ADDED : ஜூன் 19, 2025 02:56 PM

ஒழுக்கமுடன் வாழ்பவர்களையே உலகம் கொண்டாடுகிறது. நாமும் அப்படி வாழ வழிகாட்டுகிறார் காஞ்சி மஹாபெரியவர்.
''ஒழுக்கம், நல்ல பண்புடன் வாழ அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அவ்வளவு சுலபத்தில் அது நடப்பதில்லை. ஒழுக்கம் ஏற்பட வேண்டும் என்றால் நற்செயல்களை மட்டும் செய்ய வேண்டும். அதற்கு ஆசாரம் (நன்னெறி), அனுஷ்டானம் (வழிபாடு)அவசியம். அதாவது அதிகாலையில் நீராடுதல், துாய ஆடை உடுத்துதல், திருநீறு, குங்குமம், திருமண் போன்ற சமயச் சின்னங்களை அணிதல் போன்றவை.
நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே ஒழுக்கமாக வாழ முடியும். ஆனால் கெட்ட எண்ணம் மனதிற்குள் புகுந்து விடுகிறது. இதை தடுக்க வேண்டுமானால் விழிப்புடன் இருக்க வேண்டும். உதாரணமாக விளையாடும் சிறுவயது குழந்தை ஓரிடத்தில் சும்மா இருக்குமா? காகிதத்தை கிழித்து வீசும். கத்திரிக்கோலால் துணிகளை இஷ்டம் போல வெட்டும். செடி, கொடிகளில் உள்ள பூக்களை பறிக்கும். இப்படி அது செய்யும் சேட்டைக்கு அளவே இருக்காது.
ஆனால் அதே குழந்தை பள்ளிக்கூடத்திற்கு போனால் சேட்டை செய்ய நேரம் இருக்குமா... 'இத்தனை மணிக்குள் பள்ளிக்கூடத்திற்கு புறப்பட வேண்டும்... குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடங்களை எழுத வேண்டும். இத்தனை மணிக்குத் தான் வீட்டுக்கு திரும்ப வேண்டும்... வந்த பிறகும் வீட்டுப்பாடம் எழுத வேண்டும்' என எத்தனையோ கட்டுப்பாடுகள்.
அத்தனையும் மறுக்காமல் ஏற்கிறது குழந்தை. ஆனால் விடுமுறை என்றால் மீண்டும் சேட்டை தலை காட்டத் தொடங்கும். அது போல எந்த நிலையிலும் ஒழுக்கக் குறைவாக செயல்படவோ, கெட்ட எண்ணத்திற்கோ நாம் இடம் தரக் கூடாது. இதற்காகவே வழிபாடு, உயிர்களின் மீது கருணை, விருந்தினர் உபசரிப்பு போன்ற தர்மங்களை எல்லாம் ஏற்படுத்தினர். இதை பின்பற்றினால் கெட்ட செயல்களில் ஈடுபட மாட்டோம். அதற்காக, 'நான் ஒழுக்கமாக வாழ்கிறேன்' என யாரும் கர்வப்படக் கூடாது.
நல்லதை செய்வதற்கான சக்தியும், அதற்கான புத்தியும் கொடுத்தது கடவுளே. அதன் பலனையும் அவருக்கே அர்ப்பணித்து வாழ்ந்தால் ஒழுக்கம் நம் இயல்பாகி விடும்' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை தீர்க்கும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யாதே.
* தெற்கு, மேற்கு நோக்கி பூஜை செய்ய வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com