ADDED : மே 07, 2026 09:23 AM

ஜேஷ்டாதேவி - உத்தாலகர் திருமணம்
தேவர்கள், அசுரர்கள் என இரு பிரிவினரும் பாற்கடலைக் கடைந்து சாகாத நிலை தரும் அமுதத்தை எடுத்துச் சமமாகப் பகிர்வது என முடிவு செய்தனர். மந்திரமலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்த போது, வாசுகிப் பாம்பின் வால் பக்கமாகத் தேவர்களும், தலைப்பக்கமாக அசுரர்களும் நின்று பாற்கடலைக் கடைந்தனர்.
பாற்கடலைக் கடைந்த போது, ரம்பை, ஊர்வசி, மேனகை உள்ளிட்ட அறுபதாயிரம் அரம்பையர்களும், தன்வந்திரி, சூரியன், சந்திரன் அதில் இருந்து வந்தனர். ஐராவத யானை, உச்சைச் சிரவம் குதிரை, காமதேனு, கற்பக மரம் போன்ற சிறப்பு மிக்க உயிர்களும் அதிலிருந்து வெளியேறின.
பாற்கடலில் இருந்து வெளிவந்த ஒவ்வொன்றையும் பார்த்துத் தேவர்களும், அசுரர்களும் வியந்தனர்.
இந்நிலையில் வாசுகிப் பாம்பின் வாயில் இருந்து வெளியேறிய விஷத்துளிகள் பாற்கடலில் விழுந்து கலந்தது. பாற்கடலில் கலந்த விஷத்திலிருந்து கருப்பான பெரிய முகம், சிவப்புக் கண்கள், வெள்ளைப் பற்கள், கரடு முரடான பழுப்பு நிற முடி, தோல் சுருக்கங்களுடன் வயதான தோற்றத்தில் ஒரு பெண் தோன்றினாள். அந்தப் பெண் தலையை விரித்துப் போட்டபடி, அழுக்கு உடைகளுடன் பாற்கடலில் இருந்து வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் அனைவரும் முகம் சுளித்தனர்.
அவளுக்குப் பின்னால், தாமரை மலரில் அமர்ந்த நிலையில் பொன்னிற மேனியுடன் அழகிய தோற்றத்துடன் ஒளிமயமான மற்றொரு பெண் வெளியே வந்தாள். அவளுடைய கைகளில் தாமரை, கலசம் போன்றவை இருந்தன. அவளின் வலது கை அருள் தரும் முத்திரையைக் கொண்டிருந்தது.
அவளைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் முகம் மலர்ந்தனர்.
இரண்டாவதாக வெளியில் வந்த பெண்ணின் அழகைக் கண்டு வியந்த தேவர்கள் பலரும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் அவள், தனக்குத் திருமாலே கணவனாக வர வேண்டும் என விரும்பினாள். அதை அறிந்த திருமாலும் திருமணம் செய்து கொள்ள முன் வந்தார்.
திருமாலுக்கும் இரண்டாவதாக வந்த அழகிய பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தன. அப்போது பாற்கடலில் இருந்து வெளியில் வந்த முதல் பெண், “பாற்கடலில் இருந்து முதலில் வந்த எனக்குத் திருமணம் நடைபெறாமல், எனக்குப் பின்னால் வந்த பெண்ணுக்குத் திருமணம் நடத்த நினைப்பது சரியா?” என கேட்டாள்.
பாற்கடலில் இருந்து முதலில் வந்த பெண்ணுக்குத் திருமணம் நடைபெறாத போது, இரண்டாவது பெண்ணுக்குத் திருமணம் செய்ய நினைப்பது
சரியானதல்ல என அனைவரும் அவளுக்கு ஆதரவு காட்டினர்.
இரண்டாவதாகத் தோன்றிய பெண்ணும், “பாற்கடலில் இருந்து முதலில் தோன்றிய என் மூத்த சகோதரிக்குத் திருமணம் நடக்காத போது, நான் திருமணம் செய்வது சரியல்ல. அவளுக்கு பின்புதான் நான் திருமணம் செய்து கொள்வேன்” என்றார்.
அதை கேட்டத் திருமால், “இங்கிருப்பவர்களில் யாராவது மூத்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், இரண்டாவது பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள முடியும்” என்றார்.
இரண்டாவது தோன்றிய பெண்ணுக்கு நேரெதிரான தோற்றத்தில், சுத்தமும் அழகும் இல்லாமல் இருந்த முதலில் தோன்றிய பெண்ணைத் திருமணம் செய்ய எவரும் முன்வரவில்லை. அதனைக் கண்டு திருமால் வருத்தமடைந்தார்.
அப்போது அங்கு வந்த உத்தாலக முனிவர், நடந்த நிகழ்வுகளையும் திருமாலின் திருமணம் தடைப்பட்டு நிற்பதையும் அறிந்து வருந்தினார்.
முதலில் தோன்றிய பெண்ணைத் தான் திருமணம் செய்து, திருமாலின் திருமணத்திற்கான தடையை நீக்க முடிவு செய்தார்.
உடனே அவர், முதல் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னார். அங்கிருந்தவர்கள், முதல் பெண்ணிடம் அழகில்லா விட்டால் கூடப் பரவாயில்லை, சுத்தமென்பது சிறிதும் இல்லை, அவளை மணந்து வாழ்க்கையில் துன்பமடைய வேண்டாம் என்றனர்.
“பாற்கடலில் தோன்றிய அவள் சுத்தமில்லாமலும் அழகில்லாமலும் இருக்கலாம். திருமணத்திற்குப் பின்பு அவரிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதற்கான முயற்சிகள் அனைத்தையும் நான் மேற்கொள்வேன். எனவே, கவலைப்பட வேண்டாம். எங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் முனிவர்.
முனிவர் சொன்னதையடுத்து, இரண்டு திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
உத்தாலக முனிவர், முதல் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பாற்கடலில் முதலில் வந்தவள் என்பதால், அவள் மூத்ததேவி (ஜேஸ்டாதேவி) எனப்பட்டாள். இரண்டாவதாக வந்தவள் திருமாலைத் திருமணம் செய்து கொண்டதால் திருமகள் ஆனாள்.
திருமணத்திற்குப் பின்பு, உத்தாலக முனிவர் மனைவியான மூத்ததேவியை அழைத்துக் கொண்டு ஆசிரமத்துக்கு சென்றார்.
அவரது ஆசிரமம் சுத்தமாக கோயில் போல இருந்தது. மூத்ததேவிக்கு அது மிகவும் பிடித்தமானதாக இருந்தது. இருப்பினும், தன்னுடைய சுத்தமின்மை, அந்த இடத்தை அசுத்தமாக்கி விடக்கூடாது என நினைத்த அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஆசிரமத்திலிருந்து வெளியேறினாள். உத்தாலக முனிவரும் வெளியே வந்தார்.
என் தோற்றத்தையும், சுத்தமின்மையும் கண்டு எவரும் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பாத நிலையில், என்னைத் திருமணம் செய்து கொண்ட தங்களைப் போற்றுகிறேன். என்னால் தங்களின் ஆசிரமம் அசுத்தமானதாக மாறி விடக்கூடாது என்பதால் வெளியேறிவிட்டேன். என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
நான் ஆசிரமத்திற்கு வெளியிலேயே தங்கிக் கொள்கிறேன் என்றாள்.
அழகில்லாத தோற்றமாக இருந்தாலும், அவளின் மேலான எண்ணத்தையும், நல்ல உள்ளத்தையும் அறிந்து உத்தாலகர் மகிழ்ச்சியடைந்தார். தனக்குப் பின்னால் தோன்றியவள் திருமாலை மணந்து திருமகளாகவும், செல்வத்தின் கடவுளாகவும் மாறிய நிலையில், தானும் அவளைப் போன்று உயர்வடைய வேண்டுமென விரும்பினாள்.
நாள்தோறும் சிவபெருமானை வழிபட்டுத்
தன் எண்ணத்தை நிறைவேற்றும்படி வேண்டினாள்.
அவளின் தவத்தில் மனமிரங்கிய சிவபெருமான் காட்சியளித்து, “உன் எண்ணம் நிறைவேறும். உன் சகோதரி திருமகள் செல்வத்தின் அடையாளமான நெற்கதிராக இருந்தாலும், அந்த கதிர்கள் செழித்து வளரத் தேவையான உரமாக நீ இருப்பாய்.
விவசாயிகள் அனைவரும் வயல்வெளிகளில் உனக்குச் சிலையை அமைத்து வழிபடுபவர்.
கோயில்களிலும் உனக்கு இடம் கிடைக்கும். என் கோயிலுக்கு வந்து உன்னை வழிபடுவோரின் செல்வம் பெருகுவதுடன், ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும்” என சொல்லி மறைந்தார்.
அதை தொடர்ந்து, விவசாயிகள் மூத்ததேவிக்கு வயல்வெளிகளில் சிலை அமைத்து, பயிர் விளைச்சல் பெருக வழிபடத் தொடங்கினர்.
வயல்வெளிக்கு வராமல், சோம்பலுடன் வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களைத் திருத்தவும், அவர்களுக்கு உழைப்பின் அருமையை உணர்த்தவும் மூத்ததேவி விரும்பினார்.
மனிதர்களின் மனதில் உள்ள சோம்பல் உள்ளிட்ட அழுக்குகளைச் சுத்தம் செய்பவள் என்பதை காட்டும் விதமாக, ஒரு கையில் துடைப்பத்தை வைத்துக் கொண்டாள். ஊரைச் சுத்தம் செய்யும் காகத்தைத் தனக்கான கொடியில் இடம் பெறச் செய்தாள். அழுக்குத் துணிகளைச் சுமக்கும் கழுதையை வாகனமாகக் கொண்டு வலம் வரத் தொடங்கினார்.
சிவன் கோயில்களில் மூத்ததேவிக்குத் தனி இடம் கிடைத்தது. உழைப்பே உயர்வுக்கு வழி என்பதைச் சொல்லும் மூத்ததேவியை வழிபட்டால் வளம் பெறலாம்.
-திருமணம் தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925
