ADDED : ஏப் 29, 2026 05:06 PM

கருட பகவான் - ருத்திரை, சுகீர்த்தி திருமணம்
காசியப முனிவரின் பதின்மூன்று மனைவியரில் கத்ரு, வினதா இருவரும் தங்களின் குழந்தைகளை முட்டையில் இருந்து பெற வேண்டுமென விரும்பினர். கத்ரு, தனக்கு ஆயிரம் குழந்தைகள் பிறக்க வேண்டுமென ஆசைப்பட்டாள். வினதா, தனக்கு இரண்டு குழந்தைகள் பலமுள்ளவர்களாக பிறந்தால் போதும் என நினைத்தாள். 'அவர்களின் விருப்பம் நிறைவேறும்' என உறுதியளித்தார்.
அதன் பின் கத்ரு விருப்பப்படி, அவளுக்கு ஆயிரம் முட்டைகளில் இருந்து ஆயிரம் நாகர்கள் பிறந்தனர். வினதாவின் இரண்டு முட்டைகளில் இருந்தும் குழந்தைகள் தாமதமாக பிறந்தன. பொறுமை இழந்த வினதா, ஒரு முட்டையை உடைத்துப் பார்த்தாள். அந்த முட்டை முழு வளர்ச்சி பெறாததால் அதில் இருந்து வெளிவந்த உருவம் தலை முதல் இடுப்பு வரை பாதி மனித வடிவில் இருந்தது.
சகோதரிக்கு ஆயிரம் குழந்தைகள் பிறந்தும், தனக்கு குழந்தை பிறக்கவில்லையே என அவசரப்பட்டு தன்னை குறையுடையவனாகப் பிறக்க வைத்த தாய் மீது குழந்தைக்கு கோபம் வந்தது. குறையுடையவனாகப் பிறக்க வைத்த தாய், தன் சகோதரியிடம் அடிமையாக இருக்க வேண்டும் எனச் சாபமிட்டது.
பின்னர் அந்தக் குழந்தை 'அருணன்' என்ற பெயரில் தாய் வினதாவிடம் வளர்ந்தது. நீண்ட காலத்திற்குப் பின்பு, இன்னொரு முட்டையில் இருந்து ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தன்று கருடன் பிறந்தது.
ஒருநாள் கத்ருவும், வினதாவும் அவரவர் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர். அப்போது வானத்தில் இந்திரனின் உச்சைச்சிரவம் என்ற குதிரை சென்று கொண்டிருந்தது. இதை இருவரும் பார்த்தனர். அந்தக் குதிரையின் வால் கருப்பு நிறம் என நாகர்களின் தாயான கத்ரு சொன்னாள். அருணன், கருடனின் தாயான வினதா, அந்தக் குதிரையின் வால் நிறம் வெள்ளை என்றாள்.
தாங்கள் சொல்வதே சரி என இருவரும் சொல்ல, அவர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது. இதில் தோல்வி அடைபவர், வெற்றி பெற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
இதற்கிடையே இந்திரனின் குதிரை பூமியை நோக்கி நெருங்கி வரத் தொடங்கியது. அப்போது கத்ருவின் குழந்தைகளான கருப்பு நிறப் பாம்புகள், தங்களின் தாய் தோல்வி அடையக் கூடாது என எண்ணி, அந்தக் குதிரையின் வெள்ளை நிற வாலில் சுற்றிக் கொண்டன. அதனால் குதிரையின் வால் முழுதும் கருப்பு நிறமாகத் தெரிந்தது.
உண்மையை அறியாமல் கத்ருவிடம் தோல்வியை ஒப்புக் கொண்டாள் வினதா. தன் மகன்களான அருணன், கருடன் ஆகியோருடன் கத்ருவின் அடிமையானாள். தாய்க்குக் கொடுத்த சாபத்தால் அருணனும் அடிமையாக வாழ நேர்ந்தது.
பெரியவனாக வளர்ந்த கருடன், கத்ருவிடம் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கும்படி வேண்டினான். அவள் தேவ உலகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து கொடுத்தால் விடுவிப்பதாக சொன்னாள். கருடனும் தேவர்களுடன் போரிட்டு, அமிர்தக் கலசத்துடன் திரும்பினார்.
அதை அறிந்த திருமால் வழியில் கருடனை மறித்தார். நாகங்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தால் அவை மரணமின்றி வாழ்ந்து, மனிதர்களையும், தேவர்களையும் அழித்து விடும். அமிர்தக் கலசத்தை இந்திரனிடம் திருப்பிக் கொடு என அறிவுரை கூறினார். ஆனால் கருடன் அதை ஏற்கவில்லை.
அமிர்தக் கலசம் இருந்தும், அதை அருந்தி மரணத்தை வெல்ல வேண்டும் எனக் கருதாமல் தாய் மீதுள்ள அன்பால் அவரை விடுவிக்க விரும்பும் கருடன் மீது திருமாலுக்கு இரக்கம் ஏற்பட்டது. 'அமிர்தக் கலசத்தை என்னிடம் கொடு. விரும்பிய வரத்தைக் கேள் தருகிறேன்' என்றார் திருமால்.
அப்போது கருடன் ஆணவத்துடன், 'திருமாலே, தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என கேளுங்கள், தருகிறேன்' என்றார். அதனைக் கேட்டுச் சிரித்த திருமால், “எனக்கு வாகனமாக இரு' என்றார்.
உலகிற்கே அருள் புரியும் கடவுளான திருமால், தன்னிடம் வரம் கேட்டவுடன் கருடனுக்கு ஆணவம் குறைந்தது. என் தாயை விடுவித்ததும் உங்களுக்கு வாகனமாக வருகிறேன் என வாக்களித்தார். தான் கொண்டு வந்த அமிர்த கலசத்தை நாகர்களின் முன்பு, அங்கிருந்த தர்ப்பைப்புல்லின் மீது வைத்தார். அதைக் கண்டதும் வினதா, கருடன், அருணன் மூவரையும் விடுவித்தாள் கத்ரு.
கத்ருவின் அறிவுரைப்படி, கடலில் குளித்து விட்டுக் கலசத்தில் இருந்த அமிர்தத்தை அருந்த நாகர்கள் வந்தனர். அப்போது அங்கு வந்த இந்திரன் கலசத்தை எடுத்துக் கொண்டு தேவ உலகம் புறப்பட்டார். அதனால் ஏமாற்றமடைந்த நாகர்கள், கலசம் இருந்த தர்ப்பைப் புல்லை நக்கினர். அதனால் பாம்பு இனத்திற்கு நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டன. அன்று முதல் நாகர்கள், கருடனுக்கு இடையே பகை ஏற்பட்டது.
அடிமைப் பிடியில் இருந்து மீண்ட வினதா தன் மகன் கருடனைப் பாராட்டினாள். கருடனின் சகோதரன் அருணன், சூரியனின் தேரோட்டியாகப் போய்ச் சேர்ந்தான். திருமாலுக்கு அளித்த வாக்கின்படி, கருடனும் அவரது வாகனமாகப் போய்ச் சேர்ந்ததால் திருமால், மகாலட்சுமியும் மகிழ்ந்தனர்.
கருடனின் சேவையால் மகிழ்ந்த இருவரும் கருடனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். வைகுண்டத்தின் காப்பாளரான ஜயன், விஜயனிடம் தகுதியான மணமகளைத் தேடுமாறு கூறினர்.
தக்சதா முனிவரின் மகள்களான ருத்திரை, சுகீர்த்தி இருவரும் கருடனுக்குப் பொருத்தமானவர்கள் என அறிந்து வந்து திருமாலிடம் அவர்கள் கூறினர். அதன் பின் கருடனின் தந்தை காசியபர், ருத்திரை, சுகீர்த்தியின் தந்தை தக்சதா முனிவருடன் பேசி திருமணத்தை நடத்த முடிவு செய்தார் திருமால். அதன்படி மார்கழி மாதத்தில் ஒரு நன்னாளில், தேவர், முனிவர்கள் முன்னிலையில் கருடன், குத்திரை, சுகீர்த்தி திருமணத்தை திருமாலும் மகாலட்சுமியும் நடத்தினர்.
திருமால், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரைச் சுமந்து செல்லும் வலிமை மிக்கவரான கருடனை வழிபட்டால் நோய் தீரும். தன் மனைவிகளான ருத்ரா (தீமையை அழிப்பவர்), சுகீர்த்தி (நற்பலன் தருபவர்) ஆகியோரின் துணையுடன் தீமையை அழித்து நன்மை வழங்குகிறார்.
-திருமணம் தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925
