தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 21

பெண்பிள்ளை ரகசியம் - 21

பெண்பிள்ளை ரகசியம் - 21


ADDED : ஜூலை 02, 2026 10:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 10:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஸ்வாமித்திரனைப் போலே

கதர் சேலையில் பார்க்க பாந்தமாக இருந்த அமிர்தம், பூங்காவுக்கு அருகே வந்த போது அலைபேசி அழைத்தது. பேசுவது நீர்த்துப்போய் ஒரு கட்டத்தில் பொரிந்து தள்ளினார். அவர் அப்படி பொங்குவதை துாரத்தில் இருந்து பார்த்தார் கிருஷ்ணவேணி. அருகில் வந்ததும், “என்ன அமிர்தம்... யாருகிட்ட கோபமா பேசுறீங்க?”

“வேற யாரு? என் தம்பி கிட்டதான். நான் சொல்றத கேட்கற மாதிரி எப்பவும் நடிப்பான். ஆனா கேட்க மாட்டான். எல்லாம் ஆனது போனது மேல, இப்ப சொல்லுக்கா நான் என்ன செய்யட்டும்னு ஆரம்பத்துல இருந்து வருவான். அவன் எப்ப பேசினாலும் இதே கதை தான், சரியான சோம்பேறி” என நொந்து கொண்டார் அமிர்தம்.

“கோபக்கார முனிவர் விஸ்வாமித்திரர் பத்தி சொல்லலாம்னு பார்த்தா நீங்களே சூடா இருக்கீங்களே! சரி நாளைக்கு பார்க்கலாம் விடுங்க” என்றார் கிருஷ்ணவேணி வேண்டுமென்றே.

“அட! தம்பி கூட நான் அப்பப்ப மல்லு கட்டுறது தான். நீங்க சொல்லுங்க கேட்போம். அப்படியாவது என் கோபம் குறையும்”

“அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே என்பதுதான் அந்த வாக்கியம். அதை ராமானுஜரிடம் சொல்லத் தொடங்குகிறாள் பெண்பிள்ளை. விஸ்வாமித்திரர் ஒரு மன்னராக வாழ்ந்து பிறகு தவ வலிமையால் பிரம்மரிஷியானவர். மன்னராக இருந்த அவர் ஒருமுறை வசிஷ்டர் தவம் செய்த காட்டுக்கு படையுடன் வந்தார். வசிஷ்டர் அவரை விருந்தினராக ஏற்று உணவளித்தார். விஸ்வாமித்திரருக்கு ஒரே ஆச்சரியம். காட்டில் இப்படி விருந்து தர முடியுதே என ஆச்சரியப்பட்டார். தான் வளர்க்கும் காமதேனு பசு கேட்டதை எல்லாம் கொடுக்கும் என மன்னரிடம் காட்டினார்.

அந்த பசுவை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை மன்னருக்கு வந்தது. அதை அறிந்த வசிஷ்டர், இந்த காமதேனு தான் என் தவத்திற்கு உறுதுணையாக உள்ளது. அதனால் தர முடியாது என வசிஷ்டர் உறுதியாக சொல்ல, இருவருக்கும் போர் மூண்டது. அதில் விஸ்வாமித்திரர் தோற்றார். வசிஷ்டரின் தவ வலிமை விஸ்வாமித்திரரின் படை வலிமையை விட சிறப்பாக இருந்தது.

இதைப் பார்த்த விஸ்வாமித்திரர் புலன்களை அடக்கி தவம் புரிந்து பிரம்மரிஷியாக உயர வேண்டும் என முடிவு செய்தார். நாட்டை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்ய புறப்பட்டார். அவர் தவத்தை கலைக்க மேனகை, ஊர்வசி போன்ற பெண்களை இந்திரன் அனுப்பினான். முதலில் தவம் கலைந்தாலும் பின் உறுதியாக இருந்து ரிஷியாக மாறினார். இந்த காலகட்டத்தில் வசிஷ்டரும் சூரியகுல மன்னர்களுக்கு குல குருவாக உயர்ந்தார்.

அந்த சமயத்தில் சூரிய குலத்தைச் சேர்ந்த மன்னர் திரிசங்கு தன் குலகுரு வசிஷ்டரிடம் பூத உடலுடன் சொர்க்கத்துக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டினான். பூத உடலை பூமியில் விட்டு விட்டு சூட்சம உடலுடன் தான் சொர்க்கம் செல்ல முடியும். அது தான் நியதி எனச் சொல்லி அனுப்பினார் வசிஷ்டர். ஆனால் திரிசங்கு தொடர்ந்து அவருக்குத் தொல்லை கொடுத்ததால் 'சண்டாளனாகப் போவாய்' என சாபமிட்டார். சண்டாளன் என்பதற்கு பிணம் சுடுபவர் என பொருள்.

இதன்பின் அவன் விஸ்வாமித்திரரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தான். அவரோ வசிஷ்டரால் முடியாததை தான் செய்து பெருமை கொள்ள வேண்டும் என திரிசங்குவை பூத உடலுடன் அனுப்பி வைத்தார். ஆனால் தேவர்கள் கீழே தள்ளி விட்டனர். விஸ்வாமித்திர முனிவரின் பெயரை சத்தமாக கூவியபடி பூமியை நோக்கி திரிசங்கு தலைக்குப்புற வந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட விஸ்வாமித்திரர், திரிசங்குக்காக புதிய சொர்க்கத்தை படைத்தார். உடனே பிரம்மா ஓடி வந்து முனிவரின் கோபத்தை தணித்து உலக நியதியை மீறாதீர்கள் என வேண்டி மன்னிப்பு கேட்ட பின்னரே சமாதானம் அடைந்தார் விஸ்வாமித்திரர்”

”ஐயோ! அந்த திரிசங்குக்கு என்னாச்சு?”

“அவன் அந்தரத்தில் நின்றான். அதாவது இரண்டும் கெட்டான் நிலை. தெளிவான முடிவை எடுக்க முடியாமல் இரண்டுக்கும் இடைப்பட்டதை குறிக்கும் போது திரிசங்கு நிலை என்கிறோமே அது இது தான்”

''அப்படியா''

“இப்படி மன்னராக இருந்து பிரம்ம ரிஷியாக உயர்ந்தவர் விஸ்வாமித்திரர். அவர் ஒரு சமயம் தசரதனிடம் உதவி கேட்டு வந்தார். தனக்கு அரக்கரால் தொல்லை ஏற்படுவதாகவும், அதை அழிப்பதற்காக நடத்தும் யாகத்திற்கு காவலாக ராம, லட்சுமணனை அனுப்புமாறும் வேண்டினார். இதைக் கேட்ட தசரதருக்கு மயக்கம் வராத குறை தான். ஏனெனில் தசரதனுக்கு மூத்த மகன் ராமன் மீது கொள்ளை பிரியம். அவரை பொறுத்தவரை ராமன் இன்னும் குழந்தைதான். ராமனை போய் அரக்கர்களுக்கு எதிராக செயல்பட அழைக்கிறீர்களே, வேண்டுமென்றால் நான் வருகிறேன்' என்றார் தசரதர்.

இதற்கு விஸ்வாமித்திரர், ''அரக்கர்களை அழிக்கும் சக்தி பெற்றவன் ராமன். இது வசிஷ்டர் போன்ற முனிவர்களுக்கும் தெரியும். அதனால் தைரியத்துடன் ராமனை அனுப்பி வையுங்கள் என்றார் விஸ்வாமித்திரர்.

ராமனை எனக்கு நன்கு தெரியும் எனச் சொன்ன விஸ்வாமித்திரரைப் போல நான் இல்லையே சுவாமி. அவனை நான் அறிவேன் என சொல்லும் அளவுக்கு நான் பக்தியில் சிறக்கவில்லையே, பக்தி ஞானத்தால் அவனது பராக்கிரமங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறவில்லையே. அதனால் இந்த திருக்கோளூரை விட்டுப் போகிறேன் சுவாமி என பணிவாகச் சொன்னாள் பெண் பிள்ளை”

''விஸ்வாமித்திரர் கோபக்கார முனிவர் என்று கேள்விப்பட்டிருக்கேன். அவரால் ராமனுக்கு பல நன்மை நடந்தது என்பதும் தெரியும். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். இதைக் கேட்டதும் எனக்கு விறன்மிண்ட நாயனாரின் கோபம் தான் நினைவுக்கு வருது.

ஒரு சமயம் சிவனடியார்கள் திருவாரூர் கோயிலில் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தரர் அடியார்களை கவனிக்காமல் நேராக சிவன் சன்னதிக்குச் சென்றார். இதையறிந்த விறன்மிண்டர், அடியார்களை வணங்காமல் சென்ற சுந்தரரை ஏற்றுக் கொண்ட சிவனை கடுமையாக பேசினார் விறன்மிண்ட நாயனார். இதனால் சிவன் தர்மசங்கடத்திற்கு ஆளானார்.

நாயனாரை சமாதானம் செய்ததோடு, 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்' என அடி எடுத்து கொடுத்து அடியார்களின் பெருமையை பாடும்படி சுந்தரருக்கு உத்தரவிட்டார் சிவன். அது தான் திருத்தொண்டர் தொகை. இப்பாடல் கிடைக்க காரணமானவர் விறன்மிண்ட நாயனார் தான்” என அமிர்தம் சொல்லி முடிப்பதற்கும் அவரது தம்பி அலைபேசியில் அழைப்பதற்கும் சரியாக இருந்தது. அப்போது தடுத்த கிருஷ்ணவேணி, “ ஒரே நிமிஷம் அமிர்தம். கோபம் நம்மை சீர்குலைக்கும். கோபத்தால உறவுகளை இழக்க நேரும், அதோட நம் மீதே வெறுப்பு உண்டாகும். கவனமா பேசுங்க'' என ஆசுவாசப்படுத்தினார் கிருஷ்ணவேணி.

“கட்டுக்கடங்காதது அல்ல என் கோபம். கொஞ்ச நேரத்தில் மறைந்து விடும். சரி இனி கவனமா பேசுறேன். என் மீதுள்ள அக்கறைக்கு நன்றி” என புன்னகைத்தார் அமிர்தம்.

-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us