ADDED : டிச 11, 2025 09:02 AM

கொங்கண சித்தர்
இல்லற வாழ்வும் துறவற வாழ்வும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. ஆகவே தான் தவம் செய்பவர்கள் பந்தபாசத்தை துறந்து 'கடவுளே கதி' என்றிருக்கின்றனர்.
“ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் பலர் தவநெறி வாழ்க்கை என்ன என்று தெரியாமல் இல்லற வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே ஆன்மிகத்திலும் பயணிக்கின்றனர். தவநெறி என்பது பதியாகிய கடவுளை அடைவதாகும். பாசத்தை நீக்கினால் மட்டுமே பதியை அடைய முடியும். மன்னராக சுகபோக வாழ்வை விடவும் முடியாமல், அதே நேரம் ஆன்மிக வாழ்விலும் ஈடுபட்டு தவம் செய்ய வேண்டும் என வந்த மன்னர்களை கொங்கணவர் புத்திமதி சொல்லி நாட்டுக்கே அனுப்பி வைத்தார். இந்த உண்மையை தெரிந்து கொள் நாரதா'' என்றார் மகேஸ்வரன்.
தன்னை விட வயதில் மூத்த ரிஷிகளின் ஆசியுடன் யாகம் செய்யும் முறைகளை கற்றார். ஒரு குகையில் அமர்ந்து பராசக்தியை நினைத்து, யாகம் செய்தார். ஜோதி ரூபமாக கவுதம மகரிஷி அங்கே வந்தார். கொங்கணருக்கு ஆசி அளித்து 12 ஆண்டு காலம் சமாதி நிலையில் இருக்கும் கலையைக் கற்றுக் கொடுத்தார்.
பின்னர் திருமூலரிடம் சீடராகச் சேர்ந்தார். வைத்திய முறைகளை அடிப்படையாகக் கொண்டு திருமூலர் ஏழு இலட்சம் சூத்திரங்களைக் கூறினார். அதை ஆயிரம் பாடல்களாக கொங்கணர் இயற்றினார். திருமூலரின் பாதம் பணிந்து சமயதீட்சை, நிர்வாண தீட்சை முறைகளை கற்றார். தன் குருநாதரான போகரிடமிருந்து கற்ற உலோகக்கலை மூலம் தாவரங்களில் என்னென்ன உலோகங்கள் உள்ளன என்பதை கொங்கணர் அறிந்தார். மூலிகைகளில் இருந்து செம்பை பிரிக்கும் முறையை அறிந்தார். மருந்துகள், குளிகை செய்யும் கலையை போகரிடம் கற்றார். குளிகையை உட்கொண்டு பரவெளியில் சஞ்சரித்தார்.
மருந்து செய்யும் போது ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் உலோகங்களை உருக்க வேண்டும், உலோகங்களை திரவமாக மாற்றும் போது ஆடி, ஆவணி மாதத்தில் கரைக்க வேண்டும், பற்பம், செந்துாரம் போன்ற சித்த மருந்துகளை புரட்டாசி, மார்கழியில் தயாரிக்க வேண்டும் போன்ற குறிப்புகளை கணித்துச் சொன்னவர் கொங்கண சித்தரே. இவரிடம் உலோகக்கலை பயிற்சியை கற்பதற்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட சீடர்கள் சேர்ந்தனர். இவரிடம் கடைசி சீடராக இருந்தவர் கடைப்பிள்ளை சித்தர்.
சதுரகிரி மலையில் கொங்கணர் தவநிலையில் இருப்பதை அறிந்த குறுநில மன்னர்கள் ஐந்து பேர் ஆசி பெற வந்தனர். அவரை வணங்கி, “எங்களுக்கு அரச வாழ்க்கை அலுத்து போனது. யோகநிலையைக் கற்று யோகியாக மாற விரும்புகிறோம்” என்றனர். கொங்கணரும் அவர்களை வாழ்த்தினார். “குடும்ப வாழ்வை விட்டு ஆன்மிக உலகத்திற்கு நுழைய விரும்புகிறீர்கள். தனித்தனியாக ஐந்து குகைகளை தேர்வு செய்து தினமும், ஆழ்நிலை தியானம் செய்யுங்கள்” எனக் கூற ஐவரும் குகையில் தங்கினர்.
ஆரம்பத்தில் ஆர்வமுடன் யோகப் பயிற்சிகளை செய்த அவர்களுக்கு நாளடைவில் விருப்பமில்லாமல் போனது. அதிகாரம் செய்து வாழ்வு நடத்திய நாம் இப்படி வீணாக வாழ்கிறோமே எனக் கவலைப்பட்டனர். இதை அறிந்த கொங்கணர், “மன்னர்களே, நீங்கள் இன்னும் கிரீடத்தை துறக்கவில்லை. மனதில் பாச, பந்தத்தை சுமக்கிறீர்கள். இந்நிலையில் எப்படி துறவியாக முடியும்? மனிதர் நிலையில் இருந்து சித்தர் நிலைக்கு மாறிய பிறகே துறவு வாய்க்கும். எந்த ஒரு செயலுக்கும் காலம் கனியும் வரை காத்திருங்கள். அதுவரை மனிதருக்குரிய ஐந்து கடமைகளை சரிவரச் செய்யுங்கள்” எனச் சொன்னதோடு அவர்களுக்கு ஐந்து கடமைகளை உபதேசம் செய்தார்.
1. முன்னோர்களை ஆண்டு தோறும் நினைத்து வழிபடுங்கள்.
2. வாழும் காலத்தில் பெற்றோர், ஆசிரியருக்கு உதவி செய்யுங்கள்.
3. பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
4. குடும்பத்தில் நடக்கும் நன்மை, தீமைகளுக்கு உறவினரை பங்கேற்கச் செய்யுங்கள்.
5. உங்களை நம்பி வந்த மனைவி, குழந்தைகளின் மனம் கோணாமல் தேவையானதை செய்யுங்கள்.
இவற்றைச் செய்வதே தவத்திற்கு ஈடானது என்றார். குறுநில மன்னர்களும் வணங்கி கொங்கணரின் பாதம் பணிந்தனர்.
கொங்கணர் குளிகை மூலம் திருவேங்கட மலைக்கு சென்று அங்கு தவம் புரிய ஆரம்பித்தார். திருவேங்கடத்தை ஆட்சி செய்த வலவேந்திரன் என்னும் குறுநில மன்னர் கொங்கணரின் சீடனாகி, அவரிடமிருந்து யோக வித்தைகளை கற்றார். தன்னுடைய பணிகளை சீடரிடம் தொடரச் சொல்லி விட்டு, திருப்பதியில் சமாதி நிலையை அடைந்தார். விரும்பும் போது மரணத்தை ஏற்பவர்கள் சித்தர்கள். ஆகவே சமுதாய நெறிமுறைக்கு அப்பாற்பட்டு செயல்படுவர். பெரும்பாலும் சமூகத்திடம் இருந்து விலகியே இருப்பர். சமய எல்லையைத் தாண்டி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சித்தர்கள் வழிபாடு செய்வர். அதனால் யோகம், ஞானத்தை தங்களின் கண்களாக போற்றினர்.
“வழிபாட்டு முறைகளை சித்தர்கள் ஏற்கவில்லை என்பது முரணாக உள்ளதே மகேஸ்வரா... அவர்களில் சிலர் வழிபாட்டு முறையை பின்பற்றவும், சிலர் விலக்கவும் செய்தனர். சிலர் உருவ வழிபாட்டை எதிர்த்தனர். சித்தருக்குள் ஏன் இந்த முரண்பாடு... எனக்கு புரியவில்லை” என நாரதர் கேட்க மகேஸ்வரன் புன்னகைத்தபடி தொடர்ந்தார். “சித்தர்களின் வாழ்க்கை முறை சாதாரண மனிதர்களுக்கு புரியாது. அதனால்தான் சித்தர்கள் சமுதாயத்தை விட்டு விலகி இருந்தனர். ஒன்றே குலம் என்று சொன்ன திருமூலரும், தண்டாயுதபாணி என்னும் பெயரில் நவபாஷாண முருகன் சிலை வடித்த போகரும் சித்தர்கள்தான். சித்தர்களின் விளையாட்டு வித்தியாசமானது நாரதரே” என விளக்கம் அளித்தார் மகேஸ்வரன்.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
90030 00250

