டுமே சித்தி அடைய முடியும். என்ன மகேஸ்வரரே நான் சொல்வது சரியா? எனக் கேட்க “பார்வதியின் சொல்லுக்கு மறுப்பேது?” என்றார் பரமேஸ்வரன்.

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் ஏழை குடும்பத்தில் பிறந்த இடைக்காடர் என்பவர் வறுமையைப் போக்க கால்நடைகளை மேய்த்தார். ஆனாலும் அவரது ஆழ்மனதில் இயற்கையை பற்றிய அறிய வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது.

பார்க்கின்ற கல், புல், செடி, கொடி, மரம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று என அனைத்தையும் ஆராய்ச்சி செய்தார். ஒருமுறை காட்டில் ஆடுகளை மேய்த்த போது அவரது உடலில் மின்னல் பாய்ந்தது. உடலுக்குள் ஏதோ ஒளி புகுந்தது போல உணர்ந்தார்.

வீடு திரும்பிய இடைக்காடர் பெற்றோரிடம் இதைக் கூற அவர்கள் சிரித்தனர். மின்னல் தாக்கினால் உயிரோடு இருக்க முடியுமா... என ஏளனம் செய்தனர். தன்னை யாரும் நம்பவில்லை என்ற வருத்தமுடன் இருந்த இடைக்காடர் முன்பு நவநாத சித்தர் தோன்றினார்.

“இயற்கையின் மீதுள்ள உன் ஆர்வத்தை நான் அறிவேன். இயற்கையின் அதிசயங்களை உனக்குக் காட்டுகிறேன்” எனக் கூறி வனத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு நட்சத்திரங்கள், கோள்கள் பற்றி விளக்கினார். நவநாத சித்தரிடம் உபதேசம் கேட்கும் போதெல்லாம் அவருடைய கண்களையே பார்த்ததால் (நயனதீட்சை) இடைக்காடர் பெரும் ஆற்றல் கிடைக்கப் பெற்றார்.

இதையறிந்த நவநாத சித்தர், “மகனே, நான் வந்த வேலை முடிந்தது. இனி மக்களை வளமுடன் வாழ வைப்பாயாக” எனச் சொல்லி மறைந்தார். நவநாத சித்தரிடம் தீட்சை பெற்ற இடைக்காடர் ஆடு மேய்க்கும் போது வானத்தை நோக்கி ஆராய்ச்சி செய்தார். அவர் கணித்தபடியே மழை பெய்தது, வெயில் அதிகரித்தது.

ஒருமுறை பூமியின் சுழற்சியையும், கோள்களின் அசைவையும், எண்களாக மாற்றி கணக்குப் போட்ட போது அதிர்ச்சியடைந்தார். சில மாதங்களில் ஒன்பது கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரவிருப்பதை அறிந்தார். அவ்வாறு வந்தால் 12 ஆண்டு பஞ்சம் வரும் என உணர்ந்தார். இடைக்காடர் முன்னெச்சரிக்கையாக வீட்டைச் சுற்றி வரகு தானியத்தை விதைத்தார். ஆடுகளுக்கு எருக்கு இலைகளையும், மாடுகளுக்கு ஊமத்தை இலைகளையும் உணவாக கொடுக்க ஆரம்பித்தார். ஏனெனில் இவை வறட்சி ஏற்பட்டாலும் வளரக் கூடியவை.

முதலில் ஆடு, மாடுகள் உண்ணாமல் தவிர்த்தாலும், நாள் செல்ல செல்ல இந்த இலைகளை சாப்பிடப் பழகின. சில மாதங்களில் ஏராளமான வரகு தானியத்தை அறுவடை செய்தார். அதில் ஒரு பாதியை சேற்றுடன் கலந்து தன் வீட்டின் சுவர் முழுவதும் பூசினார். மீதி பாதியை கரும்புச் சாற்றுடன் கலந்து தன் வீட்டின் உட்புறம் உள்ள சுவரில் பூசினார். ஏராளமான வாழைக் கிழங்குகளை வீட்டைச் சுற்றியுள்ள நிலத்தில் தோண்டி வைத்தார். அவை முளைத்து வரும் போது வெட்டி, துணியால் மூடி வைத்தார். இதை கண்ட ஊரார் கேலி செய்தனர்.

சில மாதங்கள் சென்றன. சூரியனின் உக்கிரம் அதிகமானது. நீர்நிலைகள் வற்றின. உணவு, நீர் இல்லாமல் அனைவரும் தவித்தனர். எருக்கு, ஊமத்தை இலையை சாப்பிட்டு வளர்ந்த ஆடுகளும், மாடுகளும் வெப்பம் தாங்காமல் தோலில் அரிப்பு ஏற்பட்டு சுவரை உரசின. உதிர்ந்த தானியங்களை சாப்பிட்டு பசியைத் தீர்த்துக் கொண்டன. இடைக்காடரோ தன் வீட்டு சுவரில் தட்டி வைத்த 'வரகு வெல்லம்' அடையை பசும்பாலில் கலந்து சாப்பிட்டு பசியை போக்கினார்.

இடைக்காடர் மட்டும் செழிப்பாக இருப்பதை அறிந்த மக்கள் அவரிடம் தஞ்சம் புகுந்தனர். வீட்டின் கொல்லைப்புறத்தில் வைத்த வாழைக் கிழங்குகளை தோண்டி, அதில் ஊறியுள்ள நீரை குடிக்கச் செய்தார். பலரும் அவர் கொடுத்த வரகு அடையை சாப்பிட்டு பிழைத்தனர். இதைப் பார்த்த ஒன்பது கோள்களும். அச்சு மாறாமல் ஒரே நேர் கோட்டில் இடைக்காட்டூரை அடைந்தன. கோள்களை எதிர்பார்த்து காத்திருந்த இடைக்காடர், “என்ன ஆச்சரியம். கோள்களான தங்களைக் கண்டு மகிழ்கிறேன். எங்கள் வீட்டிற்கு விருந்துண்ண வாருங்கள்” என வேண்டினார். அவர்களும் சம்மதித்தனர்.

ஊமத்தை இலை சாப்பிட்ட பசுவின் பாலையும், எருக்கு இலை சாப்பிட்ட ஆட்டுப் பாலையும் வெல்லத்தில் ஊறிய வரகையும் சேர்த்து காய்ச்சி பாயாசம் தயாரித்துக் கொடுத்தார். இடைக்காடரின் திட்டம் பற்றி அறியாமல், நவகோள்கள் வரகு பாயாசத்தை சாப்பிட்டு அதன் ருசியில் மயங்கினர். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் மயக்கம் வர ஒன்பது கோள்களும் தள்ளாடின. ஆளுக்கொரு திசையாக இடம் மாறி துாங்க ஆரம்பித்தன.

ஒன்பது கோள்களும் இடம் மாறியதால் மின்னல் வெட்ட மேகம் திரண்டு மழை பொழிந்தது. நீர்நிலைகள் நிரம்பின. துாங்கிக் கொண்டிருந்த ஒன்பது கோள்களும் கண் விழித்தனர். இடைக்காடர் திட்டமிட்டு செயல்பட்டு தங்களை இடம் மாறச் செய்ததால் மழை பொழிந்ததை உணர்ந்தனர். ஆனாலும் விதிப்படி ஒருமுறை நேர்கோட்டில் இருந்து மாறிய அவர்கள் மீண்டும் நேர்கோட்டுக்கு வர 12 ஆண்டு ஆகும் என்பதால் அவர் மீது கோபம் கொண்டனர். ஆனாலும் அவரின் புத்திகூர்மையை எண்ணி பெருமைப்பட்டனர்.

கோள்களை வணங்கிய இடைக்காடர், “மக்களின் நலனுக்காகவே இதைச் செய்தேன்” என்றார். “இடைக்காடரே! எதிர்காலத்தை முன்பே கணித்து மக்களைக் காப்பாற்றி விட்டீர்கள். மனிதர்களின் வாழ்வில் விளையாடும் எங்களுடன் விளையாடி பூமியை செழிப்பாக மாற்றிய தங்களின் பெயர் நிலைத்திருக்கும்” என ஆசியளித்து புறப்பட்டனர். பாம்பாட்டி சித்தருடன், இடைக்காடர் சதுரகிரியில் தவமிருந்தார். அங்கு வந்த கவுசிக முனிவரிடம் உபதேசம் பெற்று சித்து விளையாட்டில் தேர்ந்தார். நாமக்கோவை, 60 வருட பலன், சாரீரம், ஊசிமுனை, ஞானசாத்திரம் 70, கணித நுால்களை எழுதினார்.

“ஒன்பது கோள்களை இடம் மாற்றிய இடைக்காடர் பெரிய சித்தர்தான்” என்றார் நாரதர். பார்வதி குறுக்கிட்டு, “நாரதரே! பாண்டிய மன்னரின் மீது கோபித்துக் கொண்டு மதுரை சிவபெருமான் கோயிலை விட்டு இடைக்காடருடன் வெளியேறிய சம்பவம் தெரியுமா?” எனக் கேட்க வியந்து பார்த்தார் நாரதர்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us