தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 4

பச்சைப்புடவைக்காரி - 4

பச்சைப்புடவைக்காரி - 4


ADDED : ஏப் 29, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 05:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம்

கோவையில் ஒரு வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வார்த்தைகள் வாதங்களாகி, வாதங்கள் சண்டையில் முடிந்து விட்டது. உறவை முறிக்க வேண்டாம் என நினைத்து, 'பிறகு பேசலாம்' எனச் சொல்லி விட்டுக் கிளம்பினேன். நான் தங்கியிருந்த ஓட்டலின் வரவேற்பில் இருந்த பெண் என்னை முறைத்தாள். பதிலுக்கு நானும் முறைத்தேன்.

'ரூம் சாவிதானே கேட்டேன்? ஏன் அப்படி பாக்கறீங்க?'

'ஊருக்கே அன்பைப் போதிக்கும் நீ வாடிக்கையாளனிடமே அன்பு காட்டாவிட்டால் என்ன அர்த்தம்'

பச்சைப்புடவைக்காரியின் முன் விழுந்து வணங்கினேன்.

'என்ன செய்தால் உன் தவிப்பு ஆறும்?'

'உங்கள் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியருள வேண்டும்.'

'அரை மணி நேரம் பொறு. வருகின்ற அழைப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்'

அறைக்கு வந்ததும் அலைபேசி அலறியது. டாக்டர் நாதன்.

“அண்ணா, இன்னிக்கு ராத்திரி சாப்பாடு எங்க வீட்டுலதான். கார அனுப்பறேன் நேர கிளினிக்குக்கு வந்திருங்க'

சம்மதித்தேன்.

நாதனின் அறையில் அவரும் நானும் பேசிக் கொண்டிருந்த போது நர்ஸ் உள்ளே வந்தாள்.

'இன்னும் ஒரே ஒரு கேஸ், டாக்டர். பாத்திருங்க. பாவம் கடலுலூர்லருந்து வந்திருக்காங்க'

உள்ளே இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் வந்தனர்.

நாதன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

'இது சிவகாமி. இவங்க பையன் நவீனுக்கு முதல் வகை சர்க்கரை நோய். அதச் சரியா கண்டுபிடிக்காம வைத்தியம் பாத்திருக்காங்க. எங்ககிட்ட வரும் போது பையன் கோமாவுல இருந்தான். எப்படியோ கஷ்டப்பட்டுப் பையனக் காப்பாத்திட்டோம்ணா'

அந்த ஏழு வயதுச் சிறுவன் சிரித்தபோது எனக்கு ஏனோ கண்ணீர் வந்தது. சிவகாமி மருத்துவரிடம் மென்மையான குரலில் பேசினாள். 'ஐயா பையனுக்கு உங்க அறக்கட்டளை மூலமா இலவச சிகிச்சைக்கு விண்ணப்பம் போட்டிருக்கேன். அது சம்பந்தமா உங்ககிட்டப் பேச சொன்னாங்க. நாங்க ஏழைங்கய்யா. நவீனோட அப்பா கட்டட மேஸ்திரியா இருக்காரு. நான் ஒரு சின்ன கம்பெனில வேலை பார்க்கறேங்கய்யா., எங்க வருமானம் சாப்பாட்டுக்கே சரியா இருக்கும். முக்கித் தக்கி இவனப் படிக்க வச்சிருக்கோம். மாசம் மூவாயிரம் ரூபாய்க்கு இன்சுலின் ஊசி போடணுமாமே! அது முடியும்னு தோணலங்க. நீங்க மனசு வச்சா...'

'அதுல சின்ன சிக்கல் இருக்கு. முதல்ல நவீனுக்கு எங்க வைத்தியம் பாத்தீங்க?'

சிவகாமி புதுவையில் இருந்த பெரிய மருத்துவமனையின் பெயரைச் சொன்னாள். 'அங்க பில் தீட்டிருவாங்களேம்மா?'

வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல பேசினார் நாதன். அவரைச் சொல்லியும் குற்றமில்லை அறக்கட்டளை செய்யும் உதவிகள் வசதியானவர்களுக்குப் போய் விடக்கூடாது என்பதில் அவர் மிக கவனமாக இருப்பார்.

“ஒன்றரை லட்சம் ரூபாய் பில்லு போட்டுட்டாங்க' வசமாக மாட்டிக் கொண்டாள் என நினைத்தேன். ஒன்றரை லட்ச ரூபாயை ஒரே மூச்சில் கட்டியவள் மாதம் மூவாயிரத்திற்காக ஏன் அறக்கட்டளையை நாட வேண்டும்?

'பணத்தக் கட்டாம அவங்க விடமாட்டாங்களேம்மா'

'பணத்தக் கட்டிட்டுப் பிள்ளையக் கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க'

'பணத்த எப்படி கொடுத்தீங்க? செக்கா கொடுத்தீங்களா? நகையை வித்துக் பசுவுக்கு புல், அகத்திக்கீரை கொடுங்கள். புண்ணியம் சேரும். கொடுத்தீங்களா?'

'எங்க பேங்க் அக்கவுண்ட்ல அந்தளவு பணம் இல்லைங்கய்யா. நகையை எப்பவோ வித்தாச்சு'

'அப்புறம்?'

'இதோ இருக்காளே பைரவி இவதான் கொடுத்தா.'

அப்போதுதான் பைரவியை நன்றாக பார்த்தேன். சிவகாமியின் வயதுதான் இருக்கும் மாநிறம். பெரிய கண்கள். களையான முகம்.

'இவங்க உங்க அக்காவா தங்கையா?'

'ரெண்டும் இல்லை. நான் பக்கத்துவீட்டுக்காரி'

பைரவியின் குரலில் கம்பீரம் தெரிந்தது. நான் அசந்துவிட்டேன். பக்கத்து வீட்டில் ஈயப் பாத்திரத்தை இரவல் கேட்டால் கூட பத்து முறை யோசிக்கும் காலம் இது. இவள் எப்படி ஒன்றரை லட்சத்தை கொடுத்தாள்

'பைரவி, நீங்க வசதியானவங்கன்னு நெனைக்கறேன். ஒன்றரை லட்ச ரூபாய பக்கத்து வீட்டுக்காரங்களுக்குக் கொடுக்கறது சாதாரண விஷயம் இல்லையே'

பைரவியின் புன்னகையில் விரக்திதான் அதிகமாக இருந்தது.

'வசதியும் இல்லை, வாழைக்காயும் இல்ல. எனக்கும் என் புருஷனுக்கும் ரொம்ப நாளா வீடு கட்டணும்னு ஆசை. நிலம் இருக்கு. லோன் போடலாம்னு பேங்க்ல பேசினோம். எங்க பங்குக்கு 2 லட்ச ரூபாய் கொண்டு வரணும்னு சொன்னாங்க. அதனால கொஞ்சம் கொஞ்சமா சேர்க்க ஆரம்பிச்சோம். ஒன்றரை லட்ச ரூபாய் சேர்ந்தது.

அந்தச் சமயம் பாத்து சிவகாமியோட பையன் மயக்கம் போட்டு விழுந்துட்டான். ஆஸ்பத்திரிக்குத் துாக்கிட்டு ஓடினோம். ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தாத்தான் டிஸ்சார்ஜ் பண்ணுவோம்னு சொல்லிட்டாங்க. நாங்க வீடு கட்டறதவிட இந்த இளங்குருத்து நோயில்லாம வாழறதுதான் முக்கியம்னு நெனச்சேன். என் புருஷன்கிட்ட கேட்டேன்.

உடனே கொடுத்திருன்னு சொன்னாரு. கொடுத்திட்டேன். வீடு கட்டறதுக்குத் திருப்பிச் சேர்க்க ஆரம்பிச்சிருக்கோம்' தன் அறக்கட்டளை மூலம் எத்தனையோ ஆயிரம் குழந்தைகளின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த நாதன், வருடா வருடம் பிச்சை எடுக்காத குறையாக நன்கொடை வாங்கி அந்தப் பணத்துடன் தன் சொந்தக் காசையும் போட்டு நல்ல காரியங்களைச் செய்யும் அந்த மாமனிதர் பைரவியைப் பார்த்து எழுந்து நின்று கை கூப்பினார். நானும்தான். நாதன் என்னைப் பார்த்துச் சொன்னார்.

'இந்த கிளினிக் ஆரம்பிச்ச நாள்லருந்து பச்சைப்புடவைக்காரி படம் இங்க இருக்கு. ஆனா இன்னிக்குத் தாண்ணா பச்சைப்புடவைக்காரி இங்க மனுஷ ரூபத்துல தரிசனம் கொடுத்திருக்கா. இது விஸ்வரூப தரிசனம் அண்ணா'

நானும் டாக்டரும் அழுதோம்.

நாதன் வீட்டில் இரவு உணவு முடித்து விட்டு ஓட்டலுக்குத் திரும்பிய போது மணி பத்து. பச்சைப்புடவைக்காரி அதே வடிவத்தில்தான் இருந்தாள்.

அவள் கால்களில் விழுந்தேன்.

'நீ என்ன கேட்டாலும் தரத் தயாராக இருக்கிறேன். இப்போதே என்னுடன் ஒன்றி விடவேண்டும் என்ற வரத்தைக் கேட்டாலும் உடனே தந்து விடுவேன் ஜாக்கிரதை'

'அந்த வரத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது வேறு ஒரு வரம் வேண்டும்'

'என்னோடு ஒன்றுவதை விட மேலான வரத்தை உன்னால் கேட்க முடியுமா என்ன?'

'முடியும், தாயே.' 'கேள்'

'எந்த ரத்த பந்தமும் இல்லாத பக்கத்து வீட்டுக்காரிக்கு தன் மொத்த சேமிப்பையும் வாரி வழங்கினாளே பைரவி, அந்த அளவு அன்பு என் மனதில் என்றென்றும் இருக்க வேண்டும்'

'அந்த நிலையைப் பெற பைரவிக்கு நுாறு பிறவிகள் ஆயிற்று”

'எனக்கு ஆயிரம் பிறவிகள் ஆகட்டும், தாயே. காத்திருக்கிறேன். அந்த அளவு அன்பு வரும் வரை நான் வேறு எதைக் கேட்டாலும் எனக்குக் கொடுக்காதீர்கள்'

கண்ணை மூடி திறப்பதற்குள் பச்சைப்புடவைக்காரி மறைந்தாள்.

-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us