தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 12

பச்சைப்புடவைக்காரி - 12

பச்சைப்புடவைக்காரி - 12


ADDED : ஜூலை 02, 2026 10:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 10:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவளுக்குப் பிடித்தது

அன்று காலை ஆறு மணிக்கே என் அலைபேசி அலறியது. கோவையில் இருந்து பேசிய மருத்துவர் நாதனின் குரலில் பதட்டம் தெரிந்தது.

“சர்க்கரை நோய் வந்த ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செஞ்சிக்கிட்டிருக்கோம்ல? அதுக்காக ஊர் ஊராப் போறோம்ணா. நிறையக் குழந்தைங்களுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. மதுரைக்கு இன்னிக்கு கேம்ப் வந்தா அடுத்து மதுரை வர ஒரு மாசம் ஆயிடும்.

அந்த ஒரு மாசத்துல நிறைய குழந்தைங்க சிகிச்சை இல்லாமத் தவிக்கறாங்க. சில குழந்தைங்க இறந்து போயிருச்சிண்ணா. அதனால் ஒவ்வொரு ஊர்லயும் ஒரு சின்ன அமைப்ப ஏற்படுத்தறோம். அங்க எங்க நர்ஸ் இருப்பாங்க. குழந்தைங்கள எப்ப வேணும்னாலும் கூட்டிக்கிட்டு வரலாம். நர்ஸ் தேவையான சிகிச்சையச் செஞ்சிருவாங்க. மருந்துகளையும் கொடுத்துருவாங்க. கொஞ்சம் சிக்கலான கேசா இருந்தா என்னை கூப்பிடுவாங்க. வீடியோ கான்பரன்சிங் மூலமா நான் வழிகாட்டுவேன்”

“நல்ல காரியம்தானே”

“இந்த அமைப்பு இப்போ தமிழ்நாட்டுல எல்லா ஊர்லயும் இருக்கு. மதுரையிலதான் இன்னும் ஆரம்பிக்கல. என்கூட படிச்ச டாக்டர் ராஜன் தன்னோட இடத்த இலவசமா தர்றேன்னு சொன்னான். எல்லா ஏற்பாடுகளும் மும்முரமா நடந்துக்கிட்டிருக்கு. திடீர்னு ராஜன் ஒரு குண்டத் துாகிப் போட்டாண்ணா”

“என்ன?”

“உன் கிளினிக்ல நானும் ஒரு ஓரமா உக்காந்துக்கறேன். தேவைப்பட்டா நானும் சிகிச்சை செய்யறேன். அதுக்கான நியாயமான கட்டணத்த நான் வசூலிச்சிக்கறேன்னு சொன்னாண்ணா. அப்புறம்தான் ராஜனப் பத்தி விசாரிச்சேன். அவன் ஒரு பணப்பேய். ஏழைங்க ரத்தத்த உறிஞ்சிருவான்னு சொன்னாங்க.

“அது சரியா வராது, ராஜன். ஏழைக் குழந்தைங்களுக்கு இலவசமா மருத்துவம் செய்யத்தான் அறக்கட்டளையை ஆரம்பிச்சிருக்கேன்னு சொன்னேன். அவன் கத்தினான்.

“என்னோட இடம் மட்டும் வேணும். வாடகையும் தர மாட்டீங்க. என்னையும் சம்பாதிக்க விடமாட்டீங்கன்னா என்னய்யா அர்த்தம்? உனக்குச் சம்பாதிக்க வக்கில்லன்னா விலகிக்கோ. நான் சம்பாதிக்கறேன். நான் என்ன உங்கிட்டயா காசு கேட்டேன்? நோயாளிங்ககிட்டதானே கேட்டேன். அதனால உனக்கு என்ன வந்துச்சுன்னு கத்தினான். நீயும் வேண்டாம். உன் இடமும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

“என்ன முறைச்சிக்கிட்டேல்ல, நீ மதுரையில எப்படி கிளினிக் நடத்தறேன்னு பாக்கறேன்னு மிரட்டறான். ஒவ்வொரு ஊர்லயும் கிளினிக் இருக்கு. பச்சைப்புடவைக்காரி பட்டணத்துல இல்லேன்னா என்னண்ணா அர்த்தம்?” நாதன் உடைந்துபோய் அழுதார்.

“டாக்டர் எனக்கு உங்களப் பத்திக் கூட முழுசா தெரியாது. ஆனா பச்சைப்புடவைக்காரியப் பத்தி நல்லாவே தெரியும். உங்களுக்காக ஒரு ரூபாய் கேட்டாலும் ஆயிரம் கணக்கு பாப்பா. ஆனா சுயநலம் இல்லாம கேட்டீங்கன்னா உலகத்தையே கொடுத்திருவா பச்சைப்புடவைக்காரி. கவலையேபடாதீங்க”

அன்று மாலை நடந்தே கோயிலுக்குப் போனேன். வழக்கமாக அபிராமி அந்தாதியைச் சொல்லியபடி நடப்பேன். ஆனால் அன்று என்னால் முடியவில்லை. வழி முழுவதும் அழுது கொண்டிருந்தேன். கோயிலில் அவளுடைய சன்னதியில் இன்னும் அதிகம் அழுதேன். என் மனதில் எந்த பிரார்த்தனையும் இல்லை. அவளிடம் எதைக் கேட்பது? கண்ணீரை காணிக்கையாக்கினேன்.

என் மனம் ஒரு நிலையில் இல்லை. கோயிலுக்கு அருகிலுள்ள சிக்னலில் சாலையைக் கடக்க ஆரம்பித்தேன். அங்கே இருந்த பெண் போலீஸ் என் தோளைப் பிடித்து இழுத்தாள்.

“உன் கண்ணு என்ன முதுகிலயா இருக்கு? நான் உன்னைப் பிடிக்கலேன்னா அந்த லாரிக்காரன் அடிச்சித் துாக்கியிருப்பான்” கண்ணீர் மல்க கைகூப்பினேன்.

“மன்னிச்சிருங்க. என் மனசு ஒரு நிலையில் இல்லை”

“உன் மனதும் சரி, நாதன் மனதும் சரி, நல்ல நிலையில் இருக்கிறது. அவன் ஏழை குழந்தைக்காக அழுகிறான். நீ அவனுக்காக அழுகிறாய்”

“தாயே” என காலில் விழுந்தேன்.

“இந்தப் பிரபஞ்சத்திலேயே எனக்கு மிக பிடித்தது என்ன தெரியுமா?”

நான் அவளையே பார்த்தேன்.

“மற்றவர் நலனுக்காகச் சிந்தப்படும் கண்ணீர். அதை நாதனும் நீயும் எனக்கு கொடுத்து விட்டீர்கள். இப்போது கொடுக்கவேண்டிய முறை என்னுடையது”

என் அலைபேசி அலறியது.

“எடுத்துப் பேசு. நான் என்ன கொடுத்திருக்கிறேன் என தெரிந்து கொள்வாய்”

அழைத்தது நண்பர் மணி. ஒரு பெரிய அரசியல் அமைப்பில் நல்ல பொறுப்பில் இருக்கிறார். தனக்கென வாழாத உத்தமர்.

“சார், எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நாங்க ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சிருக்கோம். நாட்டுல உள்ள சில பெரிய ஆளுங்க அதுல டிரஸ்டியா இருக்காங்க. டிரஸ்டுக்காக நாலாயிரம் சதுரடில ஒரு இடத்த லீசுக்கு எடுத்திருக்கோம். எங்க ஆபீசுக்கு மூவாயிரம் சதுரடி போதும். ஆயிரம் சதுரடி சும்மா இருக்கு. அத உள் வாடகைக்கு விட வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஏதாவது நல்ல காரியத்துக்குக் கொடுக்கலாம்னு யோசிக்கறேன். உங்களுக்குத் தெரிஞ்சி யாராவது...''

அதற்கு மேல் மணி சொன்னது காதில் விழவில்லை. வெடித்துக் கிளம்பிய விம்மல்களை அடக்க படாதபாடு பட்டேன். மெல்லிய குரலில் நாதனின் பிரச்னையை மணியிடம் சொன்னேன்.

“அற்புதம்! உடனே வந்து என்னப் பார்க்கச் சொல்லுங்க. அவரு கேக்கற வசதியை எங்க செலவுல பண்ணி தரோம். ஒரே ஒரு கண்டிஷன்”

“என்ன?”

“வாடகைன்னு ஒத்த பைசா தரக்கூடாது. முடிஞ்சா எனக்கு ஒரு உதவி செய்யச் சொல்லுங்க. எங்க அமைப்புல நிறைய தொண்டர்கள் இருக்காங்க. அவங்களுக்கு நேரம் இருக்கும் போது கிளினிக்குக்கு வரச் சொல்றேன். அவங்களால முடிஞ்ச சேவையை செய்யட்டும். கிளினிக்குக்கு ஆகற மொத்த செலவையும் எங்க அறக்கட்டளையே ஏத்துக்கும். இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா நாதன வந்து பாக்கச் சொல்லுங்க”

டாக்டர் ராஜன் விடுத்த மிரட்டலைப் பற்றி மணியிடம் சொன்னேன்.

“சப்பை மேட்டர். எங்க கட்டடதுக்கு 24 மணிநேரமும் செக்யூரிட்டி இருக்கும். இப்பவே ஐ.ஜி., கிட்டப் பேசி அந்தாள மிரட்டி வைக்கச் சொல்றேன்”

மணி பேசி முடித்துவிட்டார். அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன்.

“இது ஆரம்பம்தான். இன்னும் பல நன்மைகள் காத்திருக்கின்றன அந்த நாதனுக்கு என பார்க்கத்தானே போகிறாய்? அது சரி, உனக்கு என்னப்பா வேண்டும்”

“நீங்கள் கொடுத்து விட்டீர்கள். நான் உங்களுக்கு கொடுக்க வேண்டாமா?”

“எனக்குப் பிடித்ததைக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன்.”

“மற்றவர் நலனுக்காகச் சிந்தப்படும் கண்ணீர்தான் உங்களுக்குப் பிடிக்கும் எனச் சொன்னீர்களே? அதை நான் உங்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும். அந்த வரத்தை மட்டுமே உங்களிடம் யாசிக்கிறேன்”

தாய் மறைந்து விட்டாள். உச்சந்தலையில் ஏற்பட்ட ஒரு தொடு உணர்வு என் ஆன்மாவையே சிலிர்க்க வைத்தது.



-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us