ADDED : ஏப் 29, 2026 05:03 PM

திருமழிசையார் போலே
'கிருஷ்ணவேணிம்மா... எதையோ யோசிக்கிறது போல இருக்கு' என வேகமாக வந்து அவர் அருகே நிதானித்தார் அமிர்தம்.
'என்ன தான் யோசிச்சாலும் திருமழிசையார் போல ஆராய முடியுமா என்ன?'
'அட! இன்னிக்கி உடனே வாக்கியத்துக்குள்ள வந்திட்டீங்க போல'
'ஆமா! திருக்கோளூர் பெண் பிள்ளையின் 13வது வாக்கியமா, 'ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலேனு' சொன்னாளே அது பற்றி பார்ப்போம். திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கு இந்த திருமழிசை. அங்கு பார்கவ முனிவர் தவம் செய்தார். கனகாங்கி என்ற பெண்ணால அவருடைய தவம் கலைந்தது. அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் இருவருக்கும் குழந்தை பிறந்தது. ஆனால் அது குழந்தையா இல்லாம பிண்டமாக இருந்தது. அந்த பிண்ட வடிவ ஆண் குழந்தையை ஒரு கோயிலில் கிடத்தி விட்டு வெளியேறினர்.
அங்கிருந்த மகாலட்சுமி தாயார் கருணையுடன் பிண்டத்தின் அங்கங்களை வளர்ச்சி பெறச் செய்து குழந்தையாக்கினார். அதை கண்டெடுத்த திருவாளன், பங்கையச்செல்வி தம்பதி அன்புடன் வளர்த்தனர். இவர்களுக்கு பிற்காலத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு 'கனிகண்ணன்' என பெயர் சூட்டினர். இரு குழந்தைகளையும் சிறப்பாக வளர்த்தனர்.
இதற்கிடையே திருமழிசையான் சாஸ்திரங்களை கற்று வளர்ந்தார். உலகில் பல மதங்கள் இருக்கின்றன. அதனால் உலகத்தை படைத்த கடவுள் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது அவருக்கு.
அதனால் கடும் தவம் புரிந்தும் பல இடங்களுக்கு அலைந்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பவுத்தம், சமண தத்துவங்களை படித்து தெளிந்தார், அதில் திருப்தி ஏற்படவில்லை. பின் சைவ தத்துவங்களை ஆராய்ந்தார். அந்த நேரத்தில் பேயாழ்வார் இவரின் ஆராய்ச்சி குணத்தை கண்டு இவருக்கு முழுமுதற் கடவுளை பற்றி புரிய வைக்க விரும்பினார்.
திருமழிசையான் வரும் வழியில் பேயாழ்வார் செடிகளை தலைகீழாக நட்டார். இலைகள்
கீழ்ப்பக்கமாகவும் வேர்ப்பகுதி வானத்தை பார்த்துக் கொண்டும் இருப்பது போல செய்தார். ஒரு குடத்தை எடுத்து அதில் நிறைய ஓட்டைகளை போட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற முயற்சி செய்தார். இந்த செயலைப் பார்த்த திருமழிசையான், 'தலைகீழாக அனைத்தையும் செய்கிறீரே' என சிரித்தபடி கேட்டார்.
'பரம்பொருள் யார்; அவனை எப்படி அடைய முடியும் என பித்து பிடித்து திரிபவன் நீ தானே' என்றார் பேயாழ்வார். அவரையே குருவாக ஏற்றார் திருமழிசை. வேத கருத்துக்களையும் பரம்பொருளை பற்றிய தெளிவையும் எடுத்துச் சொன்னார் பேயாழ்வார்.
அந்த பரம்பொருளை நீர் கண்டது உண்டா என திருமழிசையான் கேட்டபோது, 'பரம்பொருளை என்னுள் பார்த்தேன் எனக்கு வெளியில் பார்த்தேன், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயத்தில் பார்த்தேன், கோவிந்தா என்ற நாமத்தில் பார்த்தேன், ஏன் உன் உள்ளத்தில் பார்த்தேன், அவன் திருவரங்கத்தில் கிடக்கிறான் என்னுள் நிற்கிறான் என்றார் பேயாழ்வார். அது முதல் திருமழிசையான் பெருமாளே கதி என மாறினார். அதன்பின் திருமழிசை ஆழ்வாராகிப் போனார். அவரைப் போல நான் எதையும் ஆராய்ந்து தெரிந்து கொள்ளவில்லையே சுவாமி. அதனால் இந்த ஊரை விட்டு செல்கிறேன் என இயலாமையை ராமானுஜரிடம் சொல்கிறாள் பெண்பிள்ளை என முடித்தார் கிருஷ்ணவேணி.
'நீங்க சொன்ன திருமழிசை ஆழ்வாரே சைவ மதத்தை தழுவிய போது சிவன் மீது பாடல் பாடியதாகவும், அப்போது அவரை சிவவாக்கியர்னு கூப்பிட்டதா சொல்றாங்க' என்றார் அமிர்தம்.
'அப்படியா! தெரியாது. மேல சொல்லுங்க' என ஆர்வமுடன் கேட்டார் கிருஷ்ணவேணி.
'சிவவாக்கியரும், திருமழிசை ஆழ்வாகும் ஒருவரே எனச் சொல்றாங்க. வேறு வேறு காலத்தில் வாழ்ந்ததாவும் சொல்றாங்க. திருமழிசையில் பார்கவ முனிவர் செய்த தவத்தை கலைக்க தேவர்கள் தேவமங்கை ஒருத்தியை அனுப்ப, அவள் தவத்தை கெடுத்து குழந்தை ஒன்றை பெற்றாள். அக்குழந்தை தன் வளர்ப்புத் தந்தையின் வைணவ மதத்தை தழுவி திருமழிசை ஆழ்வான் என பெயர் பெற்றது. பின்பு சைவத்தை தழுவி சிவவாக்கியர் ஆனார் என்பது சைவர்களின் கருத்து. சிவனை பற்றி பாடியதால் இவரை சிவவாக்கியர் என்றனர். ஒரு சமயம் விஸ்வநாதரை தரிசிக்கும் ஆவலில் காசிக்கு சிவவாக்கியர் வந்தார். அங்கிருந்த செருப்பு தைக்கும் சித்தர் ஒருவர் தனக்கேற்ற சீடனை எதிர்பார்த்து காத்திருந்தார்.
சித்தரைப் பார்த்த சிவவாக்கியர் அவரது மகிமையை மனதார உணர்ந்தார். சித்தருக்கும். இவர் தான் நமக்கான சீடர் எனத் தோன்றியது. இருந்தாலும் சிவவாக்கியரின் மனநிலையை அறிய தன்னிடம் இருந்த காசைக் கொடுத்து அதை கங்கை நதியிடம் கொண்டு போய் சேர்க்குமாறு கூறினார். அத்துடன் பேய் சுரைக்காய் ஒன்றைக் காட்டி இது கசப்பாக உள்ளது. இதன் காப்பை நீரில் கழுவி வருமாறும் சொன்னார்.
சிவவாக்கியர் தன் குருநாதர் தந்த காசு. பேய்ச் சுரைக்காயை எடுத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தார். சுழலுடன் வேகமாக ஓடிய கங்கையில் இருந்து அப்போது வளையல் அணிந்த ஒரு பெண்ணின் கை வெளியே நீட்டியது. காசுகளை சிவவாக்கியர் வைத்ததும் மீண்டும் அந்த கை மறைத்தது. பின்னர் தான் கொண்டு வந்த பேய்ச் சுரைக்காயையும் கங்கை நீரில் கழுவிக் கொண்டு வந்தார் சிவவாக்கியர்.
இதன் பின் மீண்டும் என் காசுகளை கங்கையிடம் வாங்கி வா என மறுபடியும் உத்தரவிட்டார் சித்தர். அதன்படி அவரும் கேட்க கங்கை கைகளை நீட்டி காசை கொடுத்தாள். இந்த செயல் மூலம் சிவவாக்கியரின் மனதில் எந்த சலனமும் ஏற்படாததைக் கண்டு அவரை சீடராக ஏற்றார். இந்த சுரைக்காயை சமைத்துக் கொடுக்கும் பெண்ணையே நீ திருமணம் செய் எனச் சொல்லி அவரை ஊருக்கு அனுப்பி வைத்தார் என்றும் கதை உண்டு. அதன் பின் சித்தராகவே உருமாறி சிவனையே நினைத்து உருகி பாடல்கள் பல பாடினார். அதுவே சிவவாக்கியம்'. வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல்கள் எழுதினார். முதலில் சிவவாக்கியராக இருந்து திருமழிசை ஆழ்வாராக மாறினாரா இல்லை திருமழிசை ஆழ்வாராக இருந்து சிவவாக்கியராக மாறினாரா எனத் தெரியவில்லை. சிவவாக்கிய பாடல்களும் திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்களின் எழுத்து நடையும் ஒத்திருப்பதாக ஆய்வாளர் கூறுகின்றனர் என முடித்தார் அமிர்தம்.
'அப்ப ஒரே நபர் சைவத்தில் இருக்கும் போது சிவனையும் வைணவத்தை தழுவிய போது பெருமாளையும் பாடியதாக சொல்றீங்க. இதிலிருந்து என்ன தெரியுது' என நடையின் வேகத்தை குறைத்து அமிர்தம்மாவை கவனித்தார் கிருஷ்ணவேணி.
சிறிது நேரத்துக்கு மவுனம் நிலவியது.
“காட்சி ஒன்றாக இருந்தாலும் பார்க்கும் நம் கண்கள் இரண்டாக இருப்பதில்லையா. அதுபோலத்தான் இதுவும். இரண்டையும் மோத விட்டுப் பார்க்காமல் ஆராய்ந்து பார்த்திருக்கிறார் என மனசுக்கு படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவர் வாயில மண்ணுன்னு சொல்வாங்களே... அதோட அர்த்தம் விளங்குறாப்ல இருக்குது' என நிதானமாகச் சொன்னார் அமிர்தம்.
பதிலுக்கு கைதட்டி ஆமோதித்தார் கிருஷ்ணவேணி. சிவனைப் பற்றி சொல்ல கூடிய லிங்க புராணத்தில் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளை பற்றியும் சொல்லப்பட்டிருக்கு. அதே போல பெருமானின் பெருமையைப் பேசும் பாகவதத்தில் சிவனின் பஞ்சாட்சரம் பற்றி சொல்லியிருக்காங்க, ம்.. இன்னைக்கு கொஞ்சம் சப்ஜெக்ட் சீரியஸா போனா மாதிரி இருந்ததால, மூளை சூடான மாதிரி உணர்வு வருது. சரி, அடுத்த வாக்கியம் என்னன்னு சொல்லுங்க. அது நம்மை இலகுவாக்குதான்னு பார்க்கலாம்.'
'அவன் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே' என்பதுதான் அடுத்த வாக்கியம்.
'இப்ப நீங்க எந்த ஆழ்வாரப் பத்தி சொல்றீங்க?'என இழுத்தார் அமிர்தம்.
'இதோ பெண் பிள்ளையை கேட்டுட்டு வந்து அடுத்த சந்திப்பில் சொல்றேனே. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுங்க' என சிரித்தபடி வீடு நோக்கி நடந்தார் கிருஷ்ணவேணி.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
