sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வீக கதைகள் -13

/

தெய்வீக கதைகள் -13

தெய்வீக கதைகள் -13

தெய்வீக கதைகள் -13


ADDED : ஜூன் 19, 2025 02:59 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 02:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

அந்த அர்ச்சகர் வழக்கம் போல் அன்றும் திகைத்தார். அவரது மனம் பதறியது. அன்றும் கிருஷ்ணர் சிலையின் காதோரத்தில் சாணம் அப்பியிருந்தது. யார் செய்கிறார்கள் இந்த அநியாயத்தை?

தினமும் இரவு கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீட்டுக்கு செல்கிறார். மறுநாள் கதவைத் திறந்து சிலையைப் பார்த்தால் கிருஷ்ணர் சிலையில் காதோரத்தில் சாணம். யாரிடம் சொல்வது இதை!

பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழைய முடியாதே!

அர்ச்சகர் அபிஷேகம் செய்தபடியே ''கிருஷ்ணா! என் மீது ஏதும் குற்றமா? தினமும் சந்தனக் காப்பு சாத்துகிறேன். காலையில் பார்த்தால் உன் காதோரத்தில் சாணம்! ஏன் இப்படி?'' என அரற்றினார்.

அபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் செய்தார். பக்தர்கள் வரத் தொடங்கினர். அதன்பின் அர்ச்சனை, ஆராதனை என வழக்கமான வேலை தொடர்ந்தது. இரவு கோயிலைப் பூட்டும்போது தான் பார்த்தார். தினமும் வரும் ஒரு பாட்டி அன்றும் வந்திருந்தாள்.

கிருஷ்ணர் சிலையைப் பார்த்தவாறே கண்ணீர் சிந்தினாள்.

அர்ச்சகர் பரிவுடன் கேட்டார், ''பாட்டி! இன்று என்ன வேண்டினாய்?''

''எனக்கென்ன வேண்ட இருக்கிறது? போகப் போற கட்டை. கிருஷ்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா! ஏராளமான பேர் அது வேண்டும் இது வேண்டும் என வேண்டுகிறார்கள். தன் கையை உயர்த்தி ஆசியளித்துக் கொண்டே இருக்கிறான். அவனது கை வலிக்காதா! இவர்கள் வேண்டுதலைக் கொஞ்சம் நிறுத்தினால் தானே அவனால் ஓய்வெடுக்க முடியும். ஏற்கனவே பாஞ்சாலிக்கு சேலை கொடுத்தான். அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டினான். புல்லாங்குழலைக் கையில் பிடித்து வாய் வலிக்க ஊதுகிறான். இதையெல்லாம் மறந்து விட்டார்களே... என் பேச்சை கிருஷ்ணன் எங்கே கேட்கப் போகிறான்? அவன் பேச்சைத் தானே கீதை என உலகமே கொண்டாடுகிறது. நான் அவனிடம் எனக்கென்று எதுவும் கேட்க மாட்டேன்''

பாட்டியின் பேச்சை ஆச்சரியமுடன் கேட்டார் அர்ச்சகர்.

கிருஷ்ணரை எவ்வளவு உண்மையாக நம்புகிறாள் இந்த ஏழை பாட்டி. ஆனால் எத்தனை ஆழமான பக்தி! என் கிருஷ்ணன் காதில் சாணத்தை அப்புகிறவன், எப்படி பக்தி செய்வது என இந்தப் பாட்டியிடம் கற்க வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்டார்.

அர்ச்சகர் கோயில் கதவைப் பூட்டினார். பாட்டி தளர்ந்த நடையோடு வீட்டுக்கு புறப்பட்டாள்.

அன்றிரவில் அர்ச்சகர் சாணத்தின் மர்மம் அறியாமல் சிந்தனை செய்தபடியே களைப்பால் துாங்கினார். கிருஷ்ணர் அவரது கனவில் தோன்றி, ''அர்ச்சகரே! உம் பக்தியில் குற்றம் இல்லை. என் காதில் இருக்கும் சாணம் நீங்கள் சாத்தும் சந்தனத்தை விட புனிதமானது. அதன் மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடையுங்கள். அப்படியே பாட்டியின் வீட்டிற்குச் சென்று பாருங்கள். பிறகு மறுபடியும் இந்த உடலுக்கே வந்து விடலாம்''

அர்ச்சகரின் உடல் கட்டையாய்க் கிடக்க, அவரது சூட்சும சரீரம் வெளியே சென்றது. பாட்டியின் வீட்டில் திறந்திருந்த ஜன்னலின் வழியாக நுழைந்த அர்ச்சகர் அங்கு நடப்பதை கவனித்தார்.

இரவில் துாங்கும் முன்பாக பாட்டி அடுப்பைச் சாணத்தால் மெழுகினாள். மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கையில் எஞ்சியிருந்தது. 'சர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என சொல்லியபடி அதை ஜன்னல் வழியே வீசி எறிந்தாள். என்ன ஆச்சரியம்! அர்ச்சகரின் சூட்சும சரீரம் தொடர்ந்த போது, அந்த சாணம் பூட்டிய கோயிலின் உள்ளே புகுந்து மூலவர் கிருஷ்ணரின் காதுகளில் போய் ஒட்டிக் கொண்டது.

நன்கு துாங்கிய அவள், அதிகாலையில் கண் விழித்தாள்.

''கிருஷ்ணா! நன்றாகத் தூங்கினாயா? நேற்று குளிர் அதிகமாக இருந்ததே. போர்வை போர்த்திக் கொண்டு தானே துாங்கினாய்?'' என சொல்லியபடியே தான் படுத்திருந்த பாயை சுருட்டினாள்.

முகத்தை கழுவிய போது. ''தண்ணீர் ஜில்லென்று இருக்கிறதே கிருஷ்ணா... உன் உடம்புக்கு ஆகாதே. வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிக்கொள்' என எண்ணியபடி வாசல் தெளிக்க தயாரானாள்.

கோலத்தில் ஒவ்வொரு புள்ளி வைக்கும் போதும் 'கிருஷ்ணா... கோபாலா... கோவிந்தா...' என திருநாமங்களைச் சொல்லியபடி புள்ளி வைத்தாள். பின் கிருஷ்ணரை வணங்கி விட்டு அன்றாட பணிகளில் ஈடுபடத் தொடங்கினாள். மீண்டும் தன் உடம்பை வந்தடைந்த அர்ச்சகர் துாக்கம் கலைந்து எழுந்தார்.

அன்றும் கோயிலுக்குப் போனார். கிருஷ்ணர் சிலையின் காதில் ஒட்டியிருந்த சாணத்தைப் பார்த்ததும் அவரது மனம் மகிழ்ந்தது. பிரசாதமாக கருதி பத்திரப்படுத்தினார். அன்று மாலை பாட்டியின் வருகைக்காக காத்திருந்தார். அவள் வரவில்லை.

அன்றிரவும் கனவில் தோன்றி, ''அர்ச்சகரே! நீங்கள் எடுத்து வந்த சாணம் உன்னதமான பிரசாதம். இனிமேல் அது கிடைக்காது'' என்றார் கிருஷ்ணர்.

''ஏன்?'' எனக் கேட்டார் அர்ச்சகர்.

''பாட்டியின் ஆன்மா என்னை வந்து சேரும் நாள் வந்து விட்டது. உடல் நலம் இல்லாததால் இன்று அவள் கோயிலுக்கு வரவில்லை. நாளை அதிகாலையில் கோயிலுக்கு வரும் முன்பாக அவள் வீட்டுக்குச் சென்றால் பல உண்மைகள் உங்களுக்கு புரியும்''

அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார். அதன் பிறகு துாங்கவில்லை. அதிகாலையிலேயே பாட்டியின் வீட்டிற்கு விரைந்தார். உறவினர்கள் வாசலில் கூடியிருந்தனர். அவர்களை விலக்கியபடி உள்ளே சென்றார். குடிசைக்குள் அவள் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவள் ஆன்மா அப்போதுதான் உடலை விட்டுப் பிரிந்திருந்தது. அந்த ஆன்மாவை அழைத்துச் செல்ல புஷ்பக விமானம் வருவது அர்ச்சகரின் கண்களுக்கு தெரிந்தது. பாட்டியின் ஆன்மா பேசியதை கேட்க முடிந்தது.

''இந்தப் புஷ்பக விமானம் ஏழைக் கிழவியான எனக்கு எதற்கு? கிருஷ்ணனை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் எனக்கு'' என்றாள் பாட்டி.

புஷ்பக விமானம் அங்கிருந்து மறைந்தது. பாட்டியைத் தேடி கிருஷ்ணரே நேரில் வந்து, ''என் தாய் அல்லவா நீ! எப்போதும் நீ சொல்வதைக் கேட்டு அதன்படி நான் நடக்க வேண்டுமே?'' என்ற கிருஷ்ணர் அந்த ஆன்மாவை இரண்டு குண்டலமாக்கி காதுகளில் அணிந்து கொண்டார். குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவருடன் பேசத் தொடங்கின.

அர்ச்சகர் வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு, அவசர அவசரமாகக் கோயிலுக்கு புறப்பட்டார். கருவறைக்குள் நுழைந்ததும் கிருஷ்ணர் சிலையை வியப்புடன் பார்த்தார். எந்த இடத்தில் சாணம் ஒட்டியிருக்குமோ அந்த இடத்தில் இப்போது அழகான குண்டலங்கள் இருந்தன. சுயநலமற்ற பாட்டியின் பக்தியை ஏற்ற கிருஷ்ணரைக் கண்டு கண்ணீர் விட்டார் அர்ச்சகர்.

-பக்தி தொடரும்

உமா பாலசுப்ரமணியன்

umakbs@gmail.com






      Dinamalar
      Follow us