ADDED : மே 07, 2026 09:24 AM

பாம்பாட்டி சித்தர்
“என்ன நாரதரே! பாம்பைப் பார்த்துப் பயப்படமாட்டேன் என்கிறீர்களே” என கேலி செய்தார் மகேஸ்வரி.
“யாருக்குத்தான் பயமில்லை. ஆனால் பாம்பை சூடிய மகேஸ்வரன் இருக்கும் போது எனக்கென்ன பயம்” என்றார் நாரதர்.
“நீர் புத்திசாலிதான். பதஞ்சலியை அவதரிக்க செய்து யோகக் கலையைக் கற்றுத் தந்த மகேஸ்வரர் விஷத்திலிருந்து மக்களைக் காக்கப் பாம்பாட்டி சித்தரையும் அவதரிக்க வைத்தார்” என்றார் மகேஸ்வரி.
மருதமலையில் பூர்வகுடியைச் சேர்ந்த ஒரு தம்பதி வசித்தனர். அதில் கணவரை பாம்பு தீண்டியதால் அவருக்கு பார்வை போனது. அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்தது. அதன் உடம்பைச் சுற்றி நஞ்சுக்கொடி படர்ந்திருந்தது.
அந்தக் குழந்தையை பார்த்த அனைவரும் இந்த குடும்பத்திற்கு சர்ப்ப தோஷம் உள்ளது என்றனர்.
வருந்திய தாய், 'சர்ப்ப தோஷத்தால் உன் தந்தைக்கு பார்வை போனது. உனக்கும் உடலில் நஞ்சுக்கொடி சுற்றி இருக்கிறதே' என அழுதாள். ஆனால் குழந்தையோ சிரித்தபடி தனக்குத் தானே நஞ்சுக் கொடியைப் பிரித்தது. புத்திசாலியாக வளர ஆரம்பித்தது. பாம்பிடம் உள்ள மாணிக்கக்கல்லைக் கண்டுபிடித்துப் பரிகாரம் செய்தால் தந்தையின் பார்வை குறைபாடு சரியாகும் என்றும் நம்பியது.
பாம்புகளுடன் பேசும் கலையை குழந்தை அறிந்திருந்தது. பாம்புகளின் வாயில் விஷம் இருக்கிறதா, தலையில் மாணிக்கம் இருக்கிறதா என ஆராய்ச்சியில் ஈடுபட்டது. பாம்புகளைத் தேடிச் செல்வதை பார்த்த பெற்றோர் பயந்தனர்.
ஒருமுறை அப்பகுதிக்கு வந்த சட்டைமுனி சித்தரிடம், “எங்களின் குழந்தை பாம்புகளைப் பிடித்து விளையாடுகிறது. தாங்கள்தான் புத்திமதி சொல்ல வேண்டும்” என பெற்றோர் வேண்டினர்.
சட்டைமுனி சித்தரும், “குழந்தாய்... படிக்கும் வயதில் பாம்பை தேடுகிறாயே” எனக் கேட்க குழந்தையோ “பாம்புகளை பிடித்து அதன் தலையிலுள்ள மாணிக்கக்கல்லைத் தேடுகிறேன்” என்றது.
“என்னை உற்றுப் பார்” என்றார். குழந்தையும் பார்த்தது.
சட்டைமுனி சித்தரின் நெற்றியில் மாணிக்கம் மின்னுவதைக் கண்டது. உடனே குழந்தை அதை எடுக்கப் பாய்ந்தது. அப்போது ஒளி நின்று போக மாணிக்கம் மறைந்தது. குழந்தை அதிர்ச்சி அடைந்தது.
புன்னகைத்த சட்டைமுனி, “குழந்தாய்! பாம்புகளிடம் மட்டுமல்ல, மனிதரிடமும் மாணிக்கம் இருக்கிறது. மூச்சை நிலை நிறுத்திப் பயிற்சி செய்தால் யோகமுப்பு என்ற மாணிக்கம் நம் உடலின் உள்ளேயே தோன்றும். இவ்வாறு நம் உடலில் இருக்கும் மாணிக்கத்தை விட்டு விட்டு வெளியில் திரியும் பாம்புகளிடம் தேடுகிறாயே” எனக் கேட்க குழந்தைக்கு ஞானம் பிறந்தது. அதன் பின் அந்தக் குழந்தை அவரை குருவாக ஏற்று, குண்டலினி யோகம் கற்றுத் தேர்ந்தது.
பாம்பு எப்படி உடலை வளைத்து நெளித்து படம் எடுக்க எழும்புகிறதோ, அதுபோல நாசிக்கலையில் சுவாசத்தை இடமும், வலமும் வளைத்து குண்டலினி சக்தியை எழுப்பி, ஆக்கினையில் யோகக் கனலை அடக்கும் ஆற்றலைப் பெற்றார். எட்டு சித்திகளையும் கற்றுத் தேர்ந்தார்.
சட்டைமுனி தன் சீடருக்குப் 'பாம்பாட்டி' எனப் பெயர் சூட்டினார். பின் அவரிடம், “பாம்பாட்டி சித்தரே! உடலில் குடியிருக்கும் பாம்பை அடக்கி ஆளும் வித்தையில் கைதேர்ந்து விட்டீர். இந்த ஞானத்தின் மூலம் சித்த மருத்துவ முறைப்படி நஞ்சு முறிவு மருந்துகளை மக்களுக்கு உபதேசியும். ஆயுளை நீட்டிக்கச் செய்யும் குண்டலினி பயிற்சியையும் கற்றுக்கொடும். நீர் கற்றுத் தேர்ந்ததை நுால்களாக வெளியிடும்” எனக் கட்டளை இட்டார்.
பாம்பாட்டி சித்தரும் சித்தர் பாடல், சித்தாரூடம், பாம்பாட்டி விஷவாகடம் போன்ற நுால்களை எழுதினார்.
அட்டமா சித்தி மூலம் பல நாடுகளுக்கும் பயணித்தார். ஆகாய மார்க்கமாக பாண்டியநாடு தாண்டி பொதிகை சென்ற போது அங்கே அரண்மனையின் முன்பு மக்கள் நிற்பதையும், மகாராணி கதறி அழுவதையும் கண்டார்.
அந்நாட்டு மன்னர் பாம்பு தீண்டி இறந்ததை ஞான திருஷ்டியால் அறிந்தார்.
நாட்டுக்கு நன்மை செய்த மன்னரைத் தீண்ட, அந்த பாழாய் போன பாம்பிற்கு எப்படி மனசு வந்தது என மக்கள் சபிப்பதையும் கேட்டார்.
பாம்பு மீது அன்பு கொண்ட பாம்பாட்டி சித்தருக்கு அவ்விடத்தை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. மன்னரின் கைப்பிடித்து நாடி பார்த்தார். தன் அனுபவ அறிவால் பாம்பு தீண்டி சிறிது நேரம் தான் ஆகியுள்ளது என்பதை உணர்ந்தார். பாம்புகளுக்கு புரியும் பாஷையில் குரலெடுத்து தாளமிட்டவாறே ஆடிப் பாடினார். அரண்மனை வாசலில் உள்ள அகழியில் பதுங்கியிருந்த ராஜநாகம் வெளியே வந்து பாம்பாட்டி சித்தரை வணங்கியது.
“ஒன்றும் அறியா மன்னனை தீண்டி விட்டாயே. மகாராணியும் வேதனையில் உள்ளார். பாம்பைத் தெய்வமாக வணங்கும் மக்களும் உன் மீது வெறுப்பு கொண்டுள்ளனர். ஆகவே விஷத்தை நீயே நீக்கி விடு' எனக் கட்டளையிட மன்னர் அருகில் சென்று கடித்த இடத்தில் தன் வாயை வைத்து விஷத்தை பாம்பு உறிஞ்சியது.
நீலமாக மாறியிருந்த மன்னரின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிறத்தை அடைந்தது. மன்னரின் உடல் அசைய ஆரம்பித்தது. கண் விழித்த மன்னர் நடந்ததை அறிந்து அருகில் நின்ற பாம்பாட்டி சித்தரை வணங்கினார்.
அப்போது சித்தர், “பாம்பு நம்மைத் தீண்டாது. அதற்கு இடைஞ்சல் கொடுத்தால்தான் தாக்கும். அரண்மனைக் காவலர்கள் அருகில் உள்ள வனப்பகுதியைச் சுத்தம் செய்யும் போது இந்த பாம்பின் குட்டியைக் கொன்றனர். அதனால் கோபம் கொண்ட நாகம் அரண்மனைக்குள் நுழைந்தது. அதே நேரம் சரியாக நீங்களும் வாசலுக்கு வந்ததால் உங்களைத் தீண்டிவிட்டது. இனியாவது பாம்புகளைத் தொந்தரவு செய்யாதீர்கள். பாம்புகளின் இருப்பிடமான மலை, காடுகளை அழிக்க வேண்டாம்” என அறிவுறுத்தினார்.
மன்னரும் காடுகளையும், மலைகளையும் பாதுகாப்பதாக உறுதியளித்தார். அந்த பாம்பும் வந்த வழியே திரும்பிச் சென்றது.
பாம்பாட்டியின் புகழ் பாண்டிய நாடு முழுவதும் பரவியது. பாம்பாட்டி சித்தரும் சங்கரநாராயணரை வணங்குவதற்காக மருதமலையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கிச் சென்றார். அங்கே சங்கரநாராயணர் கோயிலில் கோமதி அம்மனையும், சங்கரநாராயணனையும் நோக்கி தவம் இருக்க ஆரம்பித்தார்.
அவர் தவம் இருந்த இடத்தைச் சுற்றிப் புற்று மண்ணும், பாம்புகளும், தேள்களும் வளர ஆரம்பித்தன. இதனால் அங்கிருந்த மக்கள் பயந்து போய் அவரை விரட்டத் துணிந்தனர். ஆனால் அசரீரியாக 'பாம்புகளின் தோஷத்தை நீக்கும் வலிமை படைத்தவர் பாம்பாட்டி சித்தர். ஆகவே அவர் இங்கேயே இருக்கட்டும்' என ஆணையிட மக்கள் அவரை வணங்கி பாதுகாப்பு அளித்தனர்.
தனக்காக அசரீரியாக சங்கரநாராயணர் தோன்றியதை அறிந்தார் பாம்பாட்டி சித்தர். அங்கிருந்த மக்களிடம், “இங்குள்ள புற்று
மண் தெய்வத் தன்மை வாய்ந்தது. விஷக்கடியை போக்கும் சக்தி கொண்டது. சங்கரநாராயணர், கோமதியம்மனை வணங்கி புற்று மண்ணை பூசினால் விஷபயம் நீங்கும்” எனக் கூறி ஒளி ரூபமாக சங்கரநாராயணர் திருவடியில் அடங்கினார்.
ஆகவேதான் பாம்பைக் கொன்றவர்கள், பாம்பினால் பாதிப்புக்கு ஆளானவர்கள், விஷத்தால் தீண்டப்பட்டவர்கள் சங்கர நாராயணரை வணங்கி, புற்றுமண் பிரசாதம் பெறுகின்றனர்'' என்றார்.
நாரதர் மெய் சிலிர்த்தபடி “கோயில் சிற்பங்களில் பாம்பு வடிவம் காணப்படுவதே அதன் தெய்வாம்சத்தை உணர்த்தத்தான். பாம்பை கொல்லக் கூடாது. அதன் வாழ்விடத்தை பாதுகாப்பாக வைத்தால் தொந்தரவும் செய்யாது என்பதை பாம்பாட்டி சித்தர் மூலம் உணர்த்திய தங்களின் திருவிளையாடல் போற்றத்தக்கது” எனக் கூறி வணங்கினார்.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
90030 00250
