தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 34

சித்தர்களின் விளையாட்டு - 34

சித்தர்களின் விளையாட்டு - 34


ADDED : ஜூலை 02, 2026 10:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 10:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புலத்தியர்

மகேஸ்வரரைப் பார்த்த நாரதர்,“தாங்கள் அகத்தியருக்கும், அவரது சீடர் புலத்தியருக்கும் தனியாகப் பனங்காட்டில் காட்சியளித்தீர்களே, அதைப் பற்றி இதுவரைக் கூறவேயில்லையே” என்றார். மகேஸ்வரி மந்தகாசப் புன்னகையுடன், “எல்லாத் தகவல்களும் முன்பே தெரிந்து வைத்துக் கொண்டு தான் கேட்கிறீர்கள், இல்லையா நாரதரே” என்றார்.

“மன்னியுங்கள் மகேஸ்வரி! அகத்தியருக்காகக் கங்கை நீரை அபிஷேகம் செய்ய தீர்த்தமாக வழங்கியதையும், பனம்பூ மாலையை அணிந்து, பனங்காய்ப் படையலை ஏற்றதையும் மறக்க முடியுமா? அதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகத் தான் கேட்டேன்” என இருவரின் பாதங்களையும் வணங்கினார்.

சிங்கள நாட்டில் கமலமுனி சித்தரின் வழித்தோன்றலாகப் பிறந்தவர் சிவராஜர். இவர் தன்னுடைய தவத்தினால் சிவராஜ யோகி என அழைக்கப்பட்டார். பிரம்மாவின் அருள் பெற்ற கமலமுனி சித்தர் வழித்தோன்றலாக விளங்கியதால் பிரம்மபுத்திரராக அனைவராலும் வணங்கப்பட்டார்.

திருமூலரை மானசீக குருவாக ஏற்று அனைத்து யோகக்கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். இயற்கையை நேசிக்கும் சிவராஜ யோகி தனியாக மலையருவிப் பகுதியில் அமர்ந்து தவம் செய்தார். இவர் தவத்தில் இருக்கும் போது அருவிக்கு வரும் பெண்கள் ஆடிப் பாடி தவத்துக்கு இடையூறு செய்தால் அவர்களுக்கு சாபம் விடுவது இவரின் வழக்கமாக இருந்தது. அதனால் பெண்களை விட்டு விலகியே இருந்தார்.

ஆனால் இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோரே கண்கண்ட தெய்வம் என்பதால் அவர்களின் விருப்பப்படி மற்றொரு முனிவரான திரம்மபிந்துவின் மகளை மணம் செய்து இல்லற வாழ்க்கையையும், யோக வாழ்க்கையையும் கடைபிடித்து வந்தார். ஆனாலும் தவ வாழ்க்கையை விட முடியாமல் போகரை சந்திக்க வேண்டி சிங்கள நாட்டில் இருந்து சீன தேசத்திற்குச் சென்றார். யோகக் கலையில் சிறந்து விளங்கி சிங்கள நாட்டிலிருந்து சீன நாட்டிற்குப் புலம் பெயர்ந்ததால் 'புலத்தியர்' என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

போகரின் ஆணைக்கிணங்க வைத்தியம், ஞானம், வாதத்தைக் கற்றுக்கொள்ள அகத்தியரின் சீடராகச் சேர்ந்தார். தன் யோக ஞானத் திறமையால் அகத்தியரின் முதன்மையான மாணவராகப் புலத்தியர் விளங்கினார். பெருமாள் பாற்கடல் வண்ணனாக, திருப்பாற்கடல் நாதனாக அருளிய காட்சியைக் கண்டு பெரும்பேறு பெற்றிருந்த புலத்தியர் தற்போது சிவனின் திருக்கோலத்தைக் காண விரும்பினார். தன்னுடைய குரு அகத்தியரிடம் சிவபெருமானின் கோலத்தைக் காணத் தாங்கள் அருள் புரிய வேண்டுமென கேட்டார்.

சீடனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்த அகத்தியர் தவம் இருக்க ஆரம்பித்தார். அப்போது தன்னைக் காணக் காஞ்சிபுரத்துக்கு வருமாறும், அங்கே தான் காட்சியளிப்பதாகவும், சிவன் அசரீரியாக ஒலித்தார். மனம் மகிழ்ந்த அகத்தியரும், புலத்தியரும் காஞ்சிபுரம் நோக்கிச் சென்றனர். போகும் வழியில் ஆள் அரவமற்ற பனை மரங்கள் நிறைந்த வறண்டு போன காட்டுப்பகுதியில் ஒரு பெரிய வேப்பமரம் அவர்கள் கண்ணில் பட்டது. வேப்பமர நிழலில் ஓய்வெடுக்க அகத்தியரும், புலத்தியரும் சென்றனர். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.

சூறாவளிக் காற்று வீசியது. வேப்பமரம் குலுங்கியது. பூக்கள் உதிர்ந்து விழுந்தன. மரத்தைச் சுற்றிப் பரப்பியிருந்த மணல் காற்றில் பறந்தது. அங்கே அவர்கள் கண்ட காட்சி பிரமிக்க வைத்தது. வேப்பமரத்தின் கீழே சுயம்புலிங்கமாக ஒரு லிங்கம் தோன்றியது.

மகிழ்ச்சியடைந்த அகத்தியரும், புலத்தியரும் சிவலிங்கத்தை வணங்கியவாறே, காஞ்சியில் இறைவனின் திருக்கோலத்தை காணும் முன்னே சுயம்புலிங்கத்தை காணும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தனர். தங்கள் கண்களுக்குக் காட்சியளித்த சுயம்புலிங்கத்தை எப்படியாவது அபிஷேகம் செய்து வழிபட நினைத்தனர். ஆனால் வறண்ட காட்டில் அரிதாகக் காட்சியளித்த சுயம்புலிங்கத்தை வழிபட எதுவும் இங்கே இல்லையே என வருந்தினர். அப்பொழுது திடீரென சலசலவென நீரோடும் சத்தம் கேட்டது.

ஆம்! அவர்களின் பக்தியை மெச்சிய சிவபெருமான் தனது தலையிலுள்ள கங்கை நதியை நீரோடையாக ஓடச்செய்தார். அகத்தியர் அந்தப் புனித நீரால் லிங்கத்தை அபிஷேகம் செய்தார். சிவபெருமானுக்குப் படைக்கக் கனிகள் இல்லையே, என அகத்தியரும், புலத்தியரும் யோசித்துக்கொண்டிருந்த பொழுது பனைமரத்தின் உலர்ந்த மட்டைகள், ஓலைகள் காற்றில் உரசும் சத்தத்தைக் கேட்டனர். அவை தாளநயத்துடன் அங்குமிங்கும் அசைவதைக் கண்ட புலத்தியருக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது.

உடனே அகத்தியரை நோக்கி “குருவே! இங்கிருக்கும் மரங்களை ஆட்டினால் உதிர்ந்த பனை ஓலைகளும், பூக்களும், கனிகளும் கிடைக்கும். இவற்றை சிவனுக்குப் படைப்போம்” எனக் கூற அகத்தியரும் அதனை ஏற்றுக்கொண்டார்.

புலத்தியர் பனைமரங்களை அசைக்க ஆரம்பிக்க, தாள நயத்துடன் உலர்ந்த ஓலைகளும், பூக்களும், கனிகாய்களும் கீழே விழ ஆரம்பித்தன.

மனம் மகிழ்ந்த அகத்தியர் தன் சீடனின் சமயோஜித புத்தியைப் பாராட்டியவாறே பனை ஓலையிருந்து நாரைப் பிரித்தெடுத்து பனைப் பூக்களை மாலையாகத் தொடுத்து சிவலிங்கத்துக்கு அணிவித்தார். பனங்காய்களை சிவனுக்குப் படையல் செய்தார். அப்பொழுது மிகப் பெரிய வெளிச்சம் தோன்றியது.

அகத்தியர், புலத்தியருக்காக பனை ஓலைகளின் தாளத்தை குறிப்பிடும் விதமாக சிவபெருமான் “தாளபுரீஸ்வரராக” காட்சியளித்தார்.

சிவபெருமான் காட்சியளித்த ஊர் பனங்காட்டூர் என அழைக்கப்பட்டது. கோயிலின் தலவிருட்சமாக பனைமரம் விளங்குகிறது. சிவபெருமானின் ஜடையிலிருந்து கங்கை அருவி போல் தீர்த்தமாக வழிந்து சிவலிங்கத்தை அபிஷேகம் செய்ததால் இந்தத் தெப்பம் ஜடா கங்கைத் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

பின் அகத்தியருடன் பொதிகை மலை வந்து சேர்ந்தார். பின் தோரணமலை சென்று தேரையர் சித்தரை கண்டு ஆசிகள் வழங்கி, அங்கிருந்த மருத்துவப் பள்ளியில் அனைவருக்கும் சித்த மருத்துவத்தைக் கற்றுக் கொடுத்தார்.

தான் அகத்தியரிடமிருந்து கற்ற சித்த மருத்துவ ரகசியங்களை வைத்திய வாதம் 1000, வாத சூத்திரம் 300, ஞான சூத்திரம் 100, வாதம் 100, வழலை 13, புலத்தியர் வைத்தியம் கற்ப சூத்திரம், வைத்திய சூத்திரம், கற்பம் 300, ஞான கற்பம், தர்க்கசாஸ்திரம், வழலைச் சுருக்கம் ஆகிய நுால்களாக எழுதித் தேரையரிடம் வழங்கினார்.

தன் குருநாதர் அகத்தியரை வணங்க பாபநாசம் வந்தார். அங்கே அகத்தியர் தவமிருக்கும் இடத்திலேயே அன்பே சிவம் என உணர்ந்து தானும் தவமிருக்க ஆரம்பித்தார். பின்னர் அகத்தியரின் ஆணைப்படி புதுக்கோட்டை திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி கோயிலில் பீடம் மட்டும் இருக்கும் ஆவுடையார் முன் முக்தியடைந்தார்.

“மகேஸ்வரரே! ஞானமார்க்கத்தில் திகழ்ந்த சித்தர்களை வாதம், வைத்தியம், யோகம் என அனைத்திலும் சிறப்பு பெற வேண்டி, அவர்களுக்கு காட்சியளித்து, அருள்புரிந்ததை அறிந்து பெருமைப்படுகிறேன்.

சிவயோகத்தில் சிறந்து விளங்கிய புலத்தியர், சிலை வடிவில் தங்களை வணங்கிய நிலையில் இன்றும் பாபநாசத்தில் அகத்தியர் அருகிலேயே காட்சியளிப்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது. தங்களின் விளையாட்டு உலகின் நன்மைக்கே என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறி இருவரையும் வணங்கினார்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us