தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 26

சித்தர்களின் விளையாட்டு - 26

சித்தர்களின் விளையாட்டு - 26


ADDED : ஏப் 29, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 05:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதஞ்சலி சித்தர்

'மகேஸ்வரரே! யோகக்கலையின் முன்னோடி பதஞ்சலி சித்தரைப் பற்றிச் சொல்லுங்கள்' என வேண்டினார் நாரதர்.

சப்த நட்சத்திரங்களில் ஒன்றான அத்ரி முனிவருக்கும், அனுசூயைக்கும் பிறந்தவர் பதஞ்சலி முனிவர். பிறக்கும் போதே அனல் காற்றுப் போல் சூடாக மூச்சு விடுவதையும், கைகளை கூப்பி அஞ்சலி முத்திரையுடன் இருப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் அவருடைய பெற்றோர், 'குழந்தையின் அருகில் சென்றாலே மூச்சுக் காற்றின் வெப்பம் தாங்க முடியவில்லையே' என கடவுளிடம் முறையிட்டனர்.

'கவலைப்படாதீர்கள். இந்தக் குழந்தை உலக மக்களுக்கு மூச்சைக் கட்டுப்படுத்தும் யோகக் கலையை கற்றுத் தரும் முனிவராக விளங்கும். பாரதத்தின் யோகக் கலையை நன்றாகக் கற்றுக் கொள்ள நந்தி தேவரிடம் சீடனாக அனுப்புங்கள்' என அசரீரி ஒலித்தது.

பெற்றோரும் தந்திதேவரை வணங்கி பதஞ்சலியை அவருடைய பாடசாலையில் மாணவனாகச் சேர்த்தனர். நந்திதேவர் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தைக் கற்றுக் கொடுக்க ஆர்வமுடன் கற்றார். நந்தியின் எட்டு சீடர்களில் பதஞ்சலியும், திருமூலரும் முதன்மையானவர்கள். இருவரும் ஒன்றாக யோகக் கலையைக் கற்றுத் தேர்ந்தனர்.

திருமூலர் திருமந்திரத்தை இயற்றிய போது பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை இயற்றினார். இன்று பாரதத்தின் யோகக்கலை உலகம் முழுவதும் பரவிப் பெருமை பெற பதஞ்சலியே காரணம்.

நாட்கள் செல்லச் செல்ல பாரதத்தின் தொன்மையான யோகக்கலையை பதஞ்சலி கற்றுத் தேர்ந்தார். யோக சூத்திரங்களை சிறப்பாக அறிந்து கொண்டார். இயல்பாகவே மென்மையான உடல்வாகு உடையதால் பாம்பைப் போல் உடம்பை வளைக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.

குருநாதரான நந்தியுடன் ஆதிசேஷனின் அருளும் கிடைக்க, பதஞ்சலி அனைவருக்கும் யோகக்கலையைக் கற்றுத் தரும் அளவு பெருமை பெற்று நந்தியின் ஆணைப்படி யோக குருவாக உயர்ந்தார்.

இயல்பாகவே வழுவழுப்பு, மினுமினுப்பு உடைய அவருடைய தோலானது ஆசனங்கள் செய்யும் போது மேலும் வெப்பமடைந்து வெளிச்சத்தை உமிழ ஆரம்பித்தது. எதிரில் நிற்பவர் பார்க்க முடியாத அளவிற்கு வெளிச்சம் வரவே, அவர்களின் கண்கள் கூசின. அவர் மூச்சுக்காற்றைத் தாங்க முடியாமல் சுற்றியுள்ள சீடர்கள் வெகுதுாரம் செல்ல ஆரம்பித்தனர்.

அப்போது அங்கே வந்து அவரது குருநாதர் நந்தி, கனமான திரைச்சீலையை பதஞ்சலிக்கும், சீடர்களுக்கும் இடையே திரையிட்டபடி கற்றுக் கொடுக்கும்படி பதஞ்சலியிடம் ஆணையிட்டார்.

அதே போல பதஞ்சலியும் சீடர்களுக்கு யோகக்கலையை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். 1000 சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தலைவனாக கவுடபாதர் என்ற சீடனை நியமித்தார்.

பதஞ்சலியை யாரும் பார்த்திராதபடி வகுப்புகள் நடக்கும் போது திரைச்சிலை இடுவதும், வகுப்புகள் முடிந்ததும் திரைச்சீலையை நீக்குவதும், மாணவர்களுக்குத் தேவையான மூலிகை கஷாயம், இயற்கை உணவுகளைச் சேகரித்து வழங்குவதும் கவுடபாதரின் அன்றாடப் பணிகளாக இருந்தன.

ஒருமுறை மாணவர்களுக்கு யோகப் பயிற்சியின் இறுதி நாளன்று யோகக் கலையின் வீரபத்ராசனத்தைக் கற்றுக் கொடுக்கப் பதஞ்சலி தயாரானார். இது உஷ்ணமான ஆசனம். பதஞ்சலி வகுப்பை ஆரம்பித்ததும் சீடர் கவுடபாதர் திரையிட்டு மாணவர்களை மறைத்தார். பின் அவர்களுக்குத் தேவையான மூலிகை கஷாயம், உணவு தயார் செய்ய வெளியே தழ் சென்று விட்டார். திரைக்கு எதிரில் அமர்ந்திருந்த மற்ற 999 சீடர்களும் கவுடபாதர் மீது பொறாமை கொண்டனர். நம்மால் பதஞ்சலியைப் பார்க்க முடியவில்லை.

விரும்பி வேலை செய்தால் உழைப்பது ஒன்றும் கடினம் அல்ல.

கவுடபாதர் திரையிட்டு மறைக்கிறார். ஆனால் அவர் மட்டும் அருகிலேயே இருக்கிறார். இன்று எப்படியாவது வகுப்பு நடக்கும் போது நம் குருநாதர் பதஞ்சலியைப் பார்த்து விட வேண்டும் என முடிவு செய்தனர்.

பதஞ்சலி தொடர்ந்து வகுப்பு நடத்தும் போது, ஒரு சீடர் மட்டும் எழுந்து திடீரென திரையை விலக்கிப் பதஞ்சலியை அனைவரும் பார்க்கும்படி செய்தார். அப்பொழுது அந்த விபரீதம் நடந்தது.

அதே நேரம் யோகக்கடலில் மூழ்கிய பதஞ்சலி வீரபத்ராசனத்தின் உச்சகட்டத்தில் ஆதிசேஷன் உருவில் உஷ்ணமான அக்கினியை மூச்சாக விட்டுக் கொண்டிருக்க, எதிரில் அமர்ந்திருந்த அனைத்து சீடர்களும் பதஞ்சலியின் சுவாசக்கனல் தாங்காமல் சாம்பலாயினர்.

அனைவருக்கும் மூலிகை கஷாயம் தயாரித்து எடுத்து வந்த கவுடபாதர் விபரீதம் உணர்ந்து உடனே திரைச்சிலையை மூடி வகுப்பு முடியும் வரை காத்திருந்து நடந்ததை பதஞ்சலியிடம் சொல்லி அழுதார்.

வருந்திய பதஞ்சலி, 'குருவின் ஆணையை மீறியதால் விதியின் பயனால் அவர்கள் சாம்பல் ஆயினர். அதுபோல் என்னுடைய ஆயிரம் சீடர்களில் நீயே முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்பது விதி. இதை யாராலும் மாற்ற முடியாது. உனக்கு அனைத்தையும் கற்றுத் தருகிறேன்' எனக் கூறினார். அதுபோல் தான் கற்றுத் தேர்ந்த யோகக்கலையை கவுடபாதருக்குக் கற்றுக் கொடுத்தார்.

சிவ தாண்டவத்தின் போது ஏற்படும் ஒலி அனைவரையும் மதிமயங்கச் செய்யும். சிவராத்திரியன்று உடுக்கை ஒலியுடன் சிவதாண்டவத்தைக் காண்பது கண் கொள்ளாக் காட்சி. அப்போது ஏற்படும் உடுக்கை ஒலி மூலமாக யோக நிலைகளை சிவபெருமான் சூட்சுமமாகச் சொல்லி வந்தார்.

இதை பாணினி முனிவர் சமஸ்கிருதத்தில் எழுதினார். அதனை வெளியிட சிவபெருமானிடம் அனுமதி வேண்டிய போது அதனைப் படித்துப் பார்த்த சிவன் அனைவருக்கும் புரியும்படி இது முழுமையாக எழுதப்படவில்லை' என உணர்ந்தார். அதைத் தொடர்ந்து ஆதிசேஷன் மூலம் பதஞ்சலிக்கு கட்டளையிட்டார். அதை ஏற்று சிவனின் நடனத்தைக் காண விரும்பி சிதம்பரம் வந்தார் பதஞ்சலி, அங்கு திருமூலருடன் சிவ தாண்டவத்தைக் கண்டுகளித்தார். ஆனந்தத் தாண்டவத்தை கண்டு களித்த பதஞ்சலி, சிதம்பரம் கோயிலில் உள்ள தீட்சிதர்களுக்குச் ஆகம முறையைக் கற்றுக் கொடுத்தார்.

உடுக்கை சத்தத்தில் இருந்து தான் கற்றுக் கொண்ட மந்திரம் வாசி, யோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட யோகக்கலையை கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக யோகசூத்ரா, பதஞ்சலி தந்த்ரா என்ற ஆயுர்வேத நுால்கள், வாதசூத்திரம் என்ற மருத்துவ நூல்களை எழுதினார்.

ஆதிசேஷனின் துணையுடன் ராமேஸ்வரம் வந்தால் அங்கு காட்சியளிப்பதாக அசரீரி மூலம் சொல்ல, ஆதிசேஷன் துணையுடன் அஞ்சலி முத்திரையுடன் சிவனின் அருள் வேண்டி தவத்தில் ஈடுபட்டார். பின்னர் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் நடராஜர் சிலைக்குப் பின்புறம் 12 சூட்சுமம் நிறைந்த பத்மாசன நிலையில் முக்தி பெற்றார்.

வட இந்தியாவில் ஆயுர்வேத முனிவராகவும், தென் இந்தியாவில் சித்தராகவும் பதஞ்சலி வணங்கப்படுகிறார்.

'பாரதத்தின் பழமையான யோகக்கலையைச் சித்த மருத்துவம், ஆயுர்வேதத்தின் அடையாளமாக நிலைநிறுத்தி கோயில்களில் எல்லாம் பல சிற்பங்கள், ஓவியங்களில் யோகக் கலையை வெளிப்படுத்தியது எல்லாம் மகேஸ்வரரின் திருவிளையாடலே ' என முடித்தார் பார்வதி.

'தண்டு வட நரம்பைச் சுற்றி பிணைந்த பாம்பாக நரம்புக் கூட்டத்தையும், மூளையையும் இணைத்து, அவற்றை முறையான சுவாசப் பயிற்சியால் கட்டுப்படுத்தி யோகக் கனலை ஆறு ஆதாரத்திலும் அடக்கி, அண்டப் பெரு வெளியை அடையும் யோகக்கலையைக் கற்றுக் கொடுத்த பதஞ்சலியை ஆதிசேஷனின் அம்சமாக அவதரிக்க வைத்த மகேஸ்வரரே, தங்களை வணங்குகிறேன்' என்றார் நாரதர்.

'என்ன நாரதரே, பதஞ்சலியின் பெருமையைக் கண்டு பிரமித்து விட்டீரே, பாம்புகள் யோகக்கலையின் அடையாளம் மட்டுமல்ல. விஷத்தின் அடையாளமும் கூட. படம் எடுத்து, மூச்சுக்காற்றால் சிறி, விஷத்தைக் கொட்டத் தயாராக இருக்கும் பாம்பை பார்த்ததில்லையா? இருந்துமா, பாம்பைப் பார்த்துப் பெருமை கொள்கிறீர்' என பூடகமாகக் கேட்டார் பார்வதி. அதற்கு, 'தாயே! நீர் இருக்க பாம்பைப் பார்த்து நான் ஏன் பயப்படவேண்டும். அடுத்து நீங்கள் சொல்லப் போகும் சித்தர் யார் என புரிந்து கொண்டேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்றார் நாரதர்.



விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us