ADDED : ஜூலை 02, 2026 10:23 AM

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்
கந்தர்வலோகத்தை சேர்ந்த விசுவாவசுவின் மகள் வித்யாவதி. இவள் சிறு வயதிலிருந்தே பார்வதியின் மீது பக்தி கொண்டிருந்தாள். அவளுக்குப் பூமியில் இருப்பது போல கோயில் ஒன்றில் பார்வதியைப் பக்தியுடன் வழிபட வேண்டுமென ஆசை ஏற்பட்டது. அவளின் விருப்பத்தை தந்தையிடம் சொன்னாள்.
அதைக் கேட்ட அவளின் தந்தை, பூவுலகம் செல்வது ஆபத்தானது. அங்கு செல்ல வேண்டாமென எச்சரித்தார். ஆனால் அவள் பூவுலகம் சென்று தன் விருப்பத்தை நிறைவேற்ற அனுமதிக்கும்படி தந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, அவளுடைய தந்தை வேறு வழியின்றி சம்மதித்தார்.
கந்தர்வ உலகில் இருந்து புறப்பட்ட வித்யாவதி பூவுலகிற்கு வந்து, தன் வழிபாட்டுக்கேற்ப கோயிலைத் தேடி அலைந்தாள். அப்போது, கடம்பவனம் என்னும் இடத்தில் புதர்களால் மூடிக் கிடந்த கோயில் ஒன்றைக் கண்டாள். அந்தக் கோயில் சரியாக இருக்கும் என நினைத்த அவள் அந்த கோயிலை சுத்தம் செய்தாள்.
பின்னர் கோயிலில் இருந்த சியாமளா தேவி சிலையை அலங்கரித்து தினமும் வழிபட்டு வந்தாள். அவளின் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்த சியாமளா தேவி, ஒரு நாள் அவளுக்கு மூன்று வயதுச் சிறுமியின் தோற்றத்தில் காட்சியளித்தார்.
அம்மனின் சிறு வயது தோற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த வித்யாவதி, அவளே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என வேண்டினாள். வித்யாவதியின் வேண்டுகோளை ஏற்ற சியாமளா தேவி, அடுத்த பிறவியில் உன் விருப்பம் நிறைவேறும் எனச் சொல்லி மறைந்தார்.
அடுத்த பிறவியில் வித்யாவதி, பூவுலகில் சூரிய குலத்தைச் சேர்ந்த சூரசேனன் என்ற மன்னரின் மகளாகப் பிறந்தாள். சூரசேனன், அவளுக்குக் காஞ்சனமாலை என பெயரிட்டு வளர்த்து வந்தார். அவள் சிறு வயதிலிருந்தே பார்வதி தேவியின் பக்தையாக இருந்தாள்.
காஞ்சனமாலை வளர்ந்து பெரியவளானதும், மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார் சூரசேனன். திருமணமாகி பல ஆண்டாகியும் இருவருக்கும் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. காஞ்சனமாலை, அங்கிருந்த சியாமளாதேவி கோயிலில் வழிபட்டு தனக்குக் குழந்தைப்பேறு வழங்கும்படி வேண்டினாள்.
மன்னர் மலையத்துவஜ பாண்டியன், மனைவி காஞ்சனமாலையுடன் சேர்ந்து குழந்தைப் பேற்றுக்காக, புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தினான். யாகத்தீயில் இருந்து மூன்று வயதுக் குழந்தையாக அம்பிகை தோன்றினாள். அப்போது தான், காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் வேண்டியதும், அவளுக்குச் சியாமளா தேவி, அடுத்தப் பிறவியில் குழந்தையாகப் பிறப்பேன் எனச் சொன்னதும் நினைவுக்கு வந்தது.
தங்களுக்குக் கிடைத்த மூன்று வயதுக் குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தாலும், அதற்கு மூன்று மார்புகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தனர்.
அப்போது, “இந்தப் பெண் குழந்தையை ஆண்மகனைப் போல வளர்த்து, அனைத்துக் கலைகளையும் கற்கச் செய்யுங்கள். அதன் பின்னர் மதுரையின் பட்டத்தரசியாக பதவியேற்கச் செய்யுங்கள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்தவுடன், வருங்காலக் கணவரை அவள் பார்த்ததும், மூன்றாவது மார்பு மறையும்” என வானிலிருந்து அசரீரி கேட்டது.
அதன் பின், மன்னர் மலையத்துவஜ பாண்டியனும் காஞ்சனமாலையும், அந்தக் குழந்தைக்கு 'சியாமளா' எனப் பெயரிட்டு ஆண் மகனைப் போல வளர்த்தனர். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுக் கொடுக்கச் செய்தனர்.
கலைகளில் தேர்ச்சி பெற்ற சியாமளாவை, மன்னர் மலையத்துவஜ பாண்டியன் மதுரையின் பட்டத்தரசி ஆக்கினார். அரசியான சியாமளா, மீனைப் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, நாட்டு மக்களைப் பாதுகாத்து வந்ததால், அவளுக்கு 'மீனாட்சி' எனப் பெயர் ஏற்பட்டது. நல்லாட்சி நடத்திய மீனாட்சி, தன்னுடைய ஆட்சியை விரிவுபடுத்த விரும்பினாள். படையை அழைத்துக் கொண்டு போர் செய்து வெற்றி பெற்று பல நாடுகளைக் கைப்பற்றினாள். கடைசியாகக் கைலாய மலையை நோக்கிப் படையெடுத்துச் சென்றாள். கைலாய மலையைக் கைப்பற்ற வரும் மீனாட்சியின் படையை தனிமையாக எதிர் கொண்டார் சிவபெருமான். தன் பெரும்படைக்கு முன் தனித்து நிற்கும் சிவபெருமானைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் மீனாட்சி. அவரை நேருக்கு நேராகப் பார்த்தாள். அப்போது அவளின் மூன்றாவது மார்பு மறைந்தது.
மூன்றாவது மார்பு மறைந்ததும், அவளிடமிருந்த போர் செய்யும் எண்ணம் மறைந்தது. வாளைக் கீழே நழுவ விட்ட மீனாட்சி தலையைக் குனிந்தபடி சிவனை வணங்கினாள். அவளிடம் பெண்களுக்கே உரிய நாணம் ஏற்பட்டது. அருகில் வந்த சிவபெருமான், ''அங்கயற்கண்ணியே, மதுரை நகரிலிருந்து படையுடன் போரிட வந்த உன்னிடம் உன் மணாளனாகச் சரணடைகிறேன். இன்றிலிருந்து நீயே என் துணைவி'' என்றார். அதைக் கேட்ட மீனாட்சியின் முகம் வெட்கத்தால் மேலும் சிவந்தது. அப்போது அவளுக்கு, தான் சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவி என்பது தெரிந்தது.
சிவபெருமான் விரைவில் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதனைக் கேட்டு மகிழ்ந்த அவள், படையுடன் மதுரைக்குத் திரும்பினாள். அதன் பின் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று சிவனுக்கும் மீனாட்சிக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
சிவபெருமான், மீனாட்சியைத் திருமணம் செய்ய கைலாய மலையில் இருந்து மதுரையை நோக்கிப் புறப்பட்டார். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலனாகவும் கொண்ட சிவன் ஆடை, அணிகலன்களை மாற்றிக் கொண்டு, சிவகணங்கள், தேவர்கள், முனிவர்களை அழைத்துக் கொண்டு சுந்தரேஸ்வரராக மதுரைக்கு வந்து சேர்ந்தார்.
பங்குனி உத்திர நன்னாளில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணம் சிறப்பாக நடந்தது. பங்கேற்ற அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் சுவையான உணவு விருந்தளிக்கப்பட்டது.
விருந்தும் வைகையும்
மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு அளிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியானது. இதையறிந்த மீனாட்சி உணவில் பெரும்பகுதி வீணாகி விடுமோ என கணவரான சுந்தரேஸ்வரரிடம் வருந்தினாள்.
உடனே சிவபெருமான், குண்டோதரனை வரவழைத்து, மீதமுள்ள உணவுகள் அனைத்தையும் சாப்பிடும்படி சொல்லி அனுப்பி வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த அனைத்து உணவும் காலியானது. தாகத்தைத் தீர்ப்பதற்காக, அங்கிருந்த பெரிய அண்டாவில் இருந்த தண்ணீரைக் குடித்தார்.
அந்தத் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க போதுமானதாக இல்லை. 'தாகம்... தாகம்...' என சொல்லிச் சத்தமிட்ட போது சிவபெருமான் தன் கையைத் தரையில் வைத்து அழுத்தினார். அந்த இடத்தில் இருந்து வெளியேறிய நீரைக் குடித்ததும் தாகம் நீங்கியது.
சிவபெருமான் கையை வைத்து அழுத்தியதால் உருவான நதி வைகை எனப் பெயர் பெற்றது.
- திருமணம் தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925
