ADDED : ஜூலை 02, 2026 10:19 AM

மகாராஷ்டிரா மாநிலம் பண்டரிபுரம் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். பச்சைப்பசேல் என்று வயல். வயலைச் சுற்றி மரங்கள். நடுவே ஓலைக்குடிசை. அதில் மஹாபெரியவர் தங்கியிருந்தார்.
காஞ்சிபுரம் மடத்தைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் அவருடன் தங்கியிருந்தனர். சுவாமியின் பிக்ஷைக்கு (உணவுக்கும்), அவருடன் தங்கியிருந்த தொண்டர்களுக்கும் சமைக்கத் தொடங்கினார் வேதபுரிமாமா. பிக்ஷை எடுத்துக் கொண்ட பின், குடிசைக்கு வெளியே சுவாமிகள் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்திருந்த கிராமத்தினருக்கு ஆன்மிக விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களிடம், 'நீங்க எல்லோரும் சாப்பிடுங்கோ' எனச் சொல்லி விட்டு, தொண்டர் ஒருவரை அழைத்து, 'இவாளுக்கும் சாப்பாடு கொடு' என்றார்.
அதன்படியே கிராமத்தைச் சேர்ந்த பத்து பேர், தொண்டரின் பின்னே சாப்பிடச் சென்றனர். உள்ளே கிராமத்தினர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மஹாபெரியவரை பார்க்க இன்னும் சிலர் வந்தனர். அவர்களையும் சாப்பிடச் சென்னார் மஹாபெரியவர். இன்னும் சிறிது நேரத்தில் அவரை தரிசிக்க சிலர் வந்தனர். அவர்களையும் சாப்பிடப்போகும்படி சொன்னார்.
மஹாபெரியவரின் தொண்டர் ஒருவர் வேதபுரிமாமாவைப் பார்த்து, ''சுவாமிகளை தரிசிக்க வந்த எல்லோரும் சாப்பிட வந்தாளே... நீங்க எப்படி சமாளிச்சீங்க... மாமா'' எனக் கேட்டார். அதற்கு அவர், ''சாதம் இருந்த பாத்திரம் இன்னிக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமா மாறிடுச்சு. அதே போல குழம்பும், கறியும் எடுக்க எடுக்க குறையவே இல்லை. எல்லாம் இதோ இங்க அன்னபூரணியா இருக்காரே அவருடைய கடாட்சம்'' என மஹாபெரியவரை சுட்டிக் காட்டினார்.
சிறிது நேரத்தில் மஹாபெரியவரும், ''என்ன வேதபுரி... நிறைய பேர சாப்பிட அனுப்பிச்சிண்டே இருந்தேனே. சாப்பாடு எல்லாருக்கும் போட்டாயா'' என தெரியாதது போல் வேதபுரிமாமாவைக் கேட்டார். ''அள்ளித் தரும் அன்னபூரணியான நீங்க இருக்கறப்ப எனக்கு என்ன குறைச்சல்? எல்லோரும் திருப்தியா சாப்பிட்டா'' என மாமா பதில் சொன்னார்.
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
