தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 6

தெய்வத் திருமணம் - 6

தெய்வத் திருமணம் - 6


ADDED : டிச 11, 2025 09:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 09:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருகன் - வள்ளி திருமணம்

திருமாலின் மகள்களான அமிர்தவல்லி, சுந்தரவல்லியின் தவத்தைக் கண்டு மகிழ்ந்த முருகன், அவர்களைத் திருமணம் புரிய சம்மதித்தார். அதற்காக அமிர்தவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியைப் பூலோகத்திலும் பிறக்கச் செய்தார். வள்ளிக்கிழங்கு விளையும் காட்டில் சிவமுனி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு அழகான மான் ஒன்று வந்தது. முனிவர் அந்த மானை அன்புடன் பார்க்க, அது கருவுற்று பெண் குழந்தையைப் பெற்றது. வேட்டைக்கு வந்த வேடர் குலத் தலைவன் நம்பிராஜன் அந்தக் குழந்தையை எடுத்தான். வள்ளி எனப் பெயரிட்டு வளர்த்தான்.

வேடர் குலத்தில் பன்னிரண்டு வயதை அடைந்த பெண்கள், மலைப்பகுதியில் விளையும் தினை, கம்பு போன்ற தானியங்களைப் பறவைகள், விலங்குகளிடமிருந்து பாதுகாக்க காவலுக்குச் செல்வது வழக்கம். அதன்படி வள்ளியும் தினைப்புனத்திற்கு காவல் புரியச் சென்றாள். இந்நிலையில் காட்டிற்குச் சென்ற முருகப்பெருமான், தன்னை வேடனாக உரு மாற்றிக் கொண்டு, வில், அம்புடன் போய் நின்றார். அவரைப் பார்த்த வள்ளி, “தாங்கள் யார்? எங்கு வந்தீர்கள்?” எனக் கேட்டாள். வேடன் உருவில் இருந்த முருகன், “பெண்ணே, உன் மீது நான் அளவற்ற அன்பு கொண்டிருக்கிறேன். உன்னைத் திருமணம் புரிய விரும்புகிறேன்” என்றார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியான வள்ளி, “நான் சிறுவயதில் இருந்து முருகப்பெருமானையே திருமணம் செய்ய வேண்டுமென்று தவம் செய்கிறேன். தேவையில்லாமல் என் மீது ஆசை கொண்டு இங்கு வராதே” என வேடனை விரட்டினாள். அதைக் கேட்ட வேடன் உருவிலிருந்த முருகன், “வேடுவப் பெண்ணான உன்னை முருகப்பெருமான் எப்படி திருமணம் செய்வார்? தேவையில்லாத ஆசையை உன் மனதில் வளர்க்காதே” என்றாள்.

அந்த நேரத்தில் வள்ளியின் தந்தை நம்பிராஜனும், சில வேடர்களும் அங்கு வந்தனர். அவர்களைக் கண்டதும் வள்ளிக்குப் பயம் வந்தது. வேடனை அவர்கள் பார்த்து விட்டால், வேடனுக்குத் தண்டனை தருவார்களே என நினைத்த அவள், பரணுக்குப் பின்னால் மறைந்து கொள்ளச் சொன்னாள். முருகப்பெருமான் அவள் சொன்னபடி பரணுக்குப் பின்னால் சென்று, வேங்கை மரமாக மாறி நின்றார். தினை மாவு, பழங்கள், தேன் ஆகியவற்றை மகளுக்குக் கொடுத்தார் நம்பிராஜன்.

மறைந்திருக்கும் வேடனை பார்த்து விடுவாரோ என்ற பயத்துடன் இருந்தாள் வள்ளி. நம்பிராஜனுடன் வந்த வேடர்கள் புதிதாக வேங்கை மரம் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டனர். அவர்களில் சிலர் மரத்தை வெட்ட முயன்றனர். அதை தடுத்த நம்பிராஜன், “அந்த மரம் வள்ளிக்குத் துணையாக இருக்கட்டும்” என்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

அதுவரை வேங்கை மரமாக நின்ற முருகப்பெருமான், மீண்டும் வேடனாக மாறினார். அதைக் கண்ட வள்ளி, “உண்மையைச் சொல்லுங்கள், நீங்கள் வேடர் இல்லை, உங்களைப் பார்த்தால் அரசகுலத்தைச் சேர்ந்தவர் போல தோன்றுகிறது. எனக்கு ஏன் தொல்லை கொடுக்கிறீர்கள்?” எனக் கேட்டாள்.

அதற்கு முருகன், “நான் வேடர் குலத்தைச் சேர்ந்தவன்தான்” எனச் சொல்லி, அன்புடன் அவளைப் பார்த்தார். வேடன் உருவிலிருந்த முருகனைப் பார்த்து அவள், “நான் வேடர் குலத்தில் பிறந்த பெண். என்னுடன் நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை என் தந்தையோ, வேடர்களோ பார்த்தால் தண்டனை கிடைக்கும்” என எச்சரித்தாள்.

அதைக் கேட்ட முருகன், “பெண்ணே, உன்னைத் திருமணம் செய்யாமல் நான் போக மாட்டேன்” என்றார். வள்ளிக்குத் தன்னைக் கவர்ந்து கொண்டு போய் விடுவாரோ என்ற பயம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து சென்ற வள்ளியின் தந்தை நம்பிராஜன் மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட வள்ளிக்கு துணிச்சல் வந்தது. ஆனாலும் வேடனுக்கு தண்டனை கிடைக்குமோ என்ற பயமும் இருந்தது.

இந்நிலையில் முருகன் ஒரு முதியவராக மாறி நின்றார். அங்கு வந்த நம்பிராஜன் அவரைப் பார்த்து வணங்கி, “ஐயா, இந்த வயதான காலத்தில் இங்கு ஏன் வந்திருக்கிறீர்கள்? நான் உங்களுக்கு உதவட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு முருகன், “எனக்கு வேண்டிய பொருள் ஒன்று இந்தக் காட்டில் இருக்கிறது. அதை எடுத்துச் செல்லவே வந்தேன். பசியாக உள்ளதால் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா? என இந்த பெண்ணிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்றார்.

உடனே நம்பிராஜன் மகளிடம், “வள்ளி... இந்த பெரியவரின் பசி நீங்க உணவு கொடு” எனச் சொல்லிவிட்டு புறப்பட்டார். திணை மாவு, தேனும் பிசைந்து கொடுத்தாள். அதைச் சாப்பிட்டு முடித்த முருகன் குடிக்க தண்ணீர் கேட்டார். அருகிலுள்ள சுனை ஒன்றுக்கு அழைத்துச் சென்று நீரைப் பருக வைத்தாள். அதன் பிறகு அவளிடம், “பெண்ணே, நீ தந்த உணவால் பசியும் தாகமும் தீர்ந்து விட்டது. இப்போது உன் மீது அன்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. என்னைத் திருமணம் செய்தால் உலகமே போற்றும்படி வாழ வைப்பேன்” என்றார் முருகன்.

கோபமடைந்த வள்ளி, “இதை வேடர் குலத்தவர் யாராவது கேட்டால், உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இங்கிருந்து சென்று விடுங்கள்” எனச் சொல்லி விட்டு தினைப்புனத்தை நோக்கி ஓடினாள். அதனைக் கண்ட முருகன் தன் சகோதரர் விநாயகரின் உதவியை நாடினார். விநாயகர் யானையாக உருவெடுத்து வள்ளியை நோக்கி ஓடி வந்தார். யானை வருவதைக் கண்ட வள்ளி பயத்தால் திரும்பி ஓடி, முதியவர் உருவில் நின்ற முருகப்பெருமானிடம் சென்று, காப்பாற்ற வேண்டினாள். யானை அருகில் வந்ததும் அவள் முதியவர் உருவில் நின்ற முருகப்பெருமானைக் கட்டி அணைத்தாள்.

அதைக் கண்ட யானை திரும்பிச் சென்று காட்டிற்குள் மறைந்தது. சற்று நேரத்துக்குப் பின் கண் விழித்துப் பார்த்தாள் வள்ளி. அவளுக்கு முதியவர் உருவத்தை மறைத்து உண்மையான உருவத்தைக் காட்டினார் முருகப்பெருமான். தன் விருப்பம் போல முருகப்பெருமானே தன்னைத் தேடி வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தாள். அவளின் முற்பிறப்பை உணர்த்தி விட்டு அங்கிருந்து மறைந்தார்.

மறுநாள் முருகப்பெருமான் வேடன் உருவில் வந்து வள்ளியுடன் பேசிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட நம்பிராஜன், மற்ற வேடர்களிடம் வள்ளியுடன் நிற்பவனைத் தாக்குங்கள் என உத்தரவிட்டார். அவர்களும் அம்பு, ஈட்டியை முருகனை நோக்கி வீசினர். அவை அனைத்தும் முருகன் காலடியில் சென்று விழுந்தன. முருகப்பெருமான் அனைவருக்கும் தன் உண்மையான உருவத்தைக் காட்ட மகிழ்ச்சியுடன் வணங்கினர். பின்னர் தங்களின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, வேடர் குல வழக்கப்படி வள்ளியை முருகப்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்.

- திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us