ADDED : ஏப் 29, 2026 04:58 PM

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகே மனைவியை இழந்த வைணவ பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தன் வாழ்நாள் முழுதும் பெருமாள். மஹாபெரியவருக்காகவே என முடிவு செய்தார்.
மனைவியின் வருடத்திதி அன்று அந்தணர்களுக்கு மரியாதை செய்து அனுப்பிய பிறகு சாப்பிட்டார். உடல் அசதியாக இருந்ததால் ஓய்வெடுக்க முடிவு செய்தார். அப்போது காஞ்சி மடத்தின் தொண்டர் ஒருவர் இவரைத் தேடி வர, 'வாங்கோ.... என்ன விஷயம் ?' எனக் கேட்டார். அப்போது மஹாபெரியவர் தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தார்.
'பெரியவா... உங்களை உடனே தேனம்பாக்கம் வரச் சொல்றா...' என்றார் வந்தவர்.
'அந்த தெய்வமே கூப்பிடுதே...' எனச் சொல்லியபடி துண்டை எடுத்து உதறினார். தோளில் போர்த்திக் கொண்டு புறப்பட்டார். பண்டிதரைப் பார்த்ததும் புன்னகையுடன் வரவேற்றார் சுவாமிகள்.
'என்னது... என்றைக்கும் இல்லாத அழைப்பா இருக்கே... வரவேற்க பெரியவாளே காத்திருக்காரே...'என பண்டிதருக்குக் கண்ணீர் துளிர்த்தது. நமஸ்காரம் செய்தார்.
'உடனே வேத சதஸ்க்கு(விவாதம்) ஏற்பாடு பண்ணணும். அதான் வரச் சொன்னேன். உன்னோட சேர்த்து ஐந்து பண்டிதர் போதும்...' என்றார் மஹாபெரியவர். 'இதோ ஏற்பாடு பண்றேன்
பெரியவா... என புறப்பட்டார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பண்டிதர்களுடன் வந்தார். மஹாபெரியவரின் முன்னிலையில் வேதசதஸ் துவங்கியது. கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார் மஹாபெரியவர்.
சதஸ் நிறைவு பெற்றது. 'ஆகா... மஹாபெரியவா கொடுத்த பணியை நல்லபடியா நடத்திட்டோம்' என்ற மகிழ்ச்சியில் பண்டிதர் எழுந்திருக்க முயன்றார். ஆனால் அப்படியே
தரையில் சரிந்தார்.
அருகில் இருந்த பசும்பாலை பண்டிதரின் வாயில் ஊற்றினார் மஹாபெரியவர். அடுத்த நொடியே உயிர் பிரிந்தது. பண்டிதரின் கடைசி நாள் என்பதை அறிந்த மஹாபெரியவர் அருள் செய்த மகிமை தான் என்னே... எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் அந்த பண்டிதர்.
பண்டிதரை வரவழைத்து, அவருடைய மனைவியின் வருடத்திதி அன்று வைகுண்டப் பதவியை தந்திருக்கிறார் காஞ்சி மஹாபெரியவர். இவர்கள் அல்லவா லட்சிய தம்பதிகள்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய்.
* கஷ்டம் தீர குலதெய்வத்திற்கு விளக்கேற்று.
* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.
* ஆடி, புரட்டாசி, தை அமாவாசை அன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
நாராயணியம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
