ADDED : ஜூன் 19, 2025 02:58 PM

ஸ்ரீவில்லிபுத்துார் அக்கார அடிசில்
ஸ்ரீவில்லிபுத்துாரில் நந்தவனத்தில் துளசிச் செடியின் அருகில் குழந்தையாக தோன்றியவர் ஆண்டாள். கோதை நாச்சியார், ஆழ்வார்திருமகள் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இவர் அருளிச் செய்த திருப்பாவை 30 பாசுரங்களையும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் கொண்டது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் விஷ்ணுசித்தன் என்பவர் தினமும் நந்தவனத்தில் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து பெருமாளுக்குச் சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நந்தவனத்தில் இருந்த துளசித் தோட்டத்தில் பாத்தி அமைத்த போது அங்கு பூமாதேவியின் அம்சத்துடன் ஒரு குழந்தையைக் கண்டார்.
விஷ்ணுசித்தனுக்கு குழந்தைப்பேறு இல்லை. அந்த குழந்தையின் முகத்தில் தெய்வீகக் களை காணப்பட்டதை உணர்ந்து அதை துாக்கிக் கொண்டு இல்லத்திற்குச் சென்று மனைவியிடம் கொடுத்து மகிழ்ந்தார். அவரது மனைவியும் மகிழ்ந்து அப்பெண் குழந்தைக்கு 'கோதை' என பெயரிட்டு சீராட்டி பாராட்டி வளர்க்க ஆரம்பித்தார். இந்த விஷ்ணுசித்தனே பிற்காலத்தில் 'பெரியாழ்வார்' என போற்றப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் வடபெருங்கோயிலுடையான் எனும் பெயரில் வேங்கடவன் எழுந்தருளியிருந்தார். ஒரு கட்டத்தில் கோதை என்னும் ஆண்டாள் அரங்கன் மீது காதல் வயப்பட்டார். மணந்தால் அவரைத்தான் மணப்பேன் என சபதம் எடுத்தார். விஷ்ணுசித்தன் தினமும் பெருமாளுக்கு சூட்டக் கட்டி வைத்த பூமாலையை ஆண்டாள் தன் தந்தைக்குத் தெரியாமல் எடுத்து சூடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் விஷ்ணுசித்தன் முன்னதாகவே வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தது. அப்போது பெருமாளுக்குச் சூட்ட கட்டி வைத்திருக்கும் மாலையை ஆண்டாள் தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பதைப் பார்த்து கோபம் கொண்டார். ஆண்டாள் சூடிய காரணத்தால் அந்த மாலையை அன்று பெருமாளுக்கு சூட்டவில்லை. அன்றிரவு விஷ்ணுசித்தனின் கனவில் தோன்றி
“ இன்று ஏன் எமக்கு மாலை சமர்ப்பிக்கவில்லை?” எனக் கேட்டார்.
“எம் மகள் ஆண்டாள் உமக்கு சூட்ட இருந்த மாலையை எடுத்து அணிந்து அழகு பார்த்து குற்றம் இழைத்து விட்டாள். அதனால் உமக்கு சூட்டவில்லை”
“ஆண்டாள் சூடி அழகு பார்த்த மாலையையே அணிய விரும்புகிறோம். எனவே இனி ஆண்டாள் சூடிய மாலையையே எமக்கு சமர்ப்பிக்க வேண்டும்”
விஷ்ணுசித்தன் கனவில் இருந்து எழுந்தார். பிரமிப்பு அகல நீண்ட நேரமானது.
ஆண்டாள் சூடி அழகு பார்த்த மாலையை மட்டுமே அணிய விரும்புவதாகச் சொன்னதை பின்பற்றத் தொடங்கினார் விஷ்ணுசித்தன். இதன் காரணமாக ஆண்டாள் “சூடிக்கொடுத்தச் சுடர்கொடி” என பெயர் பெற்றார். இன்றும் ஆண்டாளுக்கு சூட்டிய மாலை மறுநாள் வடபெருங்கோயில் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
அக்கார அடிசில் எனும் பிரசாதம் ஆடிப்பூரம் அன்று வைணவத் தலங்களில் செய்யப்படும் ஒரு பிரசாதம். மார்கழி மாதத்தில் இப்பிரசாதம் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அக்கார வடிசில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆண்டாள் அருளிய திருப்பாவை முப்பது பாசுரங்களைக் கொண்டது. இன்றும் இது தமிழ்நாட்டில் மார்கழியில் தினமும் காலையில் நாளுக்கு ஒன்றாக பாடப்படுகிறது.
மார்கழியில் கடைபிடிக்கப்படும் பாவை நோன்பின் 27 ம் நாள் கூடாரவல்லி உற்ஸவம் நடைபெறும். 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம்' என்று மார்கழி முதல் நாளில் துவங்கும் பாவை நோன்பானது 27 ஆம் நாள் அன்று தங்கள் விருப்பம் நிறைவேறியதாக எண்ணி நெய், பால் கலந்த அக்கார அடிசிலைச் செய்வது வழக்கம். சர்க்கரைப் பொங்கல் தண்ணீரில் வேகவைக்கப்படும். ஆனால் அக்கார அடிசில் பாலில் வேக வைக்கப்பட்டு தயாரிக்கப்படும் பிரசாதம்.
பாவை நோன்பை கடைபிடித்த ஆண்டாள் ஒரு சமயம் கள்ளழகர் பெருமாளிடம் தனக்கும் அரங்கநாதருக்கும் திருமணம் செய்து வைத்தால் 100 தடா அக்கார அடிசிலும் 100 தடா வெண்ணெய்யும் நைவேத்யம் செய்து படைப்பதாக வேண்டுகிறாள்.
நாறுநறும் பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்குநான்
நுாறுதடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நுாறுதடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்று வந்திவை
கொள்ளுங்கொலோ
-நாச்சியார் திருமொழி
ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு கள்ளழகருக்கு அக்கார அடிசிலும் வெண்ணெய்யும் சமர்ப்பிக்க முடியாமல் போனது. பின்னாளில் ராமானுஜர் இதுபற்றி அறிந்து ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார். அதன்படி கூடாரைவல்லி திருநாளில் கள்ளழகருக்கு 100 தடா அக்கார அடிசிலும் 100 தடா வெண்ணெய்யும் சமர்ப்பித்து ஆண்டாளின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
இதன் பின் ஸ்ரீவில்லிபுத்துாருக்குச் சென்று ஆண்டாளை வணங்கிய போது ராமானுஜரைக் கண்டு மகிழ்ந்த ஆண்டாள் அசரீரியாக 'வாரும் என் அண்ணலே' என அழைத்தார். ஆண்டாளின் சார்பில் அவருடைய அண்ணா அக்கார அடிசில் சமர்ப்பிக்கும் சம்பிரதாயம் தற்போதும் அழகர்கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீபெரும்புதுார் தலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 200 கி
பாசிப் பருப்பு - - 50 கி
பால் - 2 லி
நெய் - 100 மி.லி
வெல்லம் - 500 கி
ஏலக்காய் - ஒரு சிட்டிகை
பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை
முந்திரி - 50 கி
திராட்சை - 50 கி
செய்முறை
அகலமான வெண்கலப் பாத்திரத்தில் நெய் விட்டு அதில் பச்சரிசி, பாசிப்பருப்பை வாசனை வரும் வரை சிவக்க வறுக்க வேண்டும். பின்னர் அதில் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பாலில் பச்சரிசியும் பாசிப்பருப்பும் நன்றாக வெந்ததும் வெல்லத்தைத் துாளாக்கி சேர்க்க வேண்டும். அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
வெல்லம், பச்சரிசி, பாசிப்பருப்பு மூன்றும் ஒன்றாகக் கலந்து பச்சை வாசனை போய் மசிய வெந்த பிறகு இறக்கி வைக்க வேண்டும். ஒரு கடாயில் மீதமுள்ள நெய்யை விட்டு அதில் முந்திரி, திராட்சையை வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி, பச்சைக்கற்பூரத்தை அக்கார அடிசிலில் இட்டு கிளற வேண்டும். இப்போது சூடான, சுவையான அக்கார அடிசில் தயார்.
- பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி
94435 20904